கவனம் நம்முடையதே
நெற்றியில் என்ன வீக்கம்?
கதவு இடித்துவிட்டது!
கதவு இடித்துவிட்டதா? அல்லது நீ கதவில் முட்டிக் கொண்டாயா?
இரண்டுக்கும் உள்ள வித்தியாசம் புரியும் போது அறிவு தெளிகிறது.
காலை ஏன் நொண்டுகிறாய்?
உடைந்து கிடந்த கண்ணாடி துண்டு குத்துவிட்டது!
உடைந்து கிடந்த கண்ணாடித் துண்டு குத்திவிட்டதா? அல்லது உடைந்து கிடந்த கண்ணாடி துண்டில் மிதித்துவிட்டாயா?
இரண்டுக்கும் உள்ள வித்தியாசம் புரியும் போது அறிவு தெளிகிறது.
கை விரல்களில் என்ன கட்டு?
காய்கறி நறுக்கும் போது கத்தி அறுத்துவிட்டது!
காய்கறி நறுக்கும் போது கத்தி அறுத்துவிட்டதா?
அல்லது
காய்கறி நறுக்கும் போது கத்தியால் அறுத்துக் கொண்டாயா?
இரண்டுக்கும் இடையே உள்ள வித்தியாசம் புரியும் போது அறிவு தெளிகிறது.
கவனமாக வாழவேண்டியது நம்முடைய கடமை.
உயிரற்ற பொருட்களால் எப்படி கவனமாக நம்மிடம் நடந்து கொள்ள இயலும்?
ஆதலால் உயிரற்ற பொருட்களின் மீது நாம் நம் கவனக் குறைவால் செய்த குற்றத்தின் பழியைச் சுமத்துவது நம் அறிவிற்கு அடையாளமாகாது.
செய்த தவறுகளுக்கு துணிந்து பொறுப்பேற்கக் கற்றுக் கொள்ளுங்கள்.
தவறைத் திருத்திக்கொள்ளும் பழக்கம் தானே வந்துவிடும் உங்களிடம்...