பெண் சுதந்திரம்
" ஏன்டி புத்தகத்தை எடுத்து படிச்சான, எப்பம பார்த்தாலும் போனும் கையுமா என்னடி பண்ற? ",என்றார் அடுப்படியிலிருந்து வந்த அகிலா.
அம்மாவின் பேச்சுகள் காதில் விழாதது போல கைபேசியில் கலந்திருந்தாள் சுவேதா.
மேலும் கோபமடைந்த அகிலா, " ஏன்டி உன்கிட்ட தான சொல்லுறேன். கொஞ்சமாவது காதுல வாங்குறியா? தினம் உனக்கு இதே பொழப்பா போச்சு. உனக்கு போன் வாங்கிக் கொடுத்தார் பாரு, அவரைச் சொல்லனும் ",என்றார்.
கைபேசியிலிருந்து விடுபட்ட சுவேதா, " ஏன்மா இப்படி கத்துற?
கொஞ்ச நேரம் நிம்மதியா இருக்க விடுறியா? வீட்டுக்கு வந்தாலே நைய் நைய்னு நச்சறிக்கிற? ", என்றாள்.
" ஆமாடி! உனக்கு நல்லது சொன்னா கத்துற மாதிரித்தான் இருக்கும். அவரு வரட்டும் பேசிக்கிறேன்.
",என்று சமையலறைக்குச் சென்றார்.
லட்சுமணன் ஒரு மின் உழியர், கொஞ்சம் சோஷியல் டைப். பாரதியாரின் பரம பக்தர்.
அவருடைய மனைவி அகிலா. அந்தக்கால பிளஸ்டூ படித்து பெயிலானவர்.
குடும்பத்தை கவனித்துக் கொள்ளும் பொறுப்பான பெண்மணி.
அவர்களுடைய ஒரே மகள் சுவேதா.
கம்பியூட்டர் சையின்ஸ் பி.இ கடைசி வருடம் படிக்கிறாள்.
சுவேதா அப்பாவின் செல்ல மகள்.
தன் மகள் கேட்ட எதையும் மறுத்ததில்லை லட்சுமணன்,
இரவு 7 மணியானது.
லட்சுமணன் பணி முடித்து வந்தார்.
தன் தந்தையிடம், " அப்பா எப்போ பார்த்தாலும் அம்மா திட்டிக்கிட்டே இருக்கா, நீ என்னனு கேளு. ",என்று வத்தி வைத்தாள் சுவேதா.
" அப்படியா!? இரு நான் கேட்கிறேன். ",என்று கை கால்களை அலம்பிவிட்டு சமையலறை சென்று, அகிலாவிடம், " ஏன்டி எப்போ பார்த்தாலும் என் பொண்ணை திட்டிக் கிட்டே இருக்கியாமே? ",என்றார்.
" வந்ததும் வராததுமா உங்ககிட்ட அவலாதி சொல்லிட்டாளா?
எல்லாம் நீங்க கொடுக்கிற இடம்.
பொம்பளப் பிள்ளைக்கு எதுக்கு காலேஜ் படிப்புனா கேட்டால் தானே.
இதுக்குள்ள அவளுக்கு கல்யாணம் ஆகியிருந்தா குழந்தையே பிறந்திருக்கும். ",என்று தன் ஆதங்கமாகக் கூறினார் அகிலா.
" அட போடி! பிளஸ்டூல பெயிலானவ தான நீ. உனக்கென்ன தெரியும் படிப்போட அருமை.
என் பொண்ணு உன்னமாதிரி இல்லடி.
அவ பாரதி கண்ட புதுமைப்பெண். ",என்று தன் மகளுக்கு வக்காளத்து வாங்கினார்.
" ஆமா, ஆமா, உங்க பாரதி கண்ட புதுமை பெண் எப்போ பாரு போனும் கையுமாகத் தான் இருப்பா போல.
ஒரு பொண்ணுக்கு லட்சணம் வீட்டு வேலைகளையும் பார்க்கத்தெரியணும்.
பெரியவங்க வார்த்தைக்கு மதிப்புக் கொடுக்கத் தெரியணும். ",என்று நியாயத்தைக் கூறினார் அகிலா.
" அடி போடி! அடுப்பூது உன் போன்ற பெண்களுக்கு என்னடி தெரியும் பொங்க, திங்க, தூங்க இதை தவிர? என் பொண்ணு அவ இஷ்டப்படிதான் இருப்பா.
இது சமத்துவ காலம்டி.
பெண்கள் ஏரோ ப்ளைன் ஓட்டுறாங்க தெரியுமா?
உனக்கெங்க தெரியும்?
ஏரோ ப்ளைன்னா என்ன கேட்கிற அடுப்பூதும் அடிமை பெண்ணாச்சே நீ. ",என்று கோபமாக ஏகவசனம் பேசிவிட்டார்.
அதனால் வருத்தமடைந்த அகிலா, " பொண்ணா, அடக்க ஒழுக்கமா இருக்கனும் சொன்னது தப்பா? இனி உங்ககிட்டயோ உங்க பொண்ணுகிட்டயோ பேசுனா சொல்லுங்க. ",என்று கண்களைத் துடைத்துக் கொண்டு அமைதியாக சமைத்த உணவை எடுத்துட்டு வந்து பரிமாற தயாரானார்.
சுவேதா தான் வெற்றி பெற்றுவிட்டதாக மனதிற்குள் எண்ணினாள்.
லட்சுமணன் குளித்துவிட்டு வந்து சாப்பிட அமர்ந்தார்.
சுவேதாவும் அமர அகிலா உணவு பரிமாறினார்.
அன்றைய தினம் அமைதியாகவே கழிந்தது.
சில நாட்கள் கழித்து சுவேதா தன் அப்பாவிடம், " என் கிளாஷ்ல ஐ.வி போறாங்கப்பா. நானும் போகனும். ", என்றாள்.
" எத்தனை நாட்கள் போறீங்க? எவ்வளவு ரூபா வேண்டும்? ",என்றார் லட்சுமணன்.
" மூன்று நாட்கள் தான் பா. நாலாயிரம் போதும். ",என்றாள் சுவேதா.
ஐயாயிரம் ரூபாயாக கொடுத்து அனுப்பி வைத்தார்.
பி.இ படித்தவர் என்றால் உங்களுக்கே தெரியும். ஐ.வி என்று சொல்லிட்டு உல்லாசப்பயணம் போறது என்று.
சில கல்லூரியில் ஒரு மணி நேரம் கம்பேனி பார்ப்பாங்க. அப்புறம் இன்சாய் தான்.
சில கல்லூரிகள் கம்பேனிக்கு போகாமலே போலி ஐ.வி சான்றிதழ்கள் தயார் செய்துவிடுகிறார்கள்.
இந்த நடைமுறையெல்லாம் ஒருபுறம் இருக்கட்டும்.
நாம் கதைக்கு வருவோம்.
மூன்று தினங்கள் ஐ.வி முடிந்து வந்த சுவேதா முகம் வறண்டு காணப்பட்டாள்.
அவள் முகத்தை பார்த்ததுமே அகிலாவிற்கு பொறித்தட்டிவிட்டது.
ஒரு தாய் தன் மகள் நடவடிக்கைகள் குறித்து அறியாமலா இருப்பார்?!
இருந்தாலும் தன் பேச்சிற்கு மதிப்பில்லை.
மதிப்பில்லா இடத்தில் பேசாதிருப்பதே நல்லது என்று அமைதியாக இருந்தார்.
மூன்று நாட்கள் கழிந்திருந்தது.
அகிலா சமையலறையில் வேலை காய்கறி நறுக்கிக் கொண்டிருந்தார்.
அங்கு வந்த சுவேதா, " கொண்டாம்மா, நான் நறுக்கிறேன். ",என்றார்.
" வேண்டாம் தாயே. நானே நறுக்கிறேன். நீ நறுக்குனால் அதுக்கு வேற உங்கப்பா திட்டுவாரு. இந்த அடுப்பூதும் பொழப்பு என்னோட போகட்டும். ",என்றார்.
சுவேதாவிற்கு சுரீர் என்றிருந்தது.
பேசாமல் வீட்டிற்குள் சென்று அமர்ந்தாள் சுவேதா.
லட்சுமணன் பணி முடித்து வந்தார்.
சாப்பிட அமர்ந்தவர், " சுவேதா இங்க வா. ",என்று கூப்பிட்டு, " ஐ.வி எப்படி போனது? ",என்று கேட்டார்.
" நல்லாப் போனது அப்பா. ",என்றாள் சுவேதா.
" அப்படியா மா? சரி. அப்புறம் மதியம் ஒரு ஆள் கால் பண்ணாரு. என்கிட்ட என்னய்யா புள்ள வளர்த்துருக்க. இரா குடிகாரி இருப்பா போல. குடித்த ஆண்களைவிட ஓவரா ஆட்டம் போடுறா. அப்படினு ரொம்ப பேசுனாரு. நான் நம்பல மா. என் பொண்ணு அப்படிபட்டவ இல்லனு சொல்லிட்டேன். ",என்று கூறிவிட்டு தன் மகள் முகத்தைப் பார்த்தார்.
" சாரிப்பா. ப்ரண்ட்ஸ் எல்லாம் குடிக்க வச்சுட்டாங்க. இனிமே இப்படி செய்ய மாட்டேன். ",என்று தன் தவறுக்கு மன்னிப்புக் கேட்டாள் சுவேதா.
லட்சுமணன் அமைதியாக இருந்தார்.
உண்மையில் அவர் தன் மகளைப் பற்றி இன்னொருவர் சொன்னதை நம்பவில்லை.
ஆனால் இப்போது தன் மகளே ஒப்புக் கொண்டிருக்கிறார்.
அதோடு அவள் தன் தவறை உணர்ந்து இனி செய்ய மாட்டேன் என்று வாக்குறுதி தந்திருக்கிறாள்.
அப்போது தன் மனைவியை தான் திட்டியது நினைவிற்கு வந்தது. தன் மனைவியிடம் மன்னிப்பு வேண்டினார்.
பெண் சுதந்திரம் என்பது ஆண்கள் செய்யும் தவறுகளை செய்வது அல்ல.
அன்போடு வாழ்க.