பாவை எழில்மிஞ்சு பழகு செந்தமிழ்
தவழ்நதி மேல்பட்டுக் குளிர்ந்தமை இளந்தென்றல்
மலர்சோலை வழிவீசிடும் தினம்புலர் எழில்காலை
வளமாந்தர் வாழ்நகர்இடம் வளைந்தமை வீதிதனில்
படர்கொடிஅலர் வெண்முல்லையென நடந்தாள்ஓர் மெல்லிடையாள்
விரிகடல் திகழ்சிப்பி வாய்மறைவெண் முத்தன்ன
பட்டாடை தனைசுற்றப் பவனிவரும் அவள்மெய்யமை
கார்கூந்தல் கூர்விழிகள் வாய்மொழியா பிறஅவயம்
கண்டநொடி விருப்புற்றுக் கவிமொழிய நான்முயல
ஆங்கே
மாலி சுடர்தன்னில் மறைதிங்க ளெழிலன்ன
கண்டமாது குணம்சிறக்கப் புனைகவிதை சுவைதன்னில்
அகம்வியந்து நிலைமறந்து ஓர்நொடி நான்ரசிக்க
அறிவிற்கு விருந்தாகும் தமிழ் அழகதனில் மையல்கொண்டேன்