பசுமையின் மயக்கம்
ஒற்றையடிப் பாதையில் ஒதுங்கி ஒதுங்கி நடந்து
ஒற்றைப் பின்னலை ஒய்யாரமாய் தூக்கிவிட்டு
நெற்கதிர்கள் மேலே மிதமாக கரங்களினால்
பட்டும் படாமலும் தன் ஸ்பரிசம் பரவ தொட்டு
புன்சிரிப்பில் மிதந்து இன்னிசையும் முணுமுணுத்தாள்
பச்சைப் பசேல் பயிர்களெல்லாம் பாசமுடன்
காற்றினிலே அசைந்தாடி களிநடனம் புரிந்தனவே,
கோடி கொடுத்தாலும் விவசாயக் கிராம மக்கள்
கொத்தடிமையாக கொள்ள மனம் கூடாரே
இது எத்தனை நாள் கனவாக உளமார நேசித்து
இவ்விவசாயம் செய்தனரோ அவர்கள் கொண்ட உழைப்பும்
உறுதி கொண்ட மனமும் உண்மையும் நேர்மையும்
இவ்வுலகம் உயிர் வாழ உணவளிக்கும் உன்னதமான
செயலின் கொள்கையின் நன்னோக்கமும்
நாம் கண்கூடாய் காணும் இந்த நற்பயிர்களே
இவ்விதமாய் அந்நேரம்
விவசாயிகளையும் அவள் மனதில் அசைபோட்டு நடந்தாள்
இந்த பசுமையில் மயங்கிய பைந்தமிழ் கிளியவள்
இவ்வயல்களின் எல்லை காணும் தூரம் வரை நடந்தாள்
முற்றாத கதிர்களெல்லாம் இவள் இசையில்
இவள் ஸ்பரிசத்தில் முற்றிய நெற்கதிராய்
மேலோங்கி தலையசைத்து
இவ்விளந் தளிரின் கரங்கள் தம்மீது பட்டுவிட தொட்டுவிட
ஏங்கி ஏங்கித் தவித்தனவே ,
அவளும் தன் அளவற்ற இனம் புரியா மகிழ்ச்சியினால்
இன்னிசையை முணுமுணுத்து இளங்காற்றாய்
இங்கிதமாய் மெல்லநடை நடந்து சென்றாள்.
,