தந்தை பட்ட கடன்

தந்தை பட்ட கடன்
இந்தியாவிலும், அமெரிக்காவிலும் ஒரு பிரபலமான நிறுவனத்தை நடத்தி வரும் பரமசிவம், அமெரிக்காவில் இருந்து சென்னை ஏர்போர்ட்டில் வந்து இறங்கியதும். அவரை வரவேற்க அவரது கம்பெனி இந்திய நிர்வாகிகள்,மூவர் நவ நாகரிக உடையணிந்து வரவேற்றனர்..”வெல்கம் சார்” என்று கை குலுக்கிய மூவருக்கும் நன்றி சொல்லிய பரமசிவம் அடுத்து எங்கே என்பது போல பார்க்க சார் ஹோட்டல் சோழாவுக்கு போறோம்.
ஹோட்டல் சோழாவின் அறைக்குள் நுழைந்த பரமசிவம், அவர்கள் மூவரையும் நீங்கள் போகலாம், நாராயணனை மட்டும் இரண்டு மணி நேரம் கழித்து என்னை வந்து பார்க்க சொல்லுங்கள்.சொன்னவரை ஆச்சர்யமுடன் பார்த்தார்கள் மூவரும்.நாராயணன் அறுபதை கடந்து அங்கு சாதாரண ஊழியராய் வேலை செய்பவர். அவரை பற்றி பெரிய தொழிலதிபரான இவர் பேர் சொல்லி வர சொல்லவும், அவர்கள் வியப்பும் ஆச்சர்யமும் அடைந்தனர். சார் வேணும்னா நாங்களே வர்றோம் என்றவர்களை நோ..நோ..இந்த முறை நான் வந்திருக்கறது என் சொந்த விசயமாக, அதுக்கு நாராயணன் தான் தேவைப்படுவார்.என்று சொல்லவும், அவர்கள் தயக்கத்தை புரிந்தவர் போல நாராயணன் என்னோட அப்பாவின் நண்பர் மகன், என்று சொல்லி புரிய வைத்தார்.
உள்ளே வந்த நாராயணன் அங்கிருந்த அமைப்பை பார்த்து அதிசயித்தது மட்டுமில்லாமல் பரமசிவத்தை பார்த்து “பரமசிவம் பெரிய ஆளாயிட்டப்பா” என்று சொல்லிவிட்டு ஐயோ இவர் நம்முடைய முதலாளி ஆயிற்றே என்று மன்னிப்பு கேட்பது போல முகத்தை வைத்துக்கொண்டார். பாரமசிவம் நாராயணனின் தோளை தட்டி நல்லாயிருக்கண்ணேன், என்று சொல்லி விட்டு நான் இன்னைக்கு முக்கியமான ஒரு வேலைக்கு வந்திருக்கேன், அதைப்பத்தி இப்ப பேசணும், என்று தயங்கிய அவரை சோபாவில் உட்காரவைத்து பேச ஆரம்பித்தார்.
இரண்டு நாட்கள் கழிந்த மறு நாள் ஒரு மாலைப்பொழுதில் அதே ஹோட்டல் சோழாவில் சுமார் நூறு பேர் பரமசிவத்தின் விருந்தாளிகளாக அந்த ஹோட்டலுக்கு அழைக்கப்பட்டு வரவேற்பறையில் உட்கார வைக்கப்பட்டிருந்தனர். ஒருவருக்கும் எதற்கு வந்திருக்கிறோம் என்று புரியவில்லை. யாரோ ஒரு பெரிய மனிதர் அந்த காலத்தில் நாடகத்தில் நடித்த நடிகர்களின் வாரிசுகளுக்கு பரிசு கொடுக்க வரச்சொல்லியிருக்கிறார் என்று சொல்லி வரவேற்கப்பட்டிருந்தார்கள்.
சற்று நேரத்தில் நாராயணனுடன் வந்த பரமசிவம் “வணக்கம்” உங்களை எதுக்கு வச்சொல்லியிருக்கோம் அப்படீன்னு யோசனையாக இருப்பீங்கன்னு நினைக்கிறேன். உங்களுக்கு தெரியுமா அப்படீன்னு எனக்கு தெரியாது, உங்க எல்லாருக்குமே என் குடும்பம் கடன் பட்டிருக்குது. அந்த கடனை தீர்க்கறதுக்குத்தான் இப்ப உங்களை நான் வர சொல்லி இருக்கேன்.உங்க அப்பாமார்கள், அம்மாமார்கள், எல்லாம் ஒரு காலத்தில என் அப்பாவோட நாடக கம்பெனியில வேலை செஞ்சுகிட்டு இருந்தாங்க.சொல்ல ஆரம்பித்தார்…….
மேடையில் போடப்பட்டிருந்த படுதா ஓட்டை வழியாக பார்வையாளர் அரங்கை பார்த்த பாவண்ணனுக்கு நிறைய நாற்காலிகள் காலியாக இருப்பதை கண்டவுடன் மனது துவண்டு விட்டது. பெருமூச்சு விட்டார். இன்றைய செலவுகளுக்காவது கட்டுப்படியாகுமா என்று தெரியவில்லை.சட்டென மீண்டவர் “ராமையா” அந்த பாபு எங்க? என்று கேட்க, படுதாவ தூக்கறதுக்கு ஏற்பாடு செய்ய போயிருக்கான்.
சரி சரி இந்த சீன்ல யார் யார் வரணும்னு முடிவு பண்ணி எல்லாம் ரெடியா இருங்க “பெல் அடிச்சு” படுதாவ துக்கும்போது இயல்பா நடக்கறமாதிரி இருக்கணும், நாடகமாகவே தெரியக்கூடாது. குரலில் சோர்வை மீறிய கண்டிப்பு.”சரிங்கண்ணே” ராமையா தலையாட்டி விட்டு அந்த காட்சிகளுக்கான பிரதிகளை கையில் உள்ள அட்டையில் சொருகிக்கொண்டு அரங்கத்தின் உள் புறம் சென்றார்.
பெல் அடித்தவுடன் மேடையில் இருந்த படுதா தூக்கப்பட்டு நாடக கதாபாத்திரங்களாக நடிப்பவர்கள் நடித்துக்கொண்டிருக்க, பாவண்ணன் கூட்டம் குறைவாக வந்துள்ள கவலையும் மறந்து மேடையில் நடிப்பவர்களின் நடிப்புக்களையும், வசன உச்சரிப்புக்களையும் கவனிக்க ஆரம்பித்தார்.
“அண்ணே அண்ணே” கிசு கிசு குரலில் அழைப்பை கேட்டு இவர்களின் நடிப்பை இரசித்துக்கொண்டிருந்த பாவண்ணன், திரும்பி பார்க்க பதட்டத்துடன் ராமையா நின்று கொண்டிருந்தார். என்ன ராமையா? என்று கண்களால் கேள்வி எழுப்ப புருவத்தை தூக்கினார். பஷ்பா அடுத்த சீனுக்கு நடிக்க வரமாட்டேன்னு அடம் பிடிக்குது. இவர் சலிப்புடன் என்னவாம்மா? அந்த பெண்ணுக்கு? இல்லே இரண்டு மாசமா சம்பளம் பாக்கி இருக்குது, அதை செட்டில் பண்ணுனா அடுத்த சீனுக்கு உள்ளே வரேன்னு சொல்றா.
இவருக்கு எரிச்சலாக வந்தது.இரண்டு மாதங்களாக சரியான கூட்டமில்லை,கலெக்சனும் கம்மியாகத்தான் வருகிறது. யாருக்குமே இரண்டு மாதமாக சம்பளம் கொடுக்க முடியவில்லை. வரும் பணம் இவர்களுக்கு சாப்பாட்டு செலவுக்கும், பயண செலவுகளுக்கும் சரியாக போய் விடுகிறது. இந்த புஷ்பா சரியான நேரத்தில் கழுத்தை அறுக்கிறாள். வேகமாக எழுந்தவர் சற்று தடுமாறினார். “வயதாகிறது” முணு முணுத்துக்கொண்டே புஷ்பாவை பார்க்க உள்ளே நுழைந்தார்.
எந்த வித அசைவும் இன்றி உட்கார்ந்திருந்த புஷ்பா இவர் உள்ளே வந்தவுடன் சற்று மரியாதை காட்ட வேண்டி எழுவது போல் பாவனை செய்தாள். இவர் நேராக சென்று அவள் முகத்தை உற்று பார்த்தார். இவரின் பார்வைக்கு சற்று சலனம் காட்டியவள்,மீண்டும் தன்னை இறுக்கிக்கொண்டு, முகத்தை திருப்பினாள்.
“இப்ப என்ன பண்ணனும்கறே? குரலில் சற்று காரத்தை ஏற்றி கேட்டார் பாவண்ணன். இப்பொழுது முகத்தை நேராக திருப்பி முதலாளீ எனக்கு சம்பளம் வேணும்,என் புள்ளைங்க பட்டினியா இருக்கறாங்க, நான் இங்க எப்படி வேணா இருந்துக்குவேன், ஆனா அங்க என் குழந்தைங்க எல்லாம் பட்டினியா இருக்கறாங்க, அவளின் குரல் வேகமாக ஆரம்பித்து அழுகையில் முடிந்தது.
பிரமை பிடித்த்து போலானார் பாவண்ணன், நான் ஏன் இதை யோசிக்காமல் போனேன். இந்த புஷ்பா சிறு வயதில் என் குழுவுக்கு வந்தவள், அவளுக்கு கல்யாணம் பண்ணி வைத்து இரண்டு குழந்தை ஆனவுடன், அவள் புருசன் யாருடனோ ஓடி போய் விட்டான். அப்படியும் அவள் மனம் தளராமல் தன்னுடைய குழந்தைகளை தன் பாட்டியிடம் ஒப்படைத்துவிட்டு என்னோடு ஊர் ஊராய் பயணம் வருகிறாளே, இதை யோசித்து பார்க்க மறந்ததற்கு தன்னையே நொந்து கொண்டவர், சரி இந்தா என்று தன் மோதிரத்தை கழட்டி அவள் கையில் கொடுத்தவர் இப்ப இதை வச்சுக்க, மத்ததெல்லாம் அப்புறம் பேசலாம், கிளம்பு என்று அவசரப்படுத்தினார்.
ஒரு நிமிடம் தயங்கியவள், ஏதோ முடி செய்தவள் போல்,மோதிரத்தை வாங்கி தன் இடுப்பில் சொருகிக்கொண்டு வேகமாக அடுத்த காட்சிக்கு தயாராக ஒப்பனை அறைக்குள் நுழைந்தாள்.
மீண்டும் தன் இருக்கைக்கு வந்து உட்கார்ந்த பாவண்ணனுக்கு உடல் பட படப்பாய் இருந்தது. எனக்குத்தான் யாருமே இல்லை ! மனைவி இந்த நாடகம் எல்லாம் வேணாம் வந்து விவசாயத்தை பாருங்க என்று தலையாய் அடித்துக்கொண்டிருந்தாள். அவள் பேச்சை கேட்காமல் இப்படி கலை பித்து பிடித்து ஊர் ஊராய் அலைந்து நாடகம் போடுகிறேன் என்று இருந்த நில புலங்களை எல்லாம் விற்று இத்தனை வருடங்கள் ஊர் ஊராய் சென்று நாடகங்கள் போட்டு என்ன பயன் அடைந்திருக்கிறோம். இதுவரை என்னுடன் இருந்தவர்களுக்கு ஒழுங்காய் சம்பளம் கூட கொடுக்க வழியில்லாமல்தான் போயிருக்கிறது. அந்த துயரத்திலும் சிரிப்பு வந்தது அவருக்கு, நல்ல வேளை எனக்கு வந்த ஒரே ஒரு வாரிசு, அம்மாவின் பேச்சை கேட்டு யார் யார் கையை காலை பிடித்து படிக்க போய் விட்டான். அவனையாவது போய் பார்த்திருப்போமா? நாடகம், நாடகம் என்று அலைந்து அவனையும், இதுவரை சந்திக்காமல் போய் விட்டோம். நல்ல வேளை அவனை சந்தித்திருந்தால் என்னைப்போல ஆகியிருப்பான், வேண்டாம், எங்கிருந்தாலும் நன்றாய் இருக்கட்டும்.
நாடகம் முடிந்து பதினைந்து நிமிடங்கள் ஆகியும் பாவண்ணன் அந்த இடத்தை விட்டு எழாமல் இருந்தது, பலருக்கு ஆச்சர்யமாக இருந்தது. அன்றைய மன நிலையில் யாரும் அவரிடம் போய் பேச பயந்து கொண்டிருந்தார்கள். ராமையா மெல்ல அவர் அருகில் சென்று “அண்ணே” என்று அழைத்தார். எந்த பதிலும் தராமல் கண்ணை மூடி உட்கார்ந்திருந்த பாவண்ணனை பார்த்த ராமையாவிற்கு ஏதோ சந்தேகம் தோன்ற அவர் தோளை தொட அவர் தலை அதற்காகவே காத்திருந்தது போல கவிழ்ந்தது. ஐயோ அண்ணன் நம்மை விட்டு போயிட்டாரு என்று பெருங்குரல் எடுத்து கதறினார் ராமையா.
முடிந்தவரை இருந்த பொருட்கள் எல்லாவற்றையும் விற்று கிடைத்த பணத்தை அனைவருக்கும் பிரித்து கொடுத்த ராமையா தன் கையில் எதுவுமில்லாமல் ஊர் வந்து சேர்ந்தார். ஓரளவு விவரம் வந்து சம்பாதித்துக்கொண்டிருந்த மகனிடம் “எப்படியாவது பாவண்ணன் மகனிடம், அவர் இறந்து விட்டதை சொல்லிவிடு, என்று சொன்னவர் நான்கைந்து மாதங்களில் மறைந்து விட்டார்.
அப்பொழுது பள்ளி இறுதி வகுப்பு படித்துக்கொண்டிருந்த என்னை எப்படியோ கண்டு பிடித்து அப்பா பட்ட துயரங்களையும், அவருக்காக உங்கள் பெற்றோர்கள், பட்ட துன்பத்தையும் சொன்னவர் இந்த நாராயணன் அண்ணன்.அப்பொழுது நான் ஒரு முடிவு எடுத்தேன். என் காலம் முடிவதற்குள் அப்பா பட்ட கடனை எப்படியாவது அடைத்து விடுவது என்று. அதற்கான காலமும் நேரமும் இப்பொழுது வந்துள்ளது. உங்கள் அனைவருக்கும் அன்று என் அப்பா பட்ட கடனுக்காக தலா ஐம்பாதியிரமும், உங்கள் குடும்பம் பட்ட சிரமத்திற்கு, மேலும் இருபத்தி ஐந்தாயிரம் எனவும் மொத்தம் எழுபத்தி ஐந்தாயிரம் ரூபாய் கொடுக்கிறேன், கேட்டுக்கொண்டிருந்த கூட்டம் வியப்புடனும், ஆனந்த அதிர்ச்சியுடனும் திகைத்து நின்று விட்டது..
நாராயணனிடம் நாளை கிளம்புவதாக சொன்ன பரமசிவம் “நீங்க மட்டும் ஏன் பணத்தை வாங்கிக்க மாட்டேன்னுட்டீங்க? என்று வினவ, தம்பி பணத்தை கொடுத்து என்னையும், கடனையும் கழிச்ச மத்தவங்க மாதிரி விட்டுடலாமுன்னு நினைச்சியா?
கேட்ட அவரை அணைத்துக்கொண்டு அண்ணே எங்கப்பாவுக்கு எப்படி ராமையாவோ அது மாதிரி நீங்க எனக்கு கிடைச்சிருக்கீங்க, இன்னைக்கு இராத்திரி நான் உங்க குடும்பத்தோட தங்கிட்டு நாளைக்கு கிளம்பறேன்.
தம்பி உன் வசதிக்கு என் வீடு செளகரியப்படுமா?
நான் ஊர் ஊரா அலைஞ்சிட்டிருந்த பாவண்ணன் பையன் அப்படீங்கறதை இன்னும் மறக்கலை.

எழுதியவர் : தாமோதரன்.ஸ்ரீ (6-Jul-18, 9:56 am)
சேர்த்தது : தாமோதரன்ஸ்ரீ
பார்வை : 239

மேலே