உலகத்தின் போக்கு

=====================
நன்றிகெட்டோர் மத்தியிலே நல்லவராய் வாழ்பவர்க்கு
நாளும்நாளும் சோதனைகள் கூடும் கூடும்
ஒன்றுசொல்லி ஒன்றுசெய்து உத்தமராய் நடிப்போர்க்கு
ஊர்முழுதும் பாட்டெடுத்துப் பாடும் பாடும்
*
கெட்டவர்கள் கொடிகட்டி கீழ்த்தரமாய் வாழ்ந்திருந்தும்
கேவலமாய்ப் பார்த்திடாத வையம் வையம்
பட்டவர்கள் மீண்டுமடிப் பட்டுபட்டுப் பரிதவிக்க
பார்த்திருந்து மேலும்மேலும் வையும் வையும்
*
என்னஇந்த வாழ்க்கையடா என்றழுது தவிக்கின்ற
ஏழைவர கதவினைச் சாத்தி சாத்தி
மன்னவர்போல் வாழுகின்ற மதிகெட்ட மாந்தருமே
மாமனிதர் போர்வைகளும் போர்த்திப் போர்த்தி.
*
அன்றுதொட்டு இன்றுவரை ஆண்டவனும் கண்டிருக்க
அநியாயக் காரர்களை வாழ்த்தும் வாழ்த்தும்
என்றுநிற்கு மிந்தசெயல் என்றேங்கி நிற்பவர்க்கு
என்றென்றும் துன்பம்வந்து வீழ்த்தும் வீழ்த்தும்
***
மெய்யன் நடராஜ்