எங்கே சென்றாய்

எங்கே சென்றாய் ?

மொழி தெரியாத இந்த
ஊரில் நான் வந்திறங்கிய
முதல் நாளில்தான் நடந்தது
நம் முதல் சந்திப்பு

அன்று எனக்கு உன்
மொழிதான் புரியவில்லை
உன் கோபப் பார்வை
நன்றாகவே புரிந்தது

ஏனோ என்னை உனக்குப்
பார்த்ததும் பிடிக்கவில்லை
எனக்கும் கூட உன்
கோபப் பார்வையால்
உன்னைப் பார்க்கவே பிடிக்கவில்லை

அன்றைய நாட்களில் தினமும்
காலை அலுவலகம் செல்கையிலும்
மாலை என் அறைக்குத் திரும்பையிலும்
உன் பார்வையிலிருந்து எப்படியாவது
தப்பிவிட விரும்புவேன்

சில நேரங்களில் மாட்டிக்கொண்டு
பயந்துகொண்டிருப்பேன்
அப்படியான ஒரு மாலையில்தான்
அந்தத் தெருக்கோடி இட்லிக்கடைப் பாட்டி
உன்னிடம் இந்தியில் எதோ சொன்னாள்
நீயும் மௌனமாய் நகர்ந்தாய்
அன்றிலிருந்துதான் நாம் நண்பர்களானோம்

அதன்பின்புதான் என்
காலை மாலை உணவுகளில்
உனக்கும் ஒரு பங்கு பழக்கமானது

இப்போதெல்லாம் என்னை
வழியனுப்பி வைப்பதும்
வரவேற்கக் காத்திருப்பதும்
உன் அன்புப் பார்வையே

அதிகாலை எழுந்து என்
அறைக்கதவு திறக்கப்படும்போது
நீ என் வாசலில் நிற்பாய்

நடுஇரவு கடந்து நான்
தூங்கச் செல்கையிலும் நீ
தூங்காமல் விழித்திருப்பாய்

தூக்கம் கலைந்த இரவுகளில்
நான் புரண்டு படுக்கும்போதும்
வெளியில் நீ விழித்திருப்பதை
உன் சப்தங்கள் மெய்பிக்கும்
அந்தக் கார்த்திகை மார்கழி
இரவுகளில் மட்டும்
காணாமல் போயிருப்பாய்!
அதன் பரிசுதான் இதோ
என் அருகே இரு குட்டிகள்

சில நேரங்களில் நான் உன்னிடம்
பேசிக்கொண்டிருக்கையில்
சிலர் சிரித்துவிட்டுச் செல்வார்கள்
வாய் மட்டுமே பேசும் என
நினைப்பவர்களுக்கு எப்படித் தெரியும்
உன் கோலிக்குண்டு கண்களும்
குட்டி வாலும்கூட பேசும் என்று

வழக்கமாய் இருப்பதுபோல்
இன்று மாலை நீ
எனக்காகக் காத்திருக்கவில்லை
இரவு நேரமாகியும் நீ
இன்னும் வீடு திரும்பவுமில்லை

உன்னைக் காணா ஏக்கத்தால்
என்னோடு உன் குட்டிகளும்
வெகுநேரமாய்த் தெருவையே
பார்த்துக்கொண்டிருக்கின்றன

காலையிலிருந்து தெருவில்
உன்னை யாருமே பார்க்கவில்லையாம்
நீ அடிக்கடி கடக்கும்
பரபரப்புச் சாலையிலும்
இன்று எந்த விபத்துமே
நடக்கவில்லையாம்

இதுபோல் இதுவரை நடந்ததுமில்லை
எங்கே சென்றாய்???
எங்களைத் தவிக்கவைத்துவிட்டு
நீ எங்கே சென்றாய்???

எழுதியவர் : செவல்குளம் செல்வராசு (19-May-18, 9:13 pm)
Tanglish : engae senraai
பார்வை : 154

மேலே