இலக்கியக் காதல்
எனது தமிழ்தந்த
காதல் தானே
இன்று பல
தலைமுறைகள் வாழ்கிறது...!
உறவுகளின் உன்னதத்தை
ஒருவரியில் சொன்னானே
எனது
தமிழ்ப் புலவன்
ஆணிடத்தில் வீரமும்
பெண்ணிடத்தில் நாணமும்
பாடலில் பொருள்கொண்டு
பக்குவமாய்ச் சொன்னானே...!
வீதிகளின் சாலைதோறும்
வெண்நிலவின் விரிப்பினிலும்
ஊடலுக்கு ஒருவித
உன்னதத்தைச் சொன்னானே...
அவன்
ஆடையினைத் தொட்டதில்லை
அவளின்
ஆபரணம் தொட்டதில்லை
ஆசைகளை ...
மேனிகளில் காட்டி
அன்பை மட்டும்
மனக்கதவில் பூட்டி
சோலைகளில்
காதலிசை மூட்டி
கற்புநிலை
செந்தழலாய்க் காட்டி...!
இருவர்
கூடையிலே
இருந்ததில்லை சூழ்ச்சி...
இதற்க்கு
இலக்கியத்தில் உள்ளதைய
சாட்சி ...!
மரத்தையும்
தங்கையெனக் கூறி
எங்கள் ஏட்டினிலே
சொன்னதில்லை சாதி...!
தலைவிக்குத்
தோழியென்றும் பாதி
எனது தமிழ்ப்புலவன்
சொல்லிவைத்த நீதி...!
அவளழகை
அடுக்கடுக்காய்க் கூவி
அன்புநிலை
சொன்னதடா பாரில்...
மரம் விட்டு
மரம் போலத் தாவி
என்றும்
மறுமணம் செய்யவில்லை தேவி
அவளின்...
விழியினை வில்லென்றும்
பிறையென்றும்
வலையிலே சிக்காத
மீனென்றும்...
என்தலைவி கண்ணுக்கு
எத்தனை உவமையடா....!
அழுதால்
கடலென்றும்
சிரித்தால் மலரென்றும்...!
கற்பனைக் கடலிலன்று
கரைந்தான்
என் தமிழன்...
இலக்கியக் காதலின்று
எங்கேனும் பார்த்திருந்தால்
செதுக்கிய சிலைகூட
செந்தமிழ் பேசிடுமே...!
இழிந்த காதலென்றும்
எந்தமிழ் சொன்னதில்லை
தெரிந்தால் சொல்லிவிடு
என்னுடலை
பிளந்தேனும் கொல்லியிடு.