நெகிழியால் நிகழும் நிர்மூலம்

பல்லுயிரின் கூட்டமைப்பாய்
பசுமையதன் ஆர்பரிப்பாய்
தொல்லுலகம் கண்டதெல்லாம்
தூய்மையான தேசமன்றோ

நெல்லுறைந்த கழனிகளும்
நீருறைந்த நெடுநிலமும்
அல்லுறைந்த கானகமும்
அதிலுறைந்த தானியமும்

விண்ணுறைந்த கார்முகிலும்
விதையுறைந்த நன்னிலமும்
மண்ணுலகம் கண்டதன்று
மறைந்தழியும் நிலையுமின்று

முன்னை வளர்த்த இயற்கையதை
முழுதாய் கொல்லத் துணிந்தோமே
மண்ணை இன்று மலடாக்கி; பல
மாசுக்குவியலை வளர்த்தோமே

விண்ணை முட்டும் வனமெல்லாம்
வீணாய் வெட்டிக் களைந்தோமே
மண்ணை சுரண்டி நதியெல்லாம்
மறையும் நிலையை கொணர்ந்தோமே




உயிரியல் சிதைவே இல்லாத
நெகிழியை உயிராய் மதித்தோமே - அதை
நிலங்கள் முழுதும் விதைத்தோமே
நம்
உணவுச்சங்கிலி அத்தனைக்கும்
ஒற்றை கூற்றுவன் நெகிழியன்றோ அதை
ஒழித்தால் பிழைக்கும் அவனியன்றோ

போதும் இந்த புதுயுக படைப்பு இதை
புரிந்தால் சிறக்கும் மனிதனின் பிறப்பு
களைந்தெறிவோம் ; கைகொடுப்போம்
நெகிழியற்ற வையமென நெகிழ்ந்திடுவோம்

எழுதியவர் : வேத்தகன் (8-Nov-18, 9:20 pm)
பார்வை : 127

மேலே