சின்ன சின்ன பல்லக் காட்டி

சின்ன சின்ன பல்லக் காட்டிச்
***சிரிச்சி மயக்குறான் !
என்னைக் கவரச் செல்லம் கொஞ்சி
***இன்பம் கூட்டுறான் !

பிஞ்சு விரலால் வருடி விட்டுப்
***பித்த னாக்குறான் !
பஞ்சு பாதம் எடுத்து வச்சிப்
***பாய்ஞ்சி நடக்குறான் !

பின்னல் சடையப் பின்னால் வந்து
***பிடிச்சி யிழுக்குறான் !
கன்னல் மழலை மொழியில் பேசி
***கவன மீர்க்குறான் !

குளிக்கும் போது தண்ணி தட்டிக்
***கொட்டிக் கவுக்குறான் !
ஒளிந்து கொண்டால் கண்டு பிடிச்சி
***ஒட்டிக் கொள்கிறான் !

கன்னம் காட்டி முத்தம் கேட்டா
***கடிச்சி வைக்கிறான் !
முன்ன வந்து கையால் மூடி
***மொகத்த மறைக்குறான் !

மொறைச்சிப் பார்த்தா பாவம் போல
***மொகத்த வைக்குறான் !
ஒறைஞ்சிப் போயி ஓர மாக
***ஒதுங்கி நிக்குறான் !

செய்யும் குறும்பை நினைக்க வச்சிச்
***சிந்தை கவருறான் !
பெய்யும் மழையாய் உள்ளம் நனைத்துப்
***பிரியம் காட்டுறான் !

சொன்ன சொல்லத் திருப்பிச் சொல்லிச்
***சொக்க வைக்குறான் !
இன்னும் சொல்ல இருக்கு நிறைய
***இப்ப போதுமே !

சியாமளா ராஜசேகர்

எழுதியவர் : சியாமளா ராஜசேகர் (1-Aug-18, 12:36 am)
சேர்த்தது : Shyamala Rajasekar
பார்வை : 35

மேலே