தமிழா நீபேசுவது தமிழா
தமிழா உன்பேச்சில் தமிழுண்டா?
தாய்மொழி வெறுக்கும் நிலைநன்றா?
மாதாவை அழைக்க மம்மியென்றாய்
மாண்புள்ள தந்தையை டாடியென்றாய்
அண்ணனும் தம்பியும் பிரதராம்
அக்காவும் தங்கையும் சிஸ்டராம்
தாத்தாபாட்டி கிரேன் பேரண்டா
தமிழாநீ பேசாதே முரண்டா
வணக்கம் சொல்லிட குட்மானிங்கா
வரவேற்பு செய்திட வெல்கம்மா
நெஞ்சினில் இல்லையா வேட்கமா
நினைத்தால் இருக்குது அசிங்காமா
பள்ளியில் நடக்கும் பிரார்த்தனையை
பிரேயர் என்று கூறுகிறாய்
தாய்மொழிக்கு குழி பறித்துவிட்டு
நாய்மொழி குரைத்திட ஓடுகிறாய்
இடமும் வலமும் லெப்ட்ரைட்டாம்
இருவரின் சண்டையோ செமபைட்டாம்
சமைத்த அரிசியை ரைஸ்என்று
சபையிலும் உரக்க சொல்லுகிறாய்
தகிழகம் என்ன ஆங்கிலத்தின்
தரகாய் விளங்கிடும் சந்தையா?
இரவல் மொழிபேசும் தமிழாநீ
இங்லீஷ் காரனுக்கு தந்தையா?
படிக்கும் நூல்கலை புக்கென்றும்
குடிக்கும் தண்ணீரை வாட்டரென்றும்
குறிப்புச் சுவடியை நோட்டென்றும்
கூறுவதில் என்ன சுகம்கண்டாய்?
பிள்ளைகள் பெற்ற தாய்தன்னை
புறந்தள்ளி வைப்பது நீதியில்லை
இனியும் பிறமொழி பேசிநின்றால்
பிணமேநீ வாழும் மனிதனில்லை..
சொ. பாஸ்கரன்