168 பிறனைச் சேர்வாள் பெரும்பழி சேர்வாள் – பரத்தமை 12

அறுசீர் விருத்தம்
(மா மா காய் அரையடிக்கு)
(காய் வருமிடத்தில் விளம் வரலாம்)

கொழுந னறியில் உயிர்க்கொலையாங்
..கோவாக் கினையாம் பெரும்பழியாம்
அழல்போ னெஞ்சைச் சுடும்பயத்தோ(டு)
..அயலா டவரை யொருபேதை
தழுவி யின்ப முறல்மதமா
..தானுண் டகல்வா யிடையொழுகுங்
கழையின் சாற்றை விழைந்ததன்பாற்
..கடுகி நக்க லேய்க்குமால். 12

– பரத்தமை
மாயூரம் வேதநாயகம் பிள்ளை பாடல்

பொருளுரை:

”தீப்போல் நெஞ்சைச் சுடும் அச்சத்துடன் பிற ஆண்களை ஒரு பெண் தழுவி இன்பம் கொள்வதைக் கணவன் அறிந்தால் உயிர்க்கொலை ஏற்படும். மன்னன் அறிந்தால் கடும் தண்டனை உண்டு. உலகோர் அறிந்தால் பெரும்பழியாகும்.

மேலும், இச் செயல் மதம் கொண்ட யானை கரும்பை முறித்து மென்று தின்பதிலிருந்து ஒழுகும் சாற்றை விரும்பி அதனிடம் விரைந்து சென்று நக்குதற்குச் செல்லும் செயலுக்கு ஒப்பாகும்” என்கிறார் இப்பாடலாசிரியர்.

கோ - அரசு. மதமா - யானை. கழை - கரும்பு.

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (27-May-18, 9:23 pm)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 37

சிறந்த கட்டுரைகள்

மேலே