அடுத்த நிறுத்தத்தில் இறைவன்
பெயரற்ற வானத்தில்
நிறுத்தமற்ற மௌனம்.
இறைவன் என்பார்கள்.
உருவத்தில் ஸ்தம்பித்த மனம்
தனித்து தோற்றது
இருப்பின் மீது நகரும் இலையாய்.
நிறங்கள் ஜோடித்த பூமியில்
கண்ணீரில் முளைத்த ஆவியுடன்
பெயரற்ற அவனை அவளை
தேடி அலைகிறேன்
காண்கின்றனர் யாவரும்
ஒவ்வொரு நிறுத்தமும் வயதை
பிடுங்கி கொண்ட காட்சியை.
அருவம் ஊமையான உருவம்.
ஒலிகளில் தப்பிக்கும்
அவனும் அவளும்
பாய்ச்சல் உருகும் காலத்தில்
தொக்கிய நம்பிக்கையில்
தென்படக்கூடுமென்று
விசனம் பீடித்த மனம்.
காட்டப்படக்கூடும்
அடுத்த நிறுத்தத்தில்
அவனும் அவளும்
அவர்கள் என்பது இல்லை
என்பதன் சாட்சி படிமமாய்.