தாய்மொழியைப் பேணல் தமிழர்க்கு அணி – அணியறுபது 39

நேரிசை வெண்பா

தாய்மொழியைப் பேணல் தமிழர்க்(கு) அணி;தமது
வாய்மொழியைப் போற்றல் வணிகரணி; - சேய்மொழி
ஈன்றார்க் கணியதுபோல் எவ்வுயிர்க்கும் எவ்வழியும்
ஆன்றோர் மொழியே அணி. 39

- அணியறுபது,
- கவிராஜ பண்டிதர் செகவீர பாண்டியனார்

பொருளுரை:

தமது தாய்மொழியைப் பேணிவரல் தமிழர்க்கு அழகு, தாம் கூறிய வாய் மொழியைக் காப்பாற்றுதல் வணிகர்க்கு அழகு; தம் மக்கள் மழலை மொழியைக் கேட்டல் பெற்றோர்க்கு அழகு; ஆன்ற பெரியோர் மொழி யாவருக்கும் அழகாம்.

தாய் மொழி, வாய் மொழி, சேய் மொழி, ஆன்றோர் மொழி இங்கே தெரிய வந்துள்ளன. தேசங்கள் தோறும் பேசும் மொழிகள் வேறுபட்டிருக்கின்றன. அந்த அந்த நாட்டில் வழங்கி வருகிற மொழிகளை இளமையிலிருந்தே வழக்கமாய்ப் பேசி வருகிற மக்களுக்கு அவை தாய்மொழிகள் ஆகின்றன.

இந்நாட்டில் வழங்கி வருவது தமிழ்மொழி. இம் மொழியை இயல்பாய்ப் பேசி வருபவர் தமிழர்கள் பண்டைக் காலத்திலிருந்த தமிழ் மக்கள் தம் தாய் மொழியை மிகவும் பெருமையாகப் பேணி வந்தனர்.

இக் காலத்தவர் அவ்வாறு பேணாமல் வீணே பிழை பட்டுள்ளனர். வாய் மொழி அளவில் ஆரவாரமாய்ப் பேசுகின்றனர். தமிழின் கலை நிலைகளையும் சுவைகளையும் கருதி நுகராமல் வீண் வழிகளில் இழிந்து வெறியராய் உழல்கின்றனர்.

பிறமொழிக் கலப்பும், ஆங்கிலமும் கலந்தும், வட்டார வழக்கென்று பிறழ்ந்தும் பேசுகின்றனர். நல்ல தமிழில் பள்ளி, கல்லூரிகளில் பாடங்கள் சொல்லித் தந்து மாணவச் செல்வங்களைப் பேசவும், எழுதவும் பழக்க வேண்டும்.

அறுசீர் விருத்தம்
(காய் 4 / மா தேமா)

எங்கள்தமிழ் எங்கள்குறள் என்றெதிரே மாரடிப்பார்;
..இறையும் கல்லார்;
சங்கமுதல் பொங்கியுள்ள தமிழ்க்கலையைச் சிறிதேனும்
..சார்ந்து காணார்;
தங்களிடம் இல்லாத பெருமையெலாம் இருப்பதாகத்
..தருக்கு மீறி
எங்கணுமே இங்கிவர்கள் ஏறிநின்றால் இந்நாட்டுக்(கு)
..உய்தி யுண்டோ? 1

மல்லல்வளம் பெருகிவரும் மாநிலத்தில் மானிடர்கள்
..மாண்பு தோய்ந்து
நல்லவராய் ஓங்கியுயர் சான்றோரை நாளுமே
.. நாடி நாடி
எல்லையிலா ஆவலுடன் எவ்வழியும் தேடுகின்றேன்;
..யாண்டும் காணேன்;
புல்லறிவும் புலைநிலையும் போய்த்தொலைந்து புனிதரென்று
..புகுவார் அம்மா! 2

இந்நாட்டு மக்கள் நிலைமையை எண்ணி எண்ணிக் கண்ணிர் வடித்துக் கவலையுற்றுள்ள இக்கவிகளைக் கருதியுணர்பவர் உள்ளம் உருகி மறுகுவர்.

அறிவு, அடக்கம், ஒழுக்கம், அமைதி முதலிய நீர்மைகள் நிறைந்துள்ள மேலோரை ஆன்றோர் என்றது. இவருடைய அறிவுரைகள் எவர்க்கும் உயர் நலங்களை அருளி வரும், உண்மை அறிவு வளர வளர உயிர் ஒளிபெற்று உயர்ந்து வருகிறது.

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (10-Nov-18, 4:20 pm)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 113

மேலே