அன்பின் வழியது கவிஞர் இரா இரவி

அன்பின் வழியது!
கவிஞர் இரா. இரவி.
******
பயன்கருதாது அன்பு செழித்திட வேண்டும்
பாரபட்சமின்றி அன்பு செழித்திட வேண்டும்!
எல்லா உயிர்களையும் நேசித்திட வேண்டும்
எண்ணம் நல்லது வேண்டும் செயல் நன்றாகும்!
உன்னை பிறர் எப்படி மதிக்க விரும்புகிறாயோ?
உணர்ந்து நீயும் பிறரை அவ்வாறே மதித்திடு!
உயர்ந்தவர் தாழ்ந்தவர் மனிதர்களில் இல்லை
ஒருவரிடம் வெறுப்பை வரவழைத்துக் கொள்ளாதே!
மறுபிறவி என்பது கற்பனை உண்மையன்று
ஒரே பிறவி என்பதே உண்மை உணர்ந்திடு!
மூச்சு நின்றால் பேச்சு நிற்கும் அறிந்திடு
முடிந்தவரை பிறருக்கு உதவியே வாழ்ந்திடு!
சராசரியாக வாழ்ந்து சாவது மடமை
சாதித்து வாழ்ந்து சாவதே அறிவுடைமை!
தன்னலமான வாழ்விற்கு முற்றுப்புள்ளி வைத்திடு
தன்னலம் மறந்து பொதுநலம் புரிந்திடு!
இறந்தபின்னும் உன்னை போற்றிட வாழ்ந்திடு
இருக்கும் வரை எல்லோருக்கும் உதவிச் சிறந்திடு!
நல்லவன் என்ற பெயரை என்றும் ஈட்டிடு
நாடு பாராட்டும் செயல்கள் நல்கிடு!
மனிதநேயம் மனதினில் எப்போதும் இருக்கட்டும்
மாண்டபின்பும் மக்கள் பாராட்டுவர் உன்னை!
உலகில் விலைமதிப்பற்றது உண்மையான அன்பு
உலக மனிதர் யாவரிடமும் காட்டிடு அன்பு!
கண்களுக்குத் தெரியாது அன்பு ஆனால்
கண்களில் இருக்கட்டும் எப்போதும் அன்பு!
வேண்டாம் மனிதர்களுக்குள் வீண் வம்பு
வன்சொல் விட்டு இன்சொல் என்றும் விரும்பு!