கவிக்கோ அப்துல் ரகுமான்

உமது கவிகளால் செவிகளை வருடிய மதுரைக்கார பாசக்காரரே.. தத்துவத்தை கவிப்புலத்தினால் புலனரிய வைத்தவரே..
கவிக்கோ என்னும் பெயரில் தமிழுக்கு கிடைத்த கோமகனே....
"கண்ணீரில் புன்னகையும் புன்னகையில் கண்ணீரும் ஒளிந்திருப்பதை நீ அறிய மாட்டாய்"எனவும் "கண்ணீர் என்பது கண்களின் புன்னகை, புன்னகை என்பது இதழ்களின் கண்ணீர்"என்று எங்களுக்கு கூறிவிட்டு சென்றுவிடீர்கள்.. இப்போது என்ன செய்வது என்று அறியாது திகைப்புற்று நிற்கிறது எங்களது கண்கள்.. தமிழ்நாட்டில் பிறந்து தமிழில் பேச வெட்கப்படும் மானமிகு மடையர்களை எண்ணி தமிழ் அன்னைக்கு தாங்கள் எழுதி விட்டு சென்றது "பரண் குணம் படைத்த பரம்பரை இன்று உன்னை பரணிலே போட்டுவிட்டு பாதையெல்லாம் நடக்கிறது,பிள்ளைத்தமிழ் பேச பேரின்பம் கொண்டவளே இன்று உன் பிள்ளைகள் பேசும் பேச்சில் நீ இல்லை."
பணக்காரன் - ஏழை, உயர்ந்தவன் - தாழ்ந்தவன், மேல்ஜாதி - கீழ்ஜாதி, எஜமான் - வேலைக்காரன் என வேறுபடுத்தி மட்டுமே பார்க்கும் உலகிற்கு
சிறியது பெரியது என்பதன் வேற்றுமையை சிற்றலை பேரலை என்னும் உவமையின் மூலம் செவியுணர வைத்தவரே.. பெரியது என்பது அதை விட பெரியதன் முன்பு சிறியதாகிவிடும் - சிறியது என்பது அதை விட சிறியதன் முன்பு பெரியதாகிவிடும் என சுட்டிக்காட்டியவரே..
கல்வியையும் தமிழ் கல்வியையும் பற்றி, "கற்றேன் என்றாய் கற்றாயா? - வெறும் காகிதம் தின்பது மட்டும் கல்வியல்ல, விடையை கண்டேன் என்றுரைத்தாய்? - ஒரு வினாவாய் நீயே நிற்கின்றாய்" என்று கேள்விகளாகவும் "பத்துப்பாட்டு என்றால் பதறுகிறோம், திரைப்படத்தில் குத்துப்பாட்டு என்றால் குதூகலமாய் ஆடுகின்றோம்" என்று வேதனைகளை வார்த்தைகளால் வருணித்தவர்..
"ஆலாபனை" எனும் தொகுப்பில் "கொடுத்தல்" எனும் தலைப்பின் கீழ், "உண்மையில் நீ கொடுக்கவில்லை உன் வழியாக கொடுக்கப்படுகிறது, நீ ஒரு கருவிதான்" என கூறினீர்கள் , உண்மையில் நீங்கள் ஒரு கருவிதான் உங்கள் வழியாக எவ்வளவோ எங்களுக்கு கொடுக்கப்பட்டது. நீங்கள் கூறியபடியே பூவைப்போல சப்தமில்லாமல் கொடுத்தீர்கள் , விளக்கைப்போல பேதமில்லாமல் கொடுத்தீர்கள்.
"ஜனனத்தில் ஒரு கதவு திறக்கிறது, மரணத்தில் ஒரு கதவு திறக்கிறது" என்று கதவு எனும் தலைப்பின் கீழ் கூறினீர்கள், இதோடு வீட்டீர்களா ? இன்னும்மல்லவா எழுதினீர் - "கதவு தட்டும் ஓசை கேட்டால் யார் என்று கேட்காதே ஒரு வேளை அது நீயாக கூட இருக்கலாம்" என்று எழுதியது போலவே கதவை தட்டி விட்டீர்களே ஐயா....


தென்கோடியில் இருந்து கவிக்கோவின் கோடிக்கணக்கான வார்த்தைகளால் கவர்ந்திழுக்கப்பட்டவன்.

எழுதியவர் : ச.ஜெரோம் சகரியா (8-Sep-18, 2:33 pm)
சேர்த்தது : ஜெரோம் சகரியா
பார்வை : 146

மேலே