தண்டிக்கப்படுகின்ற தர்மங்கள்

உலகிற்கே உப்பளித்த ஊர்
உருக்குலைந்து கிடக்கிறது
உப்பைத்தின்ற ஒருவருக்கூடவா
நன்றியில்லை.

உதிரத்தை உப்பாக்கி
உணவிற்கு கொடுத்தார்கள்
அதைப் பெற்ற துரோகிகள்
நமக்கெதிராகவே
துப்பாக்கி எடுக்கும்
துர்ப்பாக்கியதை யார் கொடுத்தார்கள்?

ஆலைக் கழிவைவிட - அதில்
அரசியல் புரியும் ஆட்களின் மனம்தான்
ஆகப்பெரும் கழிவு.

பண முதலைகளுக்குப்
பால் வார்க்கும் தவளைகளே
தோட்டக்களால் துளைக்கப்பட்ட
தோழர்களின் இதயங்களை சற்று
அருகில் சென்று பாருங்கள் - அது
அனைவரின் நலனுக்காகத்தான்
துடித்ததென்று உங்களுக்குத் தெரியும்

காவிரி நீர் கேட்டால்
கண்ணீர் கொடுக்கும் அரசே
தமிழினம் மட்டுமல்ல - ஒட்டுமொத்த
உயிரினமே ஒரு நாள்
உங்களை அழிக்க கொட்டும் முரசே

பிரிந்து கிடைப்பதால்
நம்மை மாடுகள் என்றும்
அவர்களைச் சிங்கங்கள் என்றும்
கற்பனை செய்து கொண்டார்கள்
தன்மானமுள்ள தமிழர்களே
சிங்கங்களாய்ச் சேந்து நின்று - அந்தப்
பன்றிகளுக்குப் பாடம் புகட்டுவோம்

எழுதியவர் : விஜயகுமார் நாட்ராயன் (24-May-18, 9:03 pm)
பார்வை : 266

மேலே