மழையும் நானும்

மழையைக் குறித்தான என் அனுபவங்கள் வாழ்க்கையின் ஒவ்வொரு நிலைகளிலும் மாறிக்கொண்டே இருந்திருக்கிறது. முதலில் என் சக விளையாட்டுத் தோழனின் பார்வையிலிருந்து சிறிது மாறி கண்டிப்பான பெரிய மனித தோரணையில் என்னைக் கண்டிக்கவும் செய்தது. கூடுதலாக உங்களுக்கு ஒரு ரகசியம். மழையும் மனிதர்களைப் போலத்தான். சில சமயம் மகிழ்ச்சியுடன் இருக்கும் போது நம்மையும் சேர்த்து உற்சாகப்படுத்தும். சில சமயம் சோகமாகன சிணுங்களில் ஆரம்பித்து ஆர்ப்பரிக்கும். என் வாழ்க்கையின் முக்கியமான அனைத்து நிகழ்வுகளையும் ஞாபகப்படுத்திக் கூற பல சமயங்களில் இந்த மழை உதவி இருக்கிறது. அடர் மழைப் பொழிவில் நான் தனியாகக் கார் ஓட்டும் போது வைப்பரின் சீரான அசைவு, வாழ்க்கையின் பல ஞாபகங்களை அழிக்க முயற்சிப்பதும் மீண்டும் முகிழ்த்து நம் கண் முன்னே காட்டுவதுமாக எனக்குத் தெரியும்.
என் தனிமை குறித்து எனக்கு எந்தவிதமான சலிப்போ அல்லது வருத்தமோ ஒரு போதும் இருந்ததேயில்லை என்றாலும் என்னுடன் வளைய வரும் ஒரு தம்பியோ அல்லது என்னைக் கண்டிக்க ஒரு அண்ணனோ, குறைந்த பட்சம் அன்பு காட்ட ஒரு தங்கையோ இருந்திருந்தால் கூடுதல் மகிழ்ச்சியுடன் இருந்திருப்பேனோ என்று மனது சில சமயம் ஏங்கும். தனியாக தாழ்வாரத்துத் தூணைப் இடது கைகளால் சுற்றி வளைத்து பிடித்துக்கொண்டு வலது கையை மழையில் நீட்டும் போது ஒற்றை ஆளாகப் பிறந்த என் ரகசிய ஏக்கங்கள் படிப்படியாகக் குறைவது போல இருக்கும். இருண்ட அடுக்களையில் உழலும் அம்மாவிடம் இதைக் கூறும் போது, முந்தானையால் வேர்வையை அவசரமாகத் துடைத்துக்கொண்டே என்னுடன் வந்து மழையை ரசிக்க ஆரம்பித்துவிடுவாள். தன் உள்ளங்கையை ஒரு ஜோசியரிடம் காட்டும் போது வரும் தயக்கத்துடன் மழையிடம் நீட்டுவாள். பிறகு சிறு குழந்தையின் துள்ளலோடு தன்னை மறந்து சத்தமாகச் சிரிப்பாள். என்றாலும் அவள் கண்களின் ஓரத்தில் துளிர்த்து விழத் துடிக்கும் கண்ணீர் மழை நீரில் கரைவதை ரகசியமாக என் பார்வையிலிருந்து மறைக்கப் அதிகம் போராடுவாள்.
எங்கள் இருவரையும் பார்க்க இது வரை உறவினர் என்று கூறி யாரும் வீட்டிற்கு வந்ததேயில்லை. அப்போது எனக்கு 12 வயதிருக்கலாம். ஒரு முதியவர் எங்களைப் பார்க்க வந்திருந்தார். சற்றே பருமனான உடல் வாகு. தளர்வான நடை. காலத்தால் பழி வாங்கப்பட்ட இடுங்கிய சோகமான கண்கள். யாருடைய அனுமதிக்கும் காத்திராமல் உரிமையுடன் நடுக்கூடத்திற்கு வந்தார். தான் கொண்டு வந்த பெரிய பித்தளை தூக்கையும், எண்ணை டின்னில் செய்த மூடி போட்ட தகர டப்பாவையும் கீழை இறக்கி வைத்தார். அப்படியே கூடத்துத் தூணில் சாய்ந்தவாறு அமர்ந்தார். முதியவரைப் பார்த்த அம்மாவின் முகத்தில் நிழலாடியது. ஒன்றும் பேசவில்லை. அவரைக் கடந்து என்னை நோக்கி வந்தாள்.
“தாத்தாடா” என்ற ஒற்றைச் சொல்லுடன் அவருக்கான அவசர அறிமுகத்தை முடித்துவிட்டு எங்கேயோ பார்த்தபடி “காப்பி கொண்டு வரேன்” என்று அடுக்களைக்குள் விரைந்தாள்.
“இன்னுமா அலமு என் மேலே உள்ள கோபம் உனக்குக் குறையவே இல்லை? இனிமேலும் நீ இங்கே தனியா இவனை வெச்சிக்கிட்டு கஷ்டப்பட வேண்டாம். ரெண்டு பேரும் என்னோட அம்பைக்கு வந்திடுங்க. உன் அம்மை போய்ச் சேர்ந்த பிறகு நானும் இந்த வயசிலே நிர்கதியா தனியா அல்லல் பட்டுக்கிட்டுத்தானே இருக்கேன்?”
தள்ளாடியபடி எழுந்திருந்து அடுக்களைக்குள் நுழைந்தவர் “குழந்தைக்கு நடந்த ஒன்னும் தெரியாதே?” என்று மெதுவாகக் கேட்டார். சோகம் அப்பிய முகத்துடன் அம்மா மௌனமாகத் தலையாட்டினாள்.
“நல்ல காரியம் செய்தே அலமு. இனிமே அவன்தானே எல்லாம் உனக்கு” என்றவர் என்னைப் பார்த்து அருகில் அழைத்தார். வாஞ்சையுடன் தலையைக் கோதிக்கொடுத்துக்கொண்டே “ஏப்படிடா இருக்கே? என்று கேட்டவர் தோளில் இருந்த துண்டால் ஒரு முறை முகத்தை அழுத்தித் துடைத்துக்கொண்டார்.
ஒரு வாரம் தாத்தா எங்களுடனேயே இருந்தார். எவ்வளவோ முறை கேட்டுப்பார்த்தும் அம்மா அம்பைக்கு வர சம்மதிக்கவேயில்லை. அறுவடை முடிந்த பிறகு தாத்தா மீண்டும் வருவதாக என்னிடம் கூறினார். அவர் ஊருக்குச் சென்ற அன்று மழை விட்டுவிட்டு பெய்துகொண்டிருந்தது. எதிர்பாராமல் வானம் யாரிடமோ தோற்றது போல இடையிடையே உருமிக்கொண்டே இருந்தது.
“அடுத்த வருஷம் நீ அம்பையில்தான் படிக்கப் போறே” என்று உறுதியாகக் கூறியவர் என் கைகளை நீண்ட நேரம் விடாமல் பிடித்துகொண்டிருந்தார். அம்மா தாத்தாவிடம் குடையைக் கொடுக்க அதைப்பிடித்துக்கொண்டு லேசாக வெளியே எட்டிப்பார்த்தார். மழை லேசாகக் குறைந்தபோலத் தெரிந்தது. மீண்டும் ஒரு முறை தெருவைக் கடக்கும் போது ஏக்கத்துடன் என்னை திரும்பிப் பார்த்து கையசைத்தார். தெருவில் தேங்கிய மழை நீரில் பளிச்சென்று தெரிந்த தாத்தாவின் காலடி பிம்பங்கள் காற்றிற்கு லேசாகக் கலைந்து மீண்டும் ஒன்று கூடியது.
அடுத்த தடவை என் பள்ளி விடுமுறையை ஒட்டி தாத்தா மறுபடியும் எங்களைக் காண வந்திருந்தார். என்னை அம்பைக்கு கூட்டிச் சென்றார். அங்கு வந்தவர்கள் அம்மாவைப்பற்றித்தான் அதிகம் விசாரித்தார்கள். முதன் முதலாக நான் ஏதோ தனிமைப்பட்டது போல் உணர ஆரம்பித்தேன். தாத்தாவிற்கு உதவியாக இருந்த பெரியவர்தான் என்னைப்பற்றிய முழு விபரங்களையும் கூறினார். எனக்குக் கண்ணீர் முட்டிக்கொண்டு வந்தது. அடுத்த நாளே அம்மாவிடம் என்னைக் கொண்டுவிட அடம் பிடித்தேன். அங்கு நடந்தவைகளைப் பற்றி அம்மாவிடம் கேட்கும் தைரியம் எனக்கு வரவேயில்லை.
சில இழப்புகளுக்குக் காலம்தான் பதில் சொல்லும் என்ற கூற்றினை முழுவதும் பொய்யாக்கியபடி வருடங்கள் கடந்தது. எனக்கு நல்ல வேலை, நல்ல சம்பளம் என்றான பிறகு மனதிற்குள் ஒரு தைரியம் வந்தது.
மழையின் இரைச்சல் கூடிக்கொண்டே வந்தது. பத்தடிக்கு மேல் எதுவும் தெளிவாகத் தெரியவில்லை. சாலையேரக் கடைகளின் வாசலை நிறைத்து அறைகுறையாக நனைந்தபடி மக்கள் குழுமியிருந்தார்கள். ஒரு மணி நேரத்தில் ஆழ்வார்குறிச்சிக்கு வந்து விட்டேன். காரை விசாலமான அந்த வீட்டிற்கு முன் நிறுத்தினேன். காரிலிருந்து முன் வராண்டாவிற்குள் நுழைவதற்குள் முழுவதுமாக நனைந்து விட்டேன். அதற்குள் அவர் வெளியே வந்தார். அவரை எப்படி அழைக்கலாம் என்று நான் சிறிது தடுமாறிய போது என் தடுமாற்றத்தை கண்டறிந்தவர் போல “ஏம்பா அப்படியே நிக்கற. உள்ளே வந்து தலையை முதல்லே துவட்டிக்கோ” என்று கதவை விசாலமாகத் திறந்தார். சிறிது நேரம் மௌனமாகவே கழிந்தது.
“நீங்க பரமகல்யாணி காலேஜ் பிரபொசர்தானே?” என்ற என் கேள்விக்கு சிரித்தபடியே தலையாட்டினார். வீட்டில் அவரைத் தவிற வேறு யாரும் இல்லை. மனதிற்கு சமாதானமாக இருந்தது. ஏற்கனவே பலவருடங்கள் நான் ஒத்திகைப்பார்த்ததை நிதானமாகக் கோர்வையாக அவரிடம் கூறினேன். அமைதியாகக் கேட்டவர்
“இப்போ அலமு எப்படி இருக்கா? உன்னை எவ்வளவு பொறுப்பா வளத்திருக்கா?” என்றவர் நீண்ட நேரம் எதுவும் என்னிடம் பேசாமல் என்னையே பார்த்துகொண்டிருந்தார். “அவ என்னை விட்டுப் போகும் போது நீ ரெண்டு வயசுக் குழந்தை. நீயும் எவ்வளவு பெரியவனா வளர்ந்திட்டே” என்று என்னை பார்வையாலேயே அளந்தார். என் இருகைகளையும் இறுகப் பற்றிக்கொண்டு கண்களில் ஒற்றிக்கொண்டார். பல வருடங்கள் என் மனதை அழுத்திக்கொண்டிருந்த பாரம் குறைந்தபோல இருந்தது.
அம்மாவிடம் இதைப்பற்றி எதுவும் கூறவில்லை. இரவு முழுவதும் மழை தொடர்ந்தது. நீண்ட நேரம் அம்மா ஜன்னலையே வெறித்துப் பார்த்துக்கொண்டிருந்தாள். விடிந்ததும் மதியச் சாப்பாட்டிற்கான மெனுவை அம்மாவிடம் கூறினேன். “பாவைக்கா பிட்லே வெச்சிடு. உருளைக்கிழங்குக் கரி. மறக்காம வடகம் பொரிச்சிடு. முடிஞ்சா கொஞ்சம் கொத்தவரங்கா உசிலி. மறக்காம நெய் விட்டு சக்கரைப் பொங்கலை மறந்திடாதே.” என்றவுடன் “உனக்குத்தான் பாவக்காய் பிடிக்காதே, முள்ளங்கி சாம்பார் வெச்சிடவா” என்று கேட்டாள். “இல்லைம்மா இனிமே எனக்கும் பாவக்காய் பிடிக்கும்” என்றவுடன் எதுவும் புரியாமல் அடுக்களைக்குச் சென்றாள்.
ஒரு மணி வாக்கில் வெளியே காரின் ஹாரன் சப்தம் கேட்டது. வாசலிற்கு விரைந்தேன். காரிலிருந்து வெளியே வந்த பாலா சாரின் கண்கள் அம்மாவைத் தேடியது. “அம்மா உள்ளேதான் இருக்காங்க பாலா சார், கூட்டிக்கிட்டு வரேன்” என்றவுடன் அம்மாவே நேரில் வந்தாள். ஒன்றும் பேசவில்லை. ஒரு சிறிய சலனத்தைக் கூட முகத்தில் காண்ப்பிக்கவில்லை. பாலா சார்தான் ஆரம்பித்தார்.
“எவ்வளவு நல்லா பொறுப்பா இவனை வளத்திருக்கே அலமு. உங்க ரெண்டு பேரையும் வேணாம்னு சொன்னதுக்கு அதிகமாகவே வாழ்க்கையிலே கஷ்டப்பட்டுட்டேன். என்னை மன்னிச்சிடு அலமு” என்று சிறு பிள்ளை போல அழுதார். நடந்துகொண்டிருந்ததை துளியும் ஜீரணிக்க முடியாமல் அம்மா விக்கித்து நின்றாள். “என்ன பாலா சார், அழுகறீங்க” என்று அவரின் இரு கைகளையும் பிடித்துக்கொண்டு கூடத்திற்குள் நுழைந்தேன்.
“சாப்பாடு தயாராயிடுச்சு. ரெண்டு பேரும் வந்து உக்காருங்க. சாப்பிட்ட பிறகு எல்லாம் சாகவாசமாகப் பேசிக்கலாம்” என்று அம்மா பொதுவான அழைப்பு விடுத்தாள். பாலா சாரை ஏற்றுக்கொண்டதிற்கான அடையாள அழைப்பாகவே அதை நான் ஏற்றுக்கொண்டேன்.
தாத்தாவுடன் விடுமுறைக்கு அம்பை சென்ற போது அந்தப் பெரியவர் கூறியது மீண்டும் ஞாபகத்திற்கு வந்தது.
“உன் அம்மாவும் அலமுவும் நெருங்கிய தோழிகள். நீ பெறந்தவுடனே உன் அம்மா இறந்து போயிட்டா. அலமுக்கு அப்போ கல்யாணம் ஆகலை. பலரின் எதிர்ப்பிற்கிடையே உன்னை வளப்புப் புள்ளையா நினைச்சு வளத்தா. அலமுக்கு பல இடத்திலே வரன் பாத்தாங்க. எதுவுமே சரியா அமையலே. கடைசியிலே அம்மாகூட பள்ளிக்கூடத்தில் வேலை பாத்த பாலாதான் ஒருவழியா சம்மதிச்சான். தனக்கு ஒரு குழந்தை பிறந்தா உன்மேலே இருக்கும் அக்கரையும் அன்பும் குறையும்னு அலமு குழந்தை பெத்துக்கவேயில்லை. இதனாலே ஒவ்வொரு நாளும் வீட்டிலே சண்டை. யார் சொல்லியும் அலமு கொஞ்சம் கூட கேக்கவே இல்லை. ரொம்பப் பிடிவாதமா இருந்தா. பாலவைவிட்டுப் பிரிஞ்சு உன்னேட வீட்டைவிட்டு வெளியேறினவாதான். அப்பறம் ஒருதடவை கூட ஆழ்வார்குறிச்சி பக்கம் அவ போகவேயில்லை. பாலவும் அவளைப் பார்க்க வரவேயில்லை. இதை நினைச்சு உம் பாட்டியும் படுத்த படுக்கையாய் இருந்து இறந்துட்டடா.”

அடுத்த நாள் மூவரும் பாபநாசம் சென்றோம். பளிச்சென்று வெய்யில் அடித்தாலும் இடையிடையே மழை தூரிக்கொண்டே இருந்தது. நான் மனதிற்குள் சிரித்துக்கொண்டேன். காரின் வைப்பர் கடந்த காலங்களை ஒட்டுமொத்தமாக அழித்துவிட்டு புதிய அத்தியாயத்தை தொடர்ந்தது. அம்மா எனக்கு அம்பிகையாகத் தெரிந்தாள்.

எழுதியவர் : பிரேம பிரபா (11-May-18, 6:35 pm)
சேர்த்தது : பிரேம பிரபா
Tanglish : mazhaiyum naanum
பார்வை : 195

மேலே