திகிலும் ருசிக்கும் 10

திகிலும் ருசிக்கும் 10

எங்கிருந்து வந்தாய்
எதற்காக வந்தாய்
ஏதும் புரிந்திடா நிலைதனில்
எனக்காக வந்தாய் என்று
நினைத்துக்கொள்கிறேன்
என் ஆசை மகளே...

மோகினி உசுப்பியதும் தான் என் நினைவலைகளில் இருந்து நிஜத்திற்கு வந்தேன்....

"என்ன மோகினி"

"அப்பா இப்போ நீங்க உங்க கேள்விக்கான பதிலை தெரிஞ்சிக்கிற நேரம் வந்தாச்சு"

தெரிந்துகொள்ள ஆர்வமும், அவசியமும் இருந்தாலும் அதை எப்படி தெரிந்துகொள்வது...ஒன்றும் புரியாமல் மோகினியை பார்த்துக்கொண்டிருக்க என் அலைபேசி மீண்டும் ஒலித்தது...

கனகாவின் பெயர் மொபைலின் திரையில் மிளிர டக்கென போனை ஆன் செய்து என் பதற்றத்தை கொட்டினேன்...

"கனகா, இப்போ எங்க இருக்க, அங்க என்ன பிரச்சனை, நீ காலைல வர தானே, முதல்ல எனக்கு ஒன்னு சொல்லு, நீ நல்லா இருக்க தானே"

கேள்வி மேல் கேள்வியாக கேட்டு கொண்டே போக அந்த பக்கம் இருந்து என் கேள்விகளை அணைபோட்டு தடுக்கும் முயற்சியை முன்வைத்ததும் தான் வாயை மூடினேன்...

"மாப்பிள்ளை, நான் அத்தை பேசறேன்"

"அத்தை நீங்களா, கனகா எங்க, கனகாகிட்ட போன் குடுங்க, நான் அவகிட்ட கொஞ்சம் பேசணும்"

"அது வந்து மாப்பிள, இப்போ அவகிட்ட நீங்க பேசமுடியாது"

"ஏன் அத்தை, ஏன் பேசமுடியாது"

"கனகா உங்ககிட்ட பேசற நிலைமைல இல்லை"

இந்த வார்த்தையை கேட்டதும் என்னை அறியாமலே கண்கள் கலங்கிவிட்டது...அடிவயிற்றில் என்னவோ ஒரு பெரும் சுமை குதித்து ரணப்படுத்தியது...அந்த ஒரு நொடி மனம் என்னை ஏதேதோ கற்பனை செய்யவைத்து கலங்கடித்தது...அதற்குமேல் பொறுக்கமாட்டாது கத்த ஆரம்பித்தேன்...

"என்ன அத்தை சொல்றிங்க, அங்க ஏதோ பிரச்சனை, காலைல வரேன்னு கொஞ்ச நேரம் முன்னாடி தானே போன் பண்ணி சொன்னா, இப்போ என்ன ஆச்சி கனகாக்கு, உங்களை எல்லாம் நம்பி தானே அவளை அங்கு அனுப்பி வச்சேன்...நீங்க என்ன பண்ணுவீங்களோ ஏது பண்ணுவீங்களோ தெரியாது, நான் இப்போவே கனகாகிட்ட பேசியாகணும்...அவகிட்ட முதல்ல போனை குடுங்க"

அடுத்த ரெண்டு நொடிகள் அந்த பக்கம் ஒரே நிசப்தம், என் இதயமோ படபடவென அடித்துக்கொண்டது, இன்னொரு பக்கம் கண்சிவக்கும் அளவுக்கு கோபம்...இவர்களை நம்பி அனுப்பிவைத்தால் எல்லாரும் சேர்ந்து என் கனகாவை ஏதோ செய்துவிட்டார்கள் என்ற ஆத்திரம்....இருந்தாலும் உண்மை தெரியாமல் வார்த்தையை விடக்கூடாதென்று நாக்கை அடக்கிவைத்துக்கொண்டிருந்தேன்...

அப்பொழுது தான் என் மச்சினிச்சியின் குரல் கேட்டது...

"மாமா அக்காவுக்கு ஒன்னும் இல்லை, முதல்ல பதட்டப்படாம இருங்க, அடுத்தது ஒருகிலோ சர்க்கரையை அள்ளி வாயில போட்டுக்கோங்க" என்று சொல்லிவிட்டு சிரித்தாள்...

எதற்கு இப்பொழுது இவள் சிரிக்கிறாள், சர்க்கரையை வேறு வாயில் போட்டுக்கொள்ள சொல்கிறாள், அதுவும் ஒருகிலோ சர்க்கரையை...ஒன்றும் புரியாமல் முழித்துக்கொண்டிருந்தேன், என் குழப்பத்தில் ஏற்கனவே கலங்கிய கண்கள் கண்ணீரை வெளிதுப்பாமல் உள் இழுத்துக்கொண்டது...

"ஐயோ மாமா இன்னுமா புரியல, அக்கா உண்டாயிருக்கா, நீங்க அப்பாவாக போறிங்க, நான் சித்தி ஆக போறேன்" என்று பூரித்துப்போய் அவள் சொல்லிக்கொண்டிருக்க உள்ளிழுத்துக்கொண்ட கண்ணீர் முதலில் என் வலது கண்ணிலிருந்து வழிய ஆரம்பித்தது...எங்கோ படித்த ஞாபகம், ஆனந்தத்தில் கண்ணிலிருந்து வெளியேறும் கண்ணீர் முதலில் வலதுபக்க கண்ணிலிருந்து தான் வருமாம்...இதுவரை அதை சோதிக்கும் சூழ்நிலை அமையவேயில்லை...இன்று என் சந்தோஷத்தை சொல்ல வார்த்தையில்லை...

"மாமா என்ன சைலன்ட் ஆகிட்டீங்க, இன்ப அதிர்ச்சியா...மாமா அக்கா சோர்வா தூங்கிட்டு இருக்கா, அக்கா எழுந்ததும் உங்களுக்கு பேச சொல்லலலாமேன்னு இருந்தேன், அதுக்குள்ளே அம்மா ஏதேதோ உளறி உங்களை டென்ஷன் பண்ணிட்டாங்க, அதான் நானே இந்த சந்தோஷமான விஷயத்தை உங்ககிட்ட சொல்லிட்டேன்...அக்கா எழுந்ததும் பேசச்சொல்றேன்....இப்போ போன் வச்சிடறேன்"

விஷயத்தை எனக்கு புரியவைத்து திருப்தியில் போனை வைத்துவிட்டாள் என் மச்சினிச்சி...

ஆனால் இன்னமும் அவள் சொன்ன விஷயம் என் மனதுக்குள் சுத்திகொண்டு என்னை எங்கோ பறக்க வைத்துக்கொண்டிருந்தது...

என் கனகா அம்மா ஆகப்போகிறாள், நான் அப்பா ஆகப்போகிறேன்...என் வீட்டில் ஒரு குழந்தை தவழப்போகிறது...நினைக்க நினைக்க உடல் சில்லிட்டது, மனம் சிலிர்த்தது...

என் கனகாவின் கனவு, அவள் ஆசை...இன்று அது நிறைவேறிவிட்டது...

இதுநாள் வரை அவளை சமாதானம் செய்யும்போதெல்லாம் தோன்றும், குழந்தைக்கு போய் இத்தனை தூரம் தன்னை வருத்திக்கொள்கிறாளே, ஏன் இவ்வளவு ஏக்கம், இத்தனை அவஸ்தை...ஆனால் இன்று எங்களுக்கென்று ஒரு ஜீவன் பிறக்கப்போகிறது என்ற தகவலே என்னை இவ்வளவு குஷிப்படுத்துகிறதே...உலகத்தையே கையில் வைத்து ஒரு உருட்டு உருட்டிவிடலாம் என்ற அளவு தெம்பு மனதுக்குள் எழுகிறதே, இது தான் ஒரு உயிர் செய்யும் அற்புதமா...

மனம் துள்ளிக்குதித்துக்கொண்டிருந்தது, இந்த நொடி என்னிடம் வரமாக எதை கேட்டாலும் தந்துவிடும் மனநிலையில் இருந்தேன், கனகாவை தூக்கி ஒரு சுற்று சுற்றி, அவள் முகமெல்லாம் முத்த மழை பொழிந்து வானுக்கும் தரைக்குமாக குதிக்க வேண்டும் என்று மனம் பரபரத்தது...

இயல்பு நிலைக்கு திரும்பவே சில நிமிடங்கள் பிடித்தது...

"அப்பா"

மோகினியின் அப்பா என்ற அழைப்பில் தான் மோகினியே நினைவுக்கு வந்தாள்...

"மோகினி நான் அப்பா ஆகிட்டேன், எனக்கு ஒரு குட்டி பாப்பா பிறக்க போகுது, என் கனகா ஆசையெல்லாம் நிறைவேறிடுச்சி...”குதிக்காத குறையாக என் குரலில் சந்தோசம் ஆனந்த தாண்டவம் போட அவளிடம் என் மகிழ்ச்சியை கொட்டிக்கொண்டிருந்தேன்....

"அப்பா அது தான் எனக்கு ஏற்கனவே தெரியுமே"

மோகினியின் இந்த பதிலால் குதித்துக்கொண்டிருந்த மனம் சற்று நிதானித்தது... என்ன மோகினி சொல்ற...

"நான் தான் சொன்னேனே அம்மா நாளைக்கு வரமாட்டாங்கனு, அம்மாவுக்கு எதாவது ஆனா தான் வரமாட்டாங்கனு அர்த்தம் இல்லப்பா...அம்மா வயித்துக்குள்ள பாப்பா வந்ததுனால கூட வராம இருக்கலாம் இல்லையா..."

இந்த ஆங்கிளில் நான் யோசிக்கவேயில்லை, ஆனால் எப்படி யோசிக்க முடியும்...எப்படி யோசிக்காமல் விட்டேன்...என் ஆழ்மனம் நம்பிவிட்டதா, எங்களுக்கு இனி குழந்தை பிறக்கப்போவதில்லையென்று...இதுவரை அவள் உடலில் ஏற்படும் மாற்றங்களை நான் கவனித்ததில்லை...திருமணம் ஆன புதிதிலும், அடுத்த இரண்டு வருடங்களிலும் அவள் சின்னதாக தலைவலி என்றாலும் பதறி போய் பார்த்துக்கொள்வேன்...

அவளுக்கு தேதி தள்ளிப்போனால் இருவரும் ஆர்வத்தோடு டெஸ்ட் செய்து பார்ப்போம், அப்படியாக பலமுறை எங்கள் ஆசை பொய்த்து போய் சலிப்படைந்து எதிர்பார்ப்பதையே நான் விட்டுவிட்டேன்...

தெரிந்த சில மருத்துவர்களிடம் ஆலோசித்த பின் குழந்தை பிறக்கும் வாய்ப்பு மிக குறைவு, டெஸ்ட் டுயூப் பேபி முறையை வேண்டுமானால் முயற்சிக்கலாம் என்று சொல்லவும் நான் கூட சிறிது யோசித்தேன், கனகாவோ முற்றிலுமாக மறுத்துவிட்டாள்...

நமக்கு குழந்தை பிறக்கும்ங்க, அந்த பகவான் மனசு வைப்பான், தானாவே குழந்தைச்செல்வம் குடுப்பான், இந்த மாதிரிலாம் வேண்டாம் என்று அவள் முடிவாக சொல்லவும் நானும் அதன் பின் அவளை வற்புறுத்தவில்லை...

என் கனகாவின் நம்பிக்கை பழித்து விட்டது, மிக பெரிய பிடிவாதக்காரி தான், எந்த கடவுளிடம் பிடிவாதம் பிடித்து வரம் வாங்கிவந்தாளோ தெரியவில்லை...ஆனால் மோகினிக்கு முன்னதாகவே எல்லாம் தெரிந்திருக்கிறதே..அதனால் தான் அது மோகினி என்று மனம் சொன்னது...

"உனக்கு எல்லாமே முன்னாடியே தெரிஞ்சிருக்கு, ஆனா ஏன் என்கிட்ட சொல்லலை"

"அப்பா எல்லாத்தையும் தெரிஞ்சிக்க காலம், சந்தர்ப்பம்னு ஒன்னு இருக்கே"

மோகினி சொன்னதை ஆமோதித்து தலையசைத்தேன்...

"இப்போவே கனகாவை பார்க்கணும் போல இருக்கு, அவ முகத்துல இருக்கு சந்தோஷத்தை பார்த்து மனசு பூரிச்சி போகனும் மோகினி"

"இப்போ நீங்க அங்க போக வேண்டாம்பா, இன்னும் ரெண்டு நாள் கழிச்சி அம்மா வந்ததும் அம்மாவை ஆசை தீர பார்த்துக்கோங்க"

"ரெண்டு நாள் வரை எல்லாம் என்னாலே காத்திருக்க முடியாதே, இப்போவே கனகாவை கூட்டிட்டு வரேன்"

"அப்பா சொல்றதை கேளுங்க, ரெண்டு நாள் பொறுமையா இருங்க"

"முடியாது, கனகாவை கூட்டிட்டு வரேன், அவ முகத்துல இருக்க சந்தோஷத்தை பார்த்தா தான் உனக்கு புரியும், ஏன் அவளை உடனே பார்க்கணும்னு நான் அடம்பிடிக்கிறேன்னு"

"அதெல்லாம் சரிதான்பா, ஆனா இப்போ அம்மா இங்க வரவேண்டாம், அம்மா அங்க இருக்கறது தான் நல்லது"

"ஏன் மோகினி இப்படி சொல்ற, எவ்ளோ பெரிய சந்தோஷமான விஷயம் நடந்திருக்கு, ஆனா நீ ஏன் கனகாவை இங்க கூட்டிட்டு வரக்கூடாதுன்னு அடம்பிடிக்கற"

"எல்லாத்துக்கும் ஒரு காரணம் இருக்குப்பா"

எழுதியவர் : ராணிகோவிந் (27-Jul-18, 12:00 pm)
பார்வை : 682

மேலே