குறள் வெண்பா முயற்சி
குறள் எண்-1
உரைத்ததை நம்புதல் பக்தி இறைவன்
இருப்பதை தேடல் அறிவு
விளக்கவுரை: இறைவனைப் பற்றி இலக்கியங்களிலும் புராண கதைகளிலும் உரைக்கப்பட்டுள்ளதை அப்படியே நம்பி ஏற்றுக்கொண்டு வணங்குவது பக்தி மார்க்கமாகும். அவ்வாறில்லாமல், இறைவனின் இருப்பை ஆய்ந்து அறிந்துகொள்ள முற்படுவதே அறிவாகும்.
குறள் எண்-2
அளியோடு அன்பு அளித்திடும் மாந்தர்
அளியினால் சுற்றும் உலகு
விளக்கவுரை: கருணையோடு கலந்த அன்பை தான் வாழும் சமூகத்திற்கு அளித்திடும் மனிதர்களின் கருணை குணத்தினால்தான் இந்த உலகம் இன்னும் இயங்கிக்கொண்டிருக்கிறது.
குறள் எண்-3
காலம் திணைபால் கடந்தது தெய்வமாம்
தாளாம் இவையனைத் திற்கு
விளக்கவுரை: காலம், உயர்திணை, அஃறிணை, பெண்பால், ஆண்பால் இவையெல்லாவற்றையும் கடந்தது, மற்றும் அதேநேரத்தில், இவையனைத்திற்கும் ஆதியாகவும் விளங்குவது இறைநிலை.