முடிவும் ஆரம்பமும்

யாருக்காகவோ
காத்திருப்பவன் போல் காத்திருந்தேன்
அன்று
சிலர்
என்னிடத்தில் வந்து
கூர்மையான
கத்தியினைக் கொடுத்தார்கள்
சிலர்
என்னிடத்தில் வந்து
கூர்மையான
அரிவாளினைக் கொடுத்தார்கள்
சிலர்
என்னிடத்தில் வந்து
கூர்மையானப்
பேனாக்களைக் கொடுத்தார்கள்
சிலர்
என்னிடத்தில் வந்து
தரம் வாய்ந்தத்
தூக்குக் கயிறினைக் கொடுத்தார்கள்
எனக்கு
ஒன்றும் புரியவில்லை
சுற்றி
எங்கும் பார்த்தேன்......
இரத்தங்களின் நடுவே
பலர்
சண்டையிட்டுக் கொண்டிருந்தனர்
வாடையின்
பரிசுத்தம்
மூக்கில் பாய்ந்து கொண்டிருந்தது.......
எங்கிருந்தோ
பறந்து வந்தது - அத்தலை
நெற்றியில்
திருநீற் புசப்பட்டிருந்தது
உருண்டு வந்த உடம்பின்
நெஞ்சினில்
இயேசு சிரிக்கிறார்
ஜெப மாலையில்
இரத்தக் குழியில்
தத்தளிக்கிறது
அல்லாவின் துதிகள்.....
அக்கணத்தில்.........
ஒருவன்
என்னருகில் வேகமாக வந்து
கத்தியினைப் பிடுங்கிச் சென்றான்
ஒருவன்
என்னருகில் வேகமாக வந்து
அரிவாளைப் பறித்துச் சென்றான்
ஒருவன்
என்னருகில் வேகமாக வந்து
தூக்குக் கயிறினையும்
அடித்து வாங்கிச் சென்றான்
இறுதியில்
ஒருவன்
என்னருகில் வேகமாக வந்தான்
ஏளனமாகச் சிரித்தான்.....
இவனிடத்தில்
ஒன்றும் இல்லை என்று......
மறைத்து வைத்திருந்தேன்
அந்தப் பேனாவை..................
.