தெய்வங்கள் , பேய்கள் , தேவர்கள் -----------------------------கூப்பிடுதூரத்துத் தெய்வங்கள்

தெய்வங்கள் , பேய்கள் , தேவர்கள்
இத்தொகுதியிலுள்ளவற்றை கதைக்கட்டுரைகள் என்று சொல்லலாம். ஒரு கதையிலிருந்து அதை விரிந்த பண்பாட்டுப்பின்புலத்தில் வைத்துப் புரிந்துகொள்வதற்கான சிறிய அறிமுகத்தை நோக்கிச் செல்பவை. ஜன்னல் இருமாத இதழில் வெளிவந்தவை. ஆகவே அனைத்துத் தரப்பு வாசகர்களுக்குமான எளிமையான மொழிநடையில் எழுதப்பட்டவை.

நாம் அனைவருக்கும் குலதெய்வங்கள் உண்டு. கிராமியதெய்வங்கள், காவல்தேவதைகள் என நாம் நாட்டார்தெய்வங்களால் சூழப்பட்டு வாழ்கிறோம். அந்தத் தெய்வங்களுக்கும் இந்தியாவின் பிரம்மாண்டமான தொன்ம மரபுக்கும் என்ன உறவு,அவை எப்படி உருவாயின, அவற்றின் உணர்வுநிலைகள் என்ன என்று ஆராய்கின்றன இக்கதைகள். தென்தமிழகத்தில் பெரும்பாலானவர்கள் தங்கள் குலதெய்வத்தின் கதையை இதில் கண்டுகொள்ளக்கூடும்.

------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
கூப்பிடுதூரத்துத் தெய்வங்கள்.
என் அம்மாவழி முப்பாட்டன்களில் ஒருவர் சுசீந்திரம் கோயிலுக்குப் போய்விட்டு கணியாகுளம் வழியாக நட்டாலம் என்னும் சொந்த ஊருக்குத்திரும்பி வந்துகொண்டிருந்தார். ஆள் நல்ல அழகன். பெருந்தோள் கொண்டவர். அடிமுறை ஆசான். ஒரு கையில் மான்கொம்பை கேடயமாகக்கொண்டு மறுகையில் நீளமான வாளுடன் களமிறங்கி பொல போர்களில் வென்றுவந்தவர். அக்கால கேரளப் போர்வீரர் வழக்கப்படி திருமணம் என ஏதும் செய்துகொள்ளவில்லை. அச்சிகள் என்னும் பெண் தொடர்புகள்தான்

அவருக்கு எந்தப்பெண்ணும் ஒத்துவரவில்லை. அவரது பெரிய உடலுக்கு பெண்களால் சரிக்குச்சரி நிற்கமுடியவில்லை. அவருடன் காதல்புரிவது ஆற்றுப்பெருக்கில் விழுந்து மூச்சுத்திணறுவதுபோல என்றனர் அவரது காதலிகள். ஆகவே ஒருகட்டத்தில் அவருக்குப் பெண்ணே கிடைக்கவில்லை. சுசீந்திரத்தில் ஓர் அச்சியைத்தேடிச்சென்றார். அவள் அவரைப்போலவே அடிமுறை கற்றவள், பெரிய தோள்கொண்டவள் என்றார்கள். மடிநிறைய பொன்னுடன் சென்றார்

ஆனால் அவளுடன் உணர்ச்சிகரமான நிலையில் இருந்தபோது அவள் சொன்ன ஒரு கெட்டவார்த்தை அவரை ஏமாற்றம் அடையச்செய்தது. இசையிலும் கதகளியிலும் ஈடுபாடு கொண்டிருந்த கலைஞர் இவர். அவளோ வெறும் தசை. ஏமாற்றத்துடன் எழுந்து வெளியேறினார். அவள் பின்னால் வந்து கையைப்பிடித்தபோது மடியிலிருந்த மொத்தப் பணத்தையும் அவள் முன் வீசிவிட்டு திரும்பி நடந்தார்.

நள்ளிரவு, குளிர்ச்சாரலாக ஆடிமாத மழை. நிலவு . அடிக்கடி வானம் உறுமி மின்னல்வெட்டியது. ஆலம்பாறை கடந்து கள்ளியங்காட்டு பாதையில் வந்தபோது மின்னல் வெளிச்சத்தில் ஒரு பெண் சாலையோரமாக நிற்பதைக் கண்டார். தன் சூரிக்கத்தியை கையில் எடுத்துக்கொண்டு அணுகிச்சென்றார். இன்னொரு மின்னலில் அவளை அருகே கண்டார்

அழகி. மார்பில் சரப்பொளி ஆரம். காதுகளில் பொற்தக்கைகள். கைகளில் பொன் கடகங்கள். வெள்ளிச்சரிகை வைத்த வெண்ணிற வேட்டியை முலைக்கச்சையாகக் கட்டி திறந்த சந்தனத் தோள்களுடன் நின்றிருந்தாள். அக்கால வழக்கப்படி கூந்தலை பெரிய கொண்டையாக பக்கவாட்டில் சரித்து கட்டியிருந்தாள். அவரை கண்டதும் அவள் உடலில் ஒரு மெல்லிய அசைவு எழுந்தது

அவர் அணுகிச்சென்று உரத்த குரலில் “யாரடி நீ? இங்கே என்ன வேலை?” என்றார்.

“உன்னை செல்லவிடமாட்டேன். கொன்று குருதி குடிப்பேன்” என்று அவள் பதினாறு கைகளை விரித்து பேருருவம் கொண்டு எழுந்தாள். பனம்பட்டை போன்ற கூந்தல். அடிக்கிழங்கு போன்ற கரடுமுரடான முகத்தில் கொள்ளிக்கட்டைகள் போன்ற கண்கள். சுறாமீன் போல வாய். இரு முலைக்கண்களிலும் பார்வை.

பன்றியின் நாற்றம் எழுந்தது. முரசுத்தோல் உறுமும் ஒலியில் “என்னை நீ கடந்து போய்விடுவாயா?” என்றாள்

அவர் தன் கத்தியை நீட்டியபடி “என்னை என் கத்தியுடன் கொல் பார்ப்போம்” என்றார்

அவள் கடும் சினம்கொண்டு கூச்சலிட்டாள்.. இரும்பு யட்சிகளுக்கு ஒவ்வாதது. அனவே அவரை அவளால் ஒன்றும் செய்யமுடியவில்லை. பதினாறு கைகளாலும் மார்பையும் தோள்களையும் அறைந்துகொண்டு அவரைச்சுற்றிவந்தாள்..

அருகே இருந்த சாஸ்தா ஆலயத்தை அவர் அடைவது வரை அவள் அவரைச்சூழ்ந்து கூச்சலிட்டு கொண்டே வந்தாள். சுழல்காற்றுபோல அவள் மரங்களை உலைந்தாடச்செய்தாள். பாறைகளில் ஓங்கி அறைந்து ஓசை எழுப்பினாள். சாஸ்தாவின் எல்லைக்குள் அவளால் நுழைய முடியவில்லை. அவர் கடந்து சென்றதும் அவள் அலறி அழுதபடி மண்ணில் விழுந்து புரண்டாள்

எல்லை கடந்துசென்றதும் அவர் திரும்பிப்பார்த்தார். அங்கே அவள் மீண்டும் அந்தப்பேரழகி வடிவில் கிடந்து அழுவதைக் கண்டார். மார்பகங்களின் மேல் கண்ணீர் கோடாக வழிந்தது. மழைக்கால நீலமலர்களைப்போல கண்கள் ததும்பின

அவர் மனம் உருகியது. திரும்பச்சென்று அவளிடம் கேட்டார். “சரி என்னுடன் வா. ஆனால் அடங்கி இருப்பாயா?’

“இருப்பேன்” என்றாள் யட்சி

“என்ன வேண்டும் உனக்கு? அதைச்சொல்” என்றார்

“வெள்ளிக்கிழமை தோறும் விளக்கும் பூசையும். ஆண்டில் ஏழு குருதிக்கொடை… இவற்றை அளித்தால் குலத்துக்குக் காவலாக நிற்பேன். பெற்ற அன்னை போல கனிந்து துணையாவேன்”

“சரி வாடி” என்று அவள் கையைப்பிடித்து கூட்டி வந்தார். காலையில் அவர்கள் வீட்டை நெருங்கும்போது ஊரே அவளைப்பார்த்து வியந்தது. ஏதோ அரசகுடும்பத்துபெண் என்று நினைத்தார்கள்.

அவரது அம்மாவுக்கு மகன் அழகான பெண்ணை மணம் முடித்துக்கொண்டுவந்ததில் பெருமகிழ்ச்சி.. பெண்ணை மலரும் நீரும் தீபமும் காட்டி வரவேற்றாள். மணமகள் மிக அடக்கமானவளாக இருந்தாள். மிக இனிய குரலில் குறைவாகப்பேசினாள்.

அதைவிட முக்கியமாக அதுவரை வீட்டில் எட்டு பெண்களும் நான்கு வேலைக்காரிகளும் செய்த அத்தனை வேலைகளையும் அவள் ஒருத்தியே செய்தாள். விடியற்காலையில் மாமியார் எழுந்து பார்க்கும்போது எல்லா அண்டாக்களிலும் நீர் நிறைந்திருக்கும். தொழுவம் சாணி அள்ளப்பட்டு சுத்தமாக இருக்கும். பசுக்கள் குளிப்பாட்டப்பட்டிருக்கும். கறந்த பால் அருகே கலம்நிறைய நுரைத்திருக்கும். சமையலறை மெழுகப்பட்டு வேலை அனைத்தும் முடிந்திருக்கும். காலைச்சாப்பாட்டின் மணம் நாசியை நிறைக்கும்.

இவள் எப்படி இத்தனை வேலைகளையும் செய்கிறாள் என்று ஆரம்பத்தில் ஒரு வியப்பு இருந்தாலும் அதெலாம் பழகிவிட்டன. ஆனால் அவள் குலதெய்வக்கோயிலில் சாயங்காலம் தீபம் ஏற்றுவதை மட்டும் தவிர்த்தாள். சுடரை ஏதாவது சிறுமியின் கையில் கொடுத்து ஏற்றச்சொன்னாள். எவரும் இல்லாதபோது பேசாமல் திரும்பி வந்தாள். ஏன் தீபம் தெரியவில்லை என்று கேட்டபோது காற்று வீசியிருக்கும் என்று பதில் சொன்னாள்

அவள் கணவனுக்கும் அவளுக்கும் மிகச்சிறப்பான காதல் வாழ்க்கை இருந்தது. இரவில் அவள் அவருக்காக புத்தாடை அணிந்து ஏழு திரியிட்டு சுடர் ஏற்றப்பட்ட குத்துவிளக்கு போல காத்திருந்தாள். அவருடன் படுக்கையறைக்குச் சென்றபின் இரவெல்லாம் அவர்களின் பேச்சும் சிரிப்பும் கேட்டுக்கொண்டிருக்கும்.

அவர் முகம் காதல்கொண்ட இளைஞனின் முகம் போல ஒளிகொண்டது. எப்போதும் கனவிலிருப்பவர் போலிருந்தார். முன்பெல்லாம் எங்கிருக்கிறார் என்றே தெரியாது. இப்போது எங்கும் செல்வதே இல்லை

அவள் வந்தபின்னர் வீட்டில் செல்வம் கொழித்தது. பசுக்கள் பால்மழைபோலக் கறந்தன. உள்ளறைகளில் பொன் சேர்ந்தது. சமையலறையில் சோறு குறையவே இல்லை. ஆனால் அவள் கருவுறவேயில்லை. அதைப்பற்றி மாமியார் கேட்டால் சிரித்து மழுப்பிப்னாள்.

அவர்கள் செல்வந்தராவதை அறிந்து ஒருநாள் ஏழு திருடர்கள் அவர்கள் இல்லத்திற்குள் கூரையை பிரித்து இறங்கினர். அப்போது வீட்டில் ஆண்கள் யாருமில்லை. பெண்கள் மிரண்டு அலறி அழுதார்கள். திருடர்களின் காலில் விழுந்து மன்றாடினார்கள்

அவள் தன் அறையில் இருந்து வெளியே வரவே இல்லை. ஒருவன் கதவைத்திறந்து அவளை நோக்கினான். அவள் உடம்பெங்கும் அணிந்த நகைகளைக் கண்டு அவன் தன் தோழர்களை கூவி அழைத்தான். அவர்கள் அரிவாட்களுடன் அந்த அறைக்குள் சென்றனர்.

முதலில் சென்ற தலைவன் அலறியபடி திரும்பி ஓடினான். அவன்முடி நிமிர்ந்து முள்போல நின்றது. மற்றவர்களும் அலறியபடி ஓடினார்கள். மறுநாள் ஊருக்கு வெளியே செல்லும் பாதையில் அவர்கள் ரத்தம் கக்கிச் செத்துக்கிடப்பதைக் கண்டார்கள்.

அதன்பின்னர்தான் மாமியாருக்குச் சந்தேகம் வந்தது. மருமகளைக் கண்காணிக்கத் தொடங்கினாள். மருமகள் தூங்குவதே இல்லை என்பது அவளுக்குத்தெரிந்தது.பூசையறைக்கோ கோயில்களுக்கோ அவள் செல்வதில்லை. சிவன்கோயில் திருவிழாவுக்குக் கூட்டிச்சென்றபோது வழியிலேயே மயக்கம் போட்டு விழுந்து விட்டாள்.

ஒருநாள் விடியற்காலையில் மாமியார் எழுந்து காலில் சாக்குப்பையைக் கட்டிக்கொண்டு ஓசையில்லாமல் நடந்து வந்து மருமகளைப் பார்த்தாள். அவள் அப்போது பற்றுப்பாத்திரம் தேய்த்துக்கொண்டிருந்தாள். உடலில் பதினாறு கைகள் எழுந்திருந்தன. அத்தனைக் கைகளாலும் ஒரேசமயம் வேலைசெய்தாள்

மாமியார் மயங்கி விழுந்துவிட்டாள். கடும் காய்ச்சல் வந்து உடல் நடுங்கிக்கொண்டிருந்தது. அவள் மகன் வந்து பார்த்ததுமே விஷயத்தைத் தெரிந்துகொண்டான். யட்சியை அழைத்துவந்து காட்டி நடந்தவற்றைச் சொன்னான். “இவள் நம் குடும்பத்தின் தேவதை” என்றான்.

அதன்பின் அவளை தெற்குப்பக்கம் ஒரு சிறிய கோயில்கட்டி குடியேற்றினார்கள். வெள்ளிக்கிழமை பூசையும் கொடைகளும் ஏற்பாடாயின. அவள் குடித்தெய்வமாக அமர்ந்து அருள்புரிந்து காத்தாள்.

என் மூதன்னையருக்கு யட்சி ஒரு தெய்வம் அல்ல, ஒரு துணைவி. தெற்குபக்கம் செல்லும்போது சருகு மேல் காலடி ஓசை கேட்கும். “போதும்டி தெரியும்… சும்மா அடங்கி இருடீ” என்று ஓர் அதட்டல் போடுவார்கள். “களியங்காட்டு யட்சீ, நீ தாண்டி துணை” என்று வேண்டிக்கொள்வார்கள். இரவில் வாசலை மூடும்போது தெற்கு நோக்கி உரக்க “சரிடீ, இனி உன் பொறுப்பு எல்லாம். பாத்துக்கோ” என்பார்கள்.

யட்சி என்னும் தெய்வம் சமண மரபிலிருந்து வந்தது. சமணர்கள் இல்லாமலான போது இந்தத்தெய்வ உருவகங்களை இந்துக்கள் ஏற்றுக்கொண்டதைத்தான் இக்க்கதைகள் குறியீட்டுரீதியாகக் காட்டுகின்றன. பெரும்பாலான யட்சிகள் முச்சந்தியில் கண்டெடுக்கப்பட்டவர்கள், குடியேற்றி வழிபடப்படுபவர்கள்.

எந்த மதத்திலானாலும் தெய்வ உருவகங்கள் மூன்று வகைப்படும். உலகியல்தெய்வங்கள் அல்லது சிறுதெய்வங்கள் முதல்வகை. மூதாதையர், போரில் உயிர்நீத்தவர்கள், கருக்கொண்டு இறந்த அன்னையர், கன்னியாக மறைந்தவர்கள் தெய்வமாகிறார்கள். குலங்களின் அடையாளங்கள் தெய்வமாகின்றன. பாறைகள்,மரங்கள், புற்றுகள், பாம்புகள், பலவகை உயிர்கள் போன்ற குறியீடுகள் தெய்வமாகின்றன.

சிறுதெய்வங்கள் வெறும் மூடநம்பிக்கைகள் அல்ல. அவை தெய்வத்தை அன்றாட வாழ்க்கைக்குள் மிக அருகே கொண்டு வரும் மனநிலையின் வெளிப்பாடுகள். சிறுதெய்வங்களை சொந்தக்காரர்களாகவே எண்ணினார்கள். சகஜமாக அவற்றுடன் உரையாடினர். அத்தெய்வங்கள் அவர்களை இறந்தகாலத்துடன் இணைத்தன. அறியமுடியாத பெருவெளியுடன் பிணைத்தன

இரண்டாம் வகைத் தெய்வங்களை பெருந்தெய்வங்கள் எனலாம். ஆங்கிலத்தில் almighty god எனச் சொல்வார்கள். படைத்தல் காத்தல் அழித்தல் ஆகியவற்றைச் செய்யும் தெய்வமே பெருந்தெய்வம். யூதர்களின் யகோவா பெருந்தெய்வம்.முஸ்லீம்களின் அல்லா பெருந்தெய்வம்.

கிறிஸ்தவ மதத்தில் உள்ள பரிசுத்த ஆவியும் பிதாவும் பெருந்தெய்வங்கள். பெருந்தெய்வச் சாயல் இருந்தாலும் ஏசுவும் அன்னைமரியும் சிறுதெய்வங்கள் போன்றவை. பிதாவிடமும் பரிசுத்த ஆவியுடனும் வேண்டிக்கொள்வதை விட ஏசுவிடமும் மரியிடமும் வேண்டிக்கொள்ளும்போதே நாம் அணுக்கமாக உணர்கிறோம்.

இந்துமரபில் ஆறுமதங்கள் உள்ளன.அவற்றின் முதன்மைத்தெய்வங்கள் பெருந்தெய்வங்களே. சைவத்தின் தெய்வம் சிவன். வைணவத்தின் தெய்வம் விஷ்ணு .சக்தி சாக்த மதத்தின் தெய்வம். சூரியன் சௌர மதத்தின் தெய்வம். பிள்ளையார் காணபத்தியத்திற்கும் முருகன் கௌமாரத்திற்கும் தெய்வங்கள்

மூன்றாவதாக ஒரு தெய்வ உருவகம் உள்ளது. அதை தத்துவார்த்தமான தெய்வம் [philosophical gods] எனலாம். அது முழுக்க முழுக்க ஒரு தத்துவார்த்தமான அறிதல்தான். . அதாவது தத்துவத்திலும் கணிதத்திலும் முடிவிலி [infinity] என்று ஒன்றை சொல்கிறோம் அல்லவா? அதை தொட்டு அறிய முடியாது. ஆனால் உருவகித்து அறியமுடியும். அதேபோன்றது இது.
இந்து மதத்தின் சாராம்சமான தெய்வ உருவகம் என்பது பிரம்மம். அது எங்கோ இருப்பது இல்லை. அதற்கு ஆண்,பெண் பேதங்கள் இல்லை. அதை இந்தப்பிரபஞ்சத்தை இயக்கும் ஒரு ஆற்றல், இங்குள்ள அனைத்துக்கும் சாராம்சமான ஒன்று, இங்குள்ள அனைத்துமாக தன்னை வெளிப்படுத்துவது, நாம் அதை உணரத்தான் முடியும் அறியமுடியாது

பௌத்தர்களின் மகாதர்மம் என்பது ஒரு தத்துவார்த்தமான தெய்வ உருவகம். சமணர்களின் பவசக்கரம் ஒரு தத்துவத்தெய்வம். தாவோ மதத்தின் மகாசூனியம் ஒரு தத்துவார்த்த தெய்வம். கீழை மதங்களான இந்துமதம். பௌதம், சமணம், தாவொ, ஜென் போன்றவற்றிலேயே தத்துவார்த்தமான தெய்வம் உள்ளது

அந்த தத்துவார்த்த தெய்வத்தை பெருந்தெய்வத்துடன் இணைக்கிறது இந்துமதம். எல்லா பெருந்தெய்வங்களும் பிரம்மத்தின் வடிவங்கள்தான் என்று சொல்கிறது.

ஆனால் சிறுதெய்வங்கள் பிரம்மஸ்வரூபங்கள் என்று சொல்லபடுவதில்லை. நம்முடைய அன்றாட ஆசைகள், பயங்கள், சந்தேகங்கள், துக்கங்களில் இருந்து நம்மை காப்பாற்ற நாமே பலவகையிலும் உருவாக்கிக்கொள்பவை அவை.

கடல் எங்கோ உள்ளது. ஆனால் மழையாகப் பொழிந்து ஆறாக மாறி நிலத்தடி நீராக நிறைந்து நம் வீட்டு கிணற்றில் ஊறுவதும் கடல்தான் இல்லையா? சிறுதெய்வங்களும் அந்த முழுமுதல் தெய்வத்தின் அம்சம் தான்.

ஒருமுறை கைக்குழந்தை ஒன்று தவழ்ந்து எருமைமாட்டின் குளம்புகளுக்கு நடுவே சென்று விட்டது. ஓடிச்சென்று எடுத்த பெரியம்மா கடும் கோபத்துடன் திரும்பி “ஏடி யட்சி? மூதேவி, அறிவில்லையாடி உனக்கு? பிள்ளை போகுது பாத்துட்டு என்னடி செய்றே?” என்றாள். எந்த தத்துவார்த்தமான தெய்வத்தையும் அப்படி மனதில் நெருக்கமாக ஆக்க முடியாது. எந்த பெருந்தெய்வத்தையும் அப்படி திட்டமுடியாது. ஆகவெதான் அவை கூடவே இருக்கின்றன

[அமேசான் வெளியீடாக வந்துள்ள தெய்வங்கள் தேவர்கள் பேய்கள் நூலில் இருந்து ]

எழுதியவர் : (16-Aug-18, 6:02 am)
பார்வை : 130

மேலே