சீரிலா ஆடசியில்

கலிவிருத்தம்..

செங்கோல் இழந்த சீரிலா ஆட்சியில்
எங்கும் மழைவளம் இன்றியே போகும்!
தங்கா தெவருளும் தண்மையும் அமைதியும்
பொங்குவ தெல்லாம் புன்மையொடு துன்பமே!
=== ====

பொத்து வரும்புரட்சி –அன்றே
புறப்படும் நம்வளர்ச்சி;
செத்திடும் பாசிசங்கள் –புத்துயிர்
சேர்த்திடும் ஜனநாயகம்

கொத்தி எறிந்திடுவோம்- மக்கள்
குடிமை மதியாரை
எத்திப் புறந்தள்ளடா-ஊழல்
எடுத்த ஆட்சிகளை

எத்தனை நாள்பொறுப்பாய்?- இனி
இழப்பதற் கென்னிருக்கு?
சுத்தப் பேடிகளாய்- ஆட்சி
சொல்லில் நடத்திடுவார்

எத்திப் பிழைத்தகதை-இங்கே
இன்னும் நடந்திடவோ?
அத்திப் பழமோநீ- புழுக்கள்
ஆண்டுனை அழித்திடவோ?கொட்டிக் கொடுத்தவராய்-எண்ணிக்
கொண்டாடி இருந்தவர்கள்
சுட்டுக் காட்டினரே-இந்தச்
சூடுமே போதாதோ?

அலம்பி வருநீரும்- அந்த
ஆற்று மணலுமின்றி
புலம்பி நீயிருந்தால்-உன்னைப்
புள்ளென வேமதிப்பர்

சிலம்பில் வளர்ந்தவன்டா-நீயும்
சிலிர்த்து வந்திடடா!
எலும்பில் லாதவரை- இனி
இங்கிருந் தோட்டிடடா!
+++ ++++

எழுதியவர் : எசேக்கியேல் காளியப்பன் (5-Jun-18, 6:51 am)
பார்வை : 73

மேலே