வெளிநாட்டு இந்தியன்

அன்னை மடியைத் தேடுகிறேன்...

என் தேசம் எனும் அன்னை மடியைத் தேடுகிறேன்..

பிழைப்புக்கு பறந்து வந்தேன் தேசம் விட்டு..
பணத்திற்கு ஓடி உழைத்தேன் வேசமிட்டு..

அந்நிய தேசத்தில் அயராது உழைத்தேன்
பணம் ஒன்றே வாழ்க்கை என நினைத்தேன்.

கனவெல்லாம் கை கூடின
என் கண்கள் மட்டும் தினம் வாடின.

இன்று கோடிகளுக்கு சொந்தக்காரன்
நிம்மதியிலோ பிச்சைக்காரன்

தேடித் தவிக்கிறேன் நான் தொலைத்த எனது மண்ணின் வாசனையை..

எனக்கு இங்கும் கூட தீபாவளி உண்டு.
அதை பகிர்ந்து கொள்ள உறவுகள் இல்லை.

எனக்கு இங்கும் கூட நண்பர்கள் உண்டு.
ஆனால் அந்த நட்பில் உண்மைதான் இல்லை..

எனக்கு இங்கும் கூட நம் பாரம்பரிய உணவுகள் உண்டு.
அதில் கலப்படம் இல்லாத பொருளே இல்லை.

பணத்தை சம்பாதித்த நான்
ஆயுளை இழந்து வருகிறேன்.

பந்தங்களும் சொந்தங்களும் வெறும் பழைய கதையாகி போனது

நிம்மதி என்பதே முடிந்த கதையாகிப் போனது.

இன்பத்திற்கும் நிம்மதிக்கும் வித்தியாசம் இன்று நான் உணர்கிறேன்

இன்பத்தில் நிம்மதியில்லை
ஆனால்
நிம்மதியில் முழு இன்பமுண்டு.

பணம் இன்பத்தை கொடுக்கலாம் நிம்மதியைக் கொடுக்காது என்ற உண்மை தனை காலம் கடந்து தான் அறிந்து கொண்டேன்..

ஓட்டு வீடு தரும் சுகம் இந்த மாடி வீட்டில் இல்லாத மாயம் தான் இன்னும் புரியவில்லை..

கிணற்றுத் தண்ணீர் தரும் சுவை இந்த பகட்டுத் தண்ணீரில் ஏன் இல்லை என்ற விடுகதைக்கு பதில் இன்று வரை கிடைக்கவில்லை..

கயிற்றுக் கட்டில் தரும் உறக்கம் இந்த பஞ்சு மெத்தை ஏன் தரவில்லை என்ற காரணமே தெரியவில்லை..


தேடுகிறேன்...

எனது மண்ணின் வாசனையை...

நான் தொலைத்த நிம்மதியை பெற்றிடத் துடிக்கிறேன்..

ஆம்,

என் உடலையாவது பாரத தேசத்தில் புதைத்திடுங்கள்...

நிரந்தரமான நிம்மதி எனக்கு தேவை.

ஏக்கத்துடன்,
வெளிநாடு வாழ் இந்தியன்.

எழுதியவர் : Arun ji (18-Oct-18, 3:00 pm)
சேர்த்தது : அருண் ஜீ
Tanglish : velinaattu inthiyan
பார்வை : 119

மேலே