கவிஞனாக ஆயத்தம்

கவிஞனாக ஆயத்தம்

மலட்டுச் சிப்பிகளின் முத்துக் கர்வமாக
அமாவாசை நிலவின் ஆதிக்க ஓளியாக
நிரந்தர சூரிய கிரகணக் கனவிலிருக்கும்
பகலில் ஜொலிக்க ஏங்கும் விண்மீன்களாக
வெண்கலம் மினுக்கும் பொன் கற்பனையாக
விண்கலமெனவெண்ணும் விட்டில் பூச்சியாக
உயிர் கொள்ள ஏங்கும் சுவற்றின் நிழலாக
வேறு எண்ணின்றியே கோடிகள் உருவாக்கக்
கனாக் கண்டு துடிக்கும் தனிப் பூச்சியங்களாக
பருந்துகளுக்கு எட்டாது வளரத் துடிக்கும்
காய்ந்து சிதையவிருக்கும் விதைகளும்
முகத்தல் அளவுகோல் மட்டும் வைத்து
புயல் வேகத்தைக் கணக்கிட்த் துடிப்பவனாக
மயில் பீலிகளை வைத்து மலைக்குள்
குகை அமைக்க ஆர்ப்பாட்டம் செய்பவனாகத்
தமிழ் வளர்த்துக் கவிஞனாக ஆயத்தம்-
இன்று புதிய அரிச்சுவடி வாங்கி வந்தேன்!!!

எழுதியவர் : திருத்தக்கன் (15-May-18, 3:25 pm)
சேர்த்தது : திருத்தக்கன்
பார்வை : 760

மேலே