என் குழந்தை

வா வா வா செல்லமே ! என் சின்னச் சிங்கார செல்லமே !
ஓர் உன்னத கணம் ஒன்றின் விடியல்...
ஈரைந்து மாதமாய்... முன்னூறு தினங்காய்...
என் தேக உயிர் அறையில்...
தமிழ் கவிதையெனும் வளர்பிறையாய்...!
அன்பால் செய்த அன்பொன்று...
பசி சொல்லி அழுகுது; சித்திரமாய் சிரிக்குது...
நித்திரையில் நிறையுது... செல்லக் குறும்புகளும் செய்யுது...
நாளாப்புறம் புரளுது....சன்னமாய் எனை உதைக்குது
என் கனவுகளில் நிறையுது...
அம்மா நான் தூங்கிடவே... கதைகள் கூட சொல்லுது !
குழந்தையாய் என் வயிற்றில் நீயும் வளர்கிறாய்...
அதே கணம்...
அம்மாவாய் உன்னுள்ளே நானும் வளர்கிறேன் !
அம்மா எனும் அந்தஸ்து அளிக்க வந்த செல்வம் நீ...
எங்கள் சந்தோஷம் பெருக்க வந்த கற்பக விருட்சம் நீ !
உன் வசந்தப் பாதங்கள் இந்த ஞாலம் தொடுகையில்...
அமிர்த உச்சத்தை உணர்வில் அடைந்தேன் என் மனக்கூட்டில் !
தெய்வத்தைக் கண்டதில்லை; உன் வடிவில் காண்கிறேன்
பூப்பூக்கும் நந்தவனம்... உன் சிரிப்பழகில் பார்க்கிறேன் !
கோடி யுகம் சேர்த்து வைத்து வரம் வாங்கி வந்தாலும்
போதாது போதாது... இரு கண் காண உன் அழகு !

எழுதியவர் : ரஞ்சினி மைந்தன் (15-Jun-18, 4:28 pm)
சேர்த்தது : ரஞ்சினி மைந்தன்
Tanglish : en kuzhanthai
பார்வை : 5456

மேலே