காதல் கண்ணாமூச்சி

குழந்தை
ஏதோ கோபத்தில்
காலுதைத்துத்
தலைகுனிந்து
தன்கூட்டுள்...
நத்தை போல்
தனித்து,
தவித்து,
நின்றிருந்தது...

தந்தை வந்தார்
கையில் ஒரு
பொம்மை வைத்திருந்தார்
“இந்தா பார்!” என்றார்

குழந்தை முதலில்
“ம்ஹூம் மாத்தேன், போ!” என்றது
நிமிடங்கள் உருண்டன...
ஓரக்கண்ணால்
பொம்மையைப் பார்த்தது ...
கொடுப்புக்குள் சிரித்தது...
குனிந்ததலை நிமிர்த்தி,
மெள்ள...
மெள்ள... மெள்ள...
கூட்டினின்றும்
வெளியே வந்து...
பொம்மையுடன்
கூடி விளையாட
ஆவலுற்றது போல்...
கையைத்
தாவென்பது போல நீட்டி...
இப்போது...
கலகலவெனச் சிரித்தது...

கணப்பொழுதில்...
பொம்மையைப் பின்னிழுத்துத்
தன்னோடு சேர்த்தணைத்துத்
தந்தை
எங்கோ....
ஏனோ...
விரைந்து
சென்று மறைந்தார்...

சிரிப்பு மாறி
மெல்ல...
முகம் இருண்டு
விகாரமாக...
செய்வதறியாது
ஒருகணம் திகைத்து...
விம்மி...
விசும்பி... பின்,
வெடித்து...
வீரிட்டலறியழுதது...
அவ்வழுகையாற்ற
வகை செய்யத்
தன்பால் யாருமற்றுத்
தனியே...
ஒற்றைப் பனையோ
வென்ன நின்று...
விக்கி விக்கி அழுதது...

கண்ணீரும் வற்றி,
உதடுகள் உவர்க்க,
நா வரள...
கேட்டது:
“தந்தையே!
எனதில்லை
எனுமொன்றைக்
காட்டுவதேன்?
பின்
பறிப்பதேன்?
ஏனிந்தக்
கண்ணாமூச்சி?”
என்று...

மறைபொருளாய்...
எல்லா இடத்திலும்
நீக்கமற நிறைந்த
மறைகளுக்கிறையாம்
தந்தை தான்...
ஆனாலும்,
ஒருகணம்
அதன் கேள்வியின்
காட்டம் தாங்காமல்
திகைத்து...
திணறித்தான்
போனார்...!!
~தமிழ்க்கிழவி(2018)

குறிப்பு: காதலி குழந்தையாகவும், கைக்கெட்டி, வாய்க்கெட்டாப் பழத்தை ஒத்த காதலன் பொம்மையாகவும் உருவகம் செய்யப்பட்டுள்ளது

எழுதியவர் : தமிழ்க்கிழவி (16-Oct-18, 4:05 am)
சேர்த்தது : தமிழ்க்கிழவி
Tanglish : kaadhal kannamoochi
பார்வை : 1475

மேலே