மறத்தலின் புனிதம்

மறத்தலின் புனிதம்

அர்த்தமுள்ள சங்கடமும்
அர்த்தமற்ற சண்டைகளும்
காட்சிகளாய்
மின்மினிபோல் வந்துபோகும்

விளக்கின் ஒளிச்சூடாய் சில
விருட்சத்தின் எரிதழலாய் சில
கசப்பின் சிந்தைகள்
கல் விட்ட குளத்தின்
நீர்வளைவாய் வந்துபோகும்

மறக்க முயலும் மனதில்
முயற்சியின் முதற்படியாய்
அவையே முட்டி முட்டி
எட்டிப்பார்க்கும்

சில சாலையோர காட்சிகளும்
மாலைநேர தனிமையிலும்
மறக்க என்னும் சிந்தைகளே
மாறி மாறி வந்துபோகும்

நண்பகல் தார்சாலை
இளக்கமாய் சிலநேரம்
மனம்மாறும் பின்
சாயங்கால சாலையாய் மீண்டும்
இறுகும்

கைநழுவும் கயலாய்
இத்துன்பசிந்தயை
விட்டுவிட எத்தனித்து
எத்தனித்து தோற்றபோது

அடிபட்ட அரைநிமிடத்தில்
அழுத கண்களோடு
ஆவிகட்டிக்கொண்ட
என் சுட்டிக்குழந்தையிடம்
கண்டுகொண்டேன்
மறப்பதும்
மறத்தலின் புனிதமும்

எழுதியவர் : இளவல் (18-Oct-18, 4:13 pm)
சேர்த்தது : இளவல்
பார்வை : 77

மேலே