தேடலும் தேடல் நிமித்தமும்

விடியலை மட்டுமே தேடித்தேடி
விரைந்திட்ட எம்மக்கள் இன்று
விடைகளறியாக் காரிருளில் மூழ்கித் தவித்தபடி...
உயிர்க் காற்றினை நாடிச்சென்று
உதிரம் சிந்தி உடமைகள் தொலைத்து
உறைந்த நிலையில் அமைதியைத் தேடியபடி...
உறவுகளின் பிரிவால் வேதனைபெற்று
உறக்கத்தின் பிடியில் தன்நிலை மறந்து
உருண்டோடிச் செல்கிறது எங்களின் வாழ்க்கை...
தொடர்ந்து துரத்தும் தொடுவானம்
தொல்லைகள் என்று தொலைவில் போக
தொடங்கியது மீண்டும் சில துயரங்கள்...
தொட்டுவிட்ட கடற்பரப்பை விட்டுவிட மனமின்றி
தொற்றுநோயாய் பற்றிக்கொண்ட அலைகளின் ஈரமாய்
தொற்றிக்கொள்கிறது எங்களது நிராசைகள்...
மாலையிட்ட மங்கைதம் மனம் உடைந்து
மாடத்தினில் பாடம் கற்கும் மாணவியாக
மாதவிபெற்ற சாபமாய் மணாளனின் விடுமுறை நாட்கள்...
மெல்லவிரியும் பிஞ்சு விரல்களைப் பற்றிட
மெல்லிய குரலில் கொஞ்சுமொழி கேட்க
மெதுவாகச் சிலிர்த்தபடி எங்களது தேகம்...
தோள்களில் சுமந்த தந்தைக்கு கூட
தோதாக இறுதிச் சடங்கு செய்திடவே
தோல்விகண்டது எங்களது வருமை...
மாதச்சம்பளம் மடிமேல் வாங்கிச் சென்று
மாற்று வழி நாடிச்செல்லா மக்கள் இன்றும்
மாடுபோல உழைத்திருந்தும் பஞ்சம்தீரா பாமரர்களே...
துவண்ட மனதோடு துயில வழியின்றி
துயரம்தாங்கி துணைசேரா பிணையக் கைதிகளாய்
துளிராத தளிராய் தூரத்தில் ஏங்கும் ஆடவர்கள்...
சூலகம் தொட்டிடா மகரந்தங்களாய்
சூத்திரங்கள் அறிந்திடா நறுமணம் கூடி
சூழ்ச்சியின் விளிம்பில் வசந்தத்தைத் தேடுகின்றோம்...
காலம் காட்டிய வழியில் கனவுகளெல்லாம்
காகிதத்தில் அவ்வப்போது கப்பல் செய்து
கானல் நீரில் மட்டுமே பயணிக்கிறோம்...
தாயம் ஆடிய விரல்களில் காயம்
தானிய கிடங்குகள் தற்போது மாயம்
தாயகத்தின் மேலாண்மை தென்றலோடு மேயும்
தானியங்கி இயந்திரங்கள் தலையோடு சாயும்...
விடியும் வரை விழித்திருப்பேன்
விடுதலை வரை உயிர்த்திருப்பேன்...