நெருப்பு நொடிகள்-4

மோனா தன் காதலை ஏற்றுக்கொள்ளவில்லை எனும்போதும், காதலின் அழகிய உணர்வுகளை இழக்க மார்டின் விரும்பவில்லை. நண்பர்களிடம் மோனாவின் பதிலுக்காக காத்திருப்பதாய் ஒரு மாயையை உருவாக்கிவிட்டு என்றும்போல் அவளை தூர இருந்து ரசித்துக்கொண்டிருந்தான் மார்டின்.

*************************************************************************

நினைவுகளின் அழுத்தம் தாளாமல் மோனாவின் விழிகள் ஈரம் கசிந்தன. உடல்நலம் சரியில்லாத காரணத்தால் மென்மலர் வரமுடியாமல் போனது மோனாவின் வருத்தத்தை மேலும் அதிகரித்தது. நிகழ்ச்சி துவங்க சிலமணித்துளிகளே எஞ்சியிருந்த நிலையில், அனைவரும் காமராஜர் அரங்கம் நோக்கி செல்லத்துவங்கினர். அது கல்லூரி வளாகத்தின் உள்ளே விளையாட்டுத்திடலை ஒட்டி இருந்தது. ப்ரியா, மோனாவை தன்னோடு அழைத்துக்கொண்டு சென்றாள். அரங்கத்தின் நுழைவாயிலில் வரிசையாய் நின்ற முதல் வருட மாணவர்கள், தங்கள் கல்லூரியின் முன்னாள் மாணவர்களுக்கு ஒவ்வொரு ரோஜாவை பரிசளித்தனர். டீனா ஒரு சிவப்பு ரோஜாவை பெற்றுக்கொண்டாள். ப்ரியாவுக்கு ஆரஞ்சு வண்ண ரோஜா கிட்டியது. அதை ரசித்துக்கொண்டே மோனாவும் அவர்களுடன் உள்ளே சென்றாள். அனைவரும் ஒரே வரிசையில் அமர்ந்திருந்தனர்.

இறைவணக்கத்துடன் நிகழ்ச்சி துவங்கிற்று. இரண்டாம் வருட இயற்பியல் துறை மாணவி தென்றல், காலில் சலங்கைகளோடு பரதம் அரங்கேற்றினாள். அதைத் தொடர்ந்து கலைவாணன் சிறப்புரையாற்ற வந்தார். தன் முன் அமர்ந்திருந்த முன்னாள் மாணவர்களுக்கு அவர் முதலில் இயற்பியல் பேராசிரியராக இருந்ததாகவும், மாணவர்களின் தேர்வு முடிவுகளும், செயல் திறனும் தன்னை கல்லூரி முதல்வராக பணிஉயர்வு பெற வைத்ததாகவும் கூறிய போது, அவர் கண்கள் பனித்திருந்தன. அவர் உரையாற்றி முடித்ததும் நிகழ்ச்சி தொகுப்பாளர்கள் ஷாலினியும், அருணும் மேடையேறினார்கள்.

"நிறைய உணர்ச்சிமிக்க தருணங்களையும், நிறைய நினைவுகளையும் கடந்துவிட்டு களைப்புடன் இருப்பீர்கள்", அருண் மைக் பிடித்து பேசினான்.

"உங்களை மகிழ்விக்க நீங்கள் எதிர்பார்த்து காத்திருந்த கலைநிகழ்ச்சிகள் துவங்கப்போகின்றன", அவனுக்கு இசைப்பாட்டு பாடினாள் ஷாலினி.

"ஒரு நிமிஷம் ஷாலினி.. கலைநிகழ்ச்சியில் பங்கெடுக்கும் முன் நம் அண்ணாக்களும் அக்காக்களும் ஒரு சின்ன உதவி செய்ய வேண்டுமே!", பொடிவைத்து பேசினான் அருண்.

ஆம்! நீங்கள் பங்குகொள்ள சில விளையாட்டுகள் ஏற்பாடு செய்துள்ளோம். அதன் பொருட்டு அனைவரையும் சிறு குழுக்களாக பிரிக்க போகிறோம்.

இதை கேட்டதும் சத்தமாய் புலம்பினர் மாணவர்கள். அவர்களை சமாதானப்படுத்த முயன்ற அருண் "கவலை வேண்டாம்! இது தற்காலிக அமைப்பு மட்டுமே!", என்றான். "விளையாட்டுகள் முடிந்ததும் இடம் மாறிக் கொள்ளலாம்", என்று அவனுக்கு இசைந்து பேசினாள் ஷாலினி. சில நொடிகள் சலசலப்பிற்கு பின் அனைவரும் சம்மதம் தெரிவித்தனர்.

"ஐயோ! இத்தனை நாள் கழிச்சு ஒண்ணா இருக்க வந்தா..", டீனா தனக்குத்தானே பேசிக்கொண்டாள்.

"இத்தனை பேரையும் எப்படி பிரிக்க போறாங்க??", சத்யா சத்தமாய் குழம்பினான்.

அவன் குழப்பத்திற்கான பதிலை அருண் சொல்லத் தொடங்கினான். "சிவப்பு நிற ரோஜாவை வைத்திருப்பவர்கள் அரங்கத்தின் இடது பக்கம் வந்து அமரவும்", மேடையில் அறிவிப்பு வெளியானது. சத்யாவும் டீனாவும் ஒருவரை ஒருவர் பார்த்து நொந்துகொண்டனர். "இது தெரிஞ்சிருந்தா அப்பவே ஒரே கலர் ரோஸ் எடுத்திருக்கலாமே", ப்ரியா கடிந்து கொண்டாள். டீனாவுக்கு சின்ன ஆறுதலாய் சத்யாவும் சிவப்பு ரோஜாவை பெற்றிருந்தான். அவர்கள் இருவரும் அரங்கத்தின் இடதுபுறத்திற்கு மாறிச்சென்றனர். ப்ரியா ஆரஞ்சு நிற ரோஜாவுடன் அரங்கத்தின் நடுவே இருந்த குழுவுடன் சேர்ந்துகொண்டாள். மோனாவின் மஞ்சள் நிற ரோஜா அவளை அரங்கத்தின் பின்பக்கம் நின்றிருந்த குழுவிற்கு அனுப்பியது.

போட்டிகள் ஒவ்வொன்றாய் துவங்கின. ஆரம்பத்தில் நண்பர்களை பிரிந்துவிட்டோமே என்று நொந்துகொண்டிருந்த மாணவர்கள் இப்போது போட்டிகளில் அந்த நண்பர்களை எதிர்த்தே கலகலப்பாய் விளையாடிக்கொண்டிருந்தனர். போட்டியில் தீவிரமாய் இயங்கிக்கொண்டிருந்த மாணவர்களை கண்டு கலைவாணன் சிரித்து மகிழ்ந்தார். டீனாவின் கணிதவியல் பேராசிரியை ஜோதி, அவளை கண்டு முறைக்காத நாளில்லை. ஆனால் அன்று அவள் ஜோதியின் அழகிய புன்னகையை எதிர்கொள்ள நேர்ந்தது. ஆரஞ்சு நிற ரோஜாக்களை கொண்ட குழு போட்டிகளில் முதன்மை வகித்து கொண்டிருந்த நேரம் அருண் மீண்டும் மைக் பிடித்தான்.

"பிரெண்ட்ஸ்! விளையாட்டு போட்டிகள் மிகுந்த உற்சாகத்துடன் நிறைவடைந்துள்ளது. ஒரு சின்ன பிரேக் எடுத்துக்கொண்டு மீண்டும் இணையலாம்". "இப்போது அரங்கிற்கு வெளியே டீயும் கேக்கும் வழங்கப்படும்", ஷாலினி அறிவித்தாள்.

அனைவரும் வியர்க்க விறுவிறுக்க அவரவர் நண்பர்களை தேடிச்சென்றனர். டீனாவும் சத்யாவும், ப்ரியாவை கையசைத்து அழைத்தனர். அவள் வந்ததும் "சத்யா! நீ கேக் சாப்பிட்டுட்டு இரு. நாங்க ரெஸ்ட்ரூம் போயிட்டு வரோம்", டீனா ப்ரியாவை அழைத்துக்கொண்டு செல்ல தயாரானாள். அவர்களை தடுத்த சத்யா, மோனா எங்கே என கேட்டான். அப்போது தான் அவள் தங்களுடன் இல்லையென்பதை உணர்ந்தாள் டீனா. மோனாவின் முகம் எங்காவது தென்படுகிறதா என ப்ரியா தேடத்துவங்கினாள். அப்போது திடீரென தீ எச்சரிக்கை மணி ஒலிக்கும் சத்தம் கேட்டது.

அச்சம் கொண்ட அனைவரும் ஆங்காங்கே தெறித்து ஓடத் தொடங்கினர். பதற்றம் கொள்ளாமல் பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறு அருண் மேடையில் அறிவித்துக்கொண்டிருந்தான்.

"எனக்கு எல்லாமே அன்றைக்கு நடந்தது மாதிரியே இருக்கு டீனா..", ப்ரியா நடுக்கத்துடன் சொன்னாள்.

கூட்டத்தில் சிக்கித்திணறி மோனாவை தேடிக்கொண்டிருந்த டீனா, மார்டினுக்கு நிகழ்ந்ததை நினைவில்கொண்டு ப்ரியா கூறியதை கேட்டு ஒருகணம் அசைவின்றி நின்றாள். பின் திடீரென ஏதோ தோன்றியவளாய் படபடவென பேசினாள்.

"நம்ம இப்போ எங்க போகணும்னு எனக்கு தெரியும். என்கூட வாங்க", சத்யாவையும் ப்ரியாவையும் அழைத்துக்கொண்டு வேதியியல் ஆய்வகம் நோக்கி ஓடினாள் டீனா. அவர்கள் அந்த இடத்தை அடைந்தபோது அங்கிருந்து தான் தீ எச்சரிக்கை வந்திருக்கவேண்டும் என்பது தெளிவாய் தெரிந்தது. ஆய்வகத்தின் கதவுகள் சாத்தியிருந்தது. ஆனால் உள்ளே இருந்து அடர்ந்த புகை வெளிவந்து கொண்டிருந்தது. அதிர்ச்சியில் ஒருவரை ஒருவர் பார்த்துக்கொண்டு நின்றபோது, உள்ளே இருந்து காப்பாத்துங்க காப்பாத்துங்க என்று யாரோ அழும் சத்தம் கேட்டது.

"உள்ளே யாரோ.. உள்ளே..", ப்ரியா பதைபதைத்தாள்.

"அது மோனாவின் குரல்", டீனா தலையைப்பிடித்து கொண்டு கத்தினாள்.

மூவரும் கதவை ஓங்கி அடித்தனர். ஒன்றிரண்டு நிமிடங்களில் கதவு திறந்தது. குரல் வந்த திசையில் ஓடிய சத்யா உள்ளே இருக்கும் ஆசிரியர் ஓய்வறையிலிருந்து சத்தம் வருவதை கணித்தான். அருகே சென்றபோது அவ்வறை நெருப்பு பிழம்புகளால் சூழப்பட்டு இருந்தது. "மோனா! மோனா.. உள்ளே இருக்கியா?", ப்ரியா பதற்றத்துடன் வினவினாள்.

"என்னை காப்பாத்துங்க..", மோனா உள்ளே இருந்து முனகினாள்.

சுற்றும் முற்றும் பார்த்த சத்யா சுவற்றில் சாற்றி வைக்கப்பட்டிருந்த ஒரு மரப்பலகையை தூக்கிக்கொண்டு வந்தான். ஓய்வறையின் வாயிலை அடைத்தபடி பலகையை ஏந்திக்கொண்டு உள்ளே சென்றான். டீனாவும் ப்ரியாவும் ஓடிச்சென்று மோனாவை தூக்கி அமர்த்தினர். பயத்தில் உறைந்து போயிருந்த அவளை ஆசுவாசப்படுத்த முயன்றாள் ப்ரியா.

"மோனா! நீ எப்படி இங்கே வந்த?", டீனா கேட்டாள்.

தெரியலை டீனா.. நான் பாத்ரூம் போறதுக்காக அரங்கைவிட்டு வெளியே வந்தேன். அப்புறம் நடந்தது ஒன்னும் எனக்கு நினைவில்லை.

ஒன்றுமே ஞாபகம் இல்லையா?

"இல்லை.. நான் கண்திறந்தப்போ என்னை சுத்தி நெருப்பு இருந்துச்சு; என்னை காப்பாத்து", அழுது முகம் வீங்கியிருந்தது மோனாவுக்கு.

சத்யா துரிதமாய் செயல்பட்டு ஓய்வறையின் மூலையில் இருந்த குழாயில் வாளி வைத்து தண்ணீர் பிடித்தான். அதை அறையை சுற்றி வீசி ஊற்றினான். ஆனால் நெருப்பின் வீரியம் குறைந்தபாடில்லை. "இங்கே இருந்து உடனே வெளியே போகணும், ரசாயனங்கள் இருக்குற இடத்தில தீ பரவினால் நம்ம யாரும் தப்ப முடியாது", வாயில் கதவை நோக்கி அனைவரையும் அழைத்துக்கொண்டு ஓடினான் சத்யா. அவர்கள் வாசலை எட்டியபோது அதுவரை திறந்திருந்த கதவு படாரென மூடிக்கொண்டது.

"என்ன நடக்குது இங்கே?", ப்ரியா அலறினாள்.

எவ்வளவோ முயன்றும் சத்யாவால் கதவை திறக்க முடியவில்லை. "சத்யா என்ன ஆச்சு? கதவு எப்படி தானா மூடும்", டீனா சத்யாவின் சட்டையை பிடித்து உலுக்கினாள். அவன் செய்வதறியாது உறைந்து நின்றான். இவர்கள் படும்பாட்டை பார்த்த மோனா தரையில் மண்டியிட்டு அழத்தொடங்கினாள். பதற்றமும், பயமும் நால்வரையும் சூழ்ந்துகொண்டு சூறையாடின. கண்கள் குளமாகி பார்வை தடைபட்ட மோனா இடதுபுறமிருந்த ஜன்னல் கதவுகளை உற்றுப்பார்த்தாள். அதில் இரத்தக்கறைப்படிந்த கைத்தடம் இருந்தது. அதன் ஈரம் காயாமல் ஜன்னலின் விளிம்பு வரை இரத்தம் சொட்டிக்கொண்டு இருந்தது.

அதைக்கண்ட மோனா மூச்சுவிட முடியாமல் நிலைதடுமாறி சரிந்தாள். ப்ரியா அவள் தலையை தூக்கி தன் மடிமீது வைத்துக்கொண்டு அவளை எழுப்பமுயன்றாள். கண்விழித்த மோனா சத்தமாய் கதறினாள்.

"எல்லாரும் இங்கே இருந்து போயிடுங்க.. உங்க உயிரை காப்பாத்திக்கோங்க.."

"மோனா.. பயப்படாதே.. இங்கே இருந்து போயிடலாம்", டீனா அவளை தேற்ற முயற்சித்தாள். டீனாவின் கைகளை தட்டிவிட்ட மோனா மீண்டும் கதறினாள். "இங்கே இருந்து போயிடுங்க.. அவன் என்னை பழிவாங்காம விட மாட்டான்.. அவனுக்கு நான் தான் வேணும். நீங்க தப்பிச்சு போங்க".

மோனா கூறியதைக்கேட்ட மற்ற மூவரும் அதிர்ச்சியோடு அவளை உற்றுநோக்கினர். "மோனா.. நீ என்ன பேசுற?", டீனா அவள் முன் அகன்ற விழிகளோடு நின்றிருந்தாள்.

"ஆமா.. அது மார்டின்.. அவன் சாவுக்கு நான் தான் காரணம்.."

தொடரும்...

எழுதியவர் : மது (13-Jul-18, 5:00 pm)
பார்வை : 1614

மேலே