கோபக்குப்பை

==============
சமையலறைப் பாத்திரங்களை
உருட்டும் சப்தத்தினூடே
இரவில் வெளிவருகிறது
வீட்டில் மீன் வாங்காத
பூனையின் கோபம்.
௦௦
முக்கிய ஆவணகளையும்
புத்தகங்களையும் குதறிப்போட்டுக்
குடும்பத்தையே கோபத்தில்
ஆழ்த்தி விடுகிறது
கொறிப்பதற்கு எதையும் வைக்காத
எங்கள் மீதான எலியின் கோபம்.
௦௦௦
கதிர்காமக் கொடியேற்றம்
ஆடி அமாவாசை ,ஆடிவிரதம்
ஆடிப்பதினெட்டு அது இதுவென
மாதம் முழுவதையும் சைவமாக்கியதன்
கோபத்தை வைக்கும் சாப்பாட்டை
முகர்ந்து முகஞ்சுழித்துப் போவதில்
காட்டிவிடுகிறது வளர்ப்பு நாய்.
௦௦௦
ஆயர்பாடி மாளிகையில் ஒலிக்கவிட்ட
பக்திப் பரவசத்தூடே
“டேய்” எழுந்திரு நேரமாச்சுன்னு
காலை அபிசேகம் செய்யும்
அம்மாவின் மீது பிள்ளைக்கு
அதிகாலைத் தூக்கம் கலைந்த கோபம்.
௦௦௦
வாயிற்கதவை இழுத்தடைக்கும்
சப்தத்தின் வழியே எதிரொலிக்கும்
சுற்றுலாச்செல்ல அனுமதி மறுத்த
என் மீதான மகளின் கோபம்
௦௦
புறமுதுகுக் காட்டிப் படுத்தலில்
வெளிப்படையாகவே வெளிச்சத்திற்கு
வந்துவிடுகிறது பட்டுச்சேலைக்ப்
பணம் கிடைக்காத
மனைவியின் கோபம்
௦௦
டொக்.. டொக்.. டொக்.. என்ற
வெற்றிலை இடிக்கும் சப்தமாக
மாலை வேளைகளில்
உரத்துக்கொண்டே வந்துவிடுகிறது
மருத்துவமனைக்குக் கூட்டிச் செல்லாத
அம்மாவின் கோபம்
௦௦௦
எரிமலையை அடைக்கிவைத்தப்
பூமாதேவியைபோல
நிலைமையை அனுபவித்துணர்ந்த
நிலையில் கோபங்களை எல்லாம்
அடக்கிவைத்துக் கொண்டு
கோபமில்லாததுபோல் இருக்கிறது
அப்பாவின் கோபம்
௦௦௦
எல்லோருடையக் கோபங்களையும் சேர்த்து
என்னுடையக் கோபத்துக்கடியில்
மறைத்து வைத்துவிட்டு
சம்பள உயர்வென்னும்
கோபத்தை மட்டும் எடுத்துக்கொண்டு
மேலதிகாரியிடம் செல்லும் தருணங்களில்
வியாபார நட்டமெனும் கோபத்தை
அலுவலகம் முழுதும் பரப்பிவைத்து
அள்ளிகொண்டு போ என்கிறார்.,
௦௦௦
ஆனந்தம் தீர்ந்த
அன்பு பாத்திரங்களில்
நிரம்பிவழியும் கோபங்களைக்
கொட்டிவைக்கப் பாத்திரமின்றி
ஆத்திரம் கொண்டிருக்கும் நான்
இனி இந்தக் முதலாளித்துவக்
கோபக்குப்பைகளைக்
கொட்டிவைக்க குப்பை மேட்டுக்கு
எங்கே போவேன்?
***

எழுதியவர் : மெய்யன் நடராஜ் (23-Jul-18, 2:08 am)
பார்வை : 99

மேலே