அழகான உணர்வு

எப்போது உடையுமோ என்ற பேருந்து படியில்
எப்போது உடையுமோ என்ற என் மனதுடன் ஏறினேன்

எங்கோ பல முகங்களுக்கு நடுவில் அந்த முகம்.
அந்த முகத்தை மறைத்த ஒவ்வொருவரும் முகங்களும் என்
ஜென்ம எதிரிகள் ஆனார்கள்.

அந்த இயல்பான அழகு முகம்
என் பார்வையை விட்டு அகலவில்லை
அந்த ஈர்ப்பு என்னை பிரிய மறுத்தது.

அவள் முக அசைவுகள், திடீர் சிரிப்புகள்,
பின் கழுத்தின் அழகை அவ்வப்போது காட்டிய
அவள் கூந்தல், என்னை பார்த்ததாக நானே நினைத்துக்கொண்ட அவள்
கண்கள். இதை மட்டுமே சற்றும் அசையாமல் உற்று நோக்கினேன்

உலகிலேயே மிகப் பெரிய பொய்காரனான
என் மனது அவள் உன்னை தான் பார்கிறாள் என்றது
உலகிலேயே மிகப் பெரிய ஏமாளியான நான்
அதையும் நம்பிக்கொண்டு கனவில் மிதந்திருந்தேன்

எங்கு அவள் அடுத்த நிறுத்தத்தில் இறங்கிவிடுவாளோ
என்று ஒவ்வொரு நிறுத்தத்திலும் என் வறண்ட உதடுகளோடு
பயத்தில் ஆழ்ந்திருந்தேன்.

என் மனக்கோட்டையில்
இந்த பத்து நிமிடத்தில் சிறு வாழ்க்கையே வாழ்ந்து விட்டேன்

கடைசியில் நிறுத்தமும் வந்தது
இருவரும் இறங்கி சென்றுவிட்டோம்.

அந்த தருணத்தில் அவளை நான் அடைய விரும்பவில்லை
அவள் பின்னாலும் செல்லவில்லை
அந்த அழகிய தருணத்தை மட்டும் என்
அழகி நினைவுகள் கொண்ட என் மன டைரியில்
பதித்துக்கொண்டு வாழ்வின் புது அனுபவங்களை
தேடிய என் பயணத்தை தொடர்ந்தேன்….

எழுதியவர் : மெ.மேக்சின் (14-Sep-18, 9:01 pm)
சேர்த்தது : Maxin
Tanglish : azhagana unarvu
பார்வை : 993

மேலே