என்னை ஏமாற்றியவருக்கு

மருத்துவமனைத் தொட்டிலில் நான்
முதன்முறையாக அழுதபோது..
கடன் வாங்கிக் கட்டணம்
செலுத்தியதை
மறைத்து..
மகாராணி
பிறந்திருப்பதாகப்
பொய் சொல்லியும்..

நடந்து பழகுகையில்..
கல்தடுக்கிக் கீழே
விழுந்து அழும்போது..
கல்லைக் குச்சியால் தட்டி
அந்தக் கல் அழுவதாகப்
பொய் சொல்லியும்..

இரவுகளில் பேய்க்கனவு கண்டு..
பாதியில் எழுந்து
அழும்போது,,
தோள்களில் இறுக்கமாய்
அணைத்துக் கொண்டு
பேய் ஓடிப்போனதாகப்
பொய்சொல்லியும்..

முதல் நாள் பள்ளியில்
அமர்வதற்கு அழுதபோது..
இரண்டு தினங்களில்,
தானும் பள்ளியில்
சேரப்போவதாகப்
பொய் சொல்லியும்..

குல தெய்வம் கோவிலில்..
காது குத்திக் கொண்டு
அழுதபோது,,
இன்றிலிருந்து
சாமியோடு "டூ "
விட்டுவிட்டதாகப்
பொய் சொல்லியும்..

காய்ச்சலுறும்
தருணங்களில்,,
ஊசி வேண்டாமென
அழும்போது..
மாத்திரை மட்டும்
தரச்சொல்லி
மருத்துவரிடம்
சொல்லியிருப்பதாகப்
பொய் சொல்லியும்..

குறைந்த
மதிப்பெண்ணிற்காக,
அம்மாவிடம் திட்டு
வாங்கிக் கொண்டு
அழுதபோது..
வாத்தியாருக்குப் படிக்கத்
தெரியவில்லை எனப்
பொய் சொல்லியும்..

திருமணம் முடிந்து,,,
புகுந்தவீடு செல்வதற்கு
அழுதபோது..
மகிழ்வோடு
வழியனுப்புவதாகப்
பொய் சொல்லியும்..

என்னை
ஏமாற்றிய
அப்பா...

தோள்மீது பேத்தி ஏறியதும்,,
தொடர்ச்சியாக
பலமுறை இருமிவிட்டு..
துளியளவு தைலத்தில்
எல்லாமே சரியாகிப் போனதாக எனது மகளிடம்,
மீண்டும்
ஏமாற்றத் துவங்குகிறார்...!!

எழுதியவர் : srk2581 (25-Oct-18, 12:42 pm)
பார்வை : 1917

மேலே