சூரசம்ஹாரம் நடந்தேறியது திருச்செந்தூரிலா இலங்கையிலா - ஆதாரபூர்வ விளக்கங்கள்

கந்த புராண நிகழ்வுகளை ஆதார பூர்வமாக பறைசாற்றும் மூல நூல்கள் இரண்டு, வடமொழியில் வியாச மாமுனிவர் இயற்றியருளியுள்ள (பதினெண் புராணங்களுள் ஒன்றான) ஸ்காந்த புராணம், தெய்வத் தமிழ் மொழியில் கச்சியப்ப சிவாச்சாரியார் அருளிச் செய்துள்ள, சைவத் திருமுறைகளுக்கு இணையாகப் போற்றப் பெறும் கந்த புராணம். இனி இப்பதிவின் தலைப்பு தொடர்பான நிகழ்வினை கச்சியப்பரின் நூல்வழி அணுகித் தெளிவுறுவோம்.

சூர சம்ஹாரத்திற்கெனத் திருக்கயிலையிலிருந்து (படைகளுடன்) புறப்படும் ஆறுமுகக் கடவுள் முதலில் 'வடதிசையிலுள்ள கிரௌஞ்ச மலையில்' சூரபத்மனின் சகோதரனான தாரகாசுரனைக் வதம் புரிந்தருளிப் பின் தென்திசை நோக்கி எழுந்தருளி வருகின்றார்.

வழியில் 'திருக்கேதாரம்; காசி; ஸ்ரீசைலம்; திருக்காளத்தி முதலிய பல்வேறு சிவத்தலங்களைத் தரிசித்து வணங்கியவாறு திருச்செந்தூரினை அடைந்தருள்கின்றார். இதனை உற்பத்தி காண்டத்திலுள்ள, வழிநடைப் படலம்; குமாரபுரிப் படலம்; சுரம்புகு படலம்; திருச்செந்தில் படலம்' ஆகியவைகளில் கச்சியப்பர் பதிவு செய்தருள்கின்றார்.

செந்தில் பதியில் படைகளுடன் நிலைகொண்டருளும் குமாரக் கடவுள் சூரபத்மனுக்கு இறுதி வாய்ப்பொன்றினை நல்கியருளத் திருவுளம் பற்றுகின்றார். வீரவாகுவை இலங்கையிலுள்ள சூரனின் தீவான வீரமகேந்திரபுரத்திற்குத் தூது செல்லுமாறு பணித்தருள்கின்றார். வீரவாகு கடல் கடந்து இலங்கையினை அடைந்த நிகழ்வை 'மகேந்திர காண்டத்தின் கந்தமாதனம் செல் படலம், கடல் பாய் படலம், இலங்கை வீழ் படலம், மகேந்திரம் செல் படலம், நகர் புகு படலம்' ஆகியவை ஐயம் திரிபறப் பதிவு செய்கின்றன.

வீரவாகுவின் தூது பலனளிக்கவில்லை. ஆணவத்தின் எல்லையிலிருந்த சூரபத்மனோ கார்த்திகேயக் கடவுளைப் போரில் வெல்வதாகச் சூளுரைக்கின்றான். வீரவாகுத் தேவர் கடல் கடந்து மீண்டும் செந்தில் பதிதனை அடைந்து, சிவகுமரனின் திருப்பாதம் பணிந்துத் தூதின் விவரம் உரைக்கின்றார். வெகுண்டருளும் உமைமைந்தன் செந்தில் பதியினின்றும் நீங்கிப் படைகளுடன் கடல் கடந்து, இலங்கையிலுள்ள வீரமகேந்திரபுரத்தின் எல்லையினை அடைந்தருளி, 'ஹேமகூடம்' எனும் பாசறை ஒன்றினுள் படைகளுடன் தாமும் எழுந்தருளி இருக்கின்றார்.

கந்த புராணம்: யுத்த காண்டம் - ஏமகூடப் படலம்:

இவ்வகை அயில்வேல் அண்ணல் இராயிரம் பூத வெள்ளம்
கவ்வையின் அமைந்து செல்லக் கனைகடல் வரைப்பின் ஏகி
எவ்வமது அடைந்த தொல்லை இலங்கையங் குவடு நீங்கி
மைவரை புரைசூர் மேவு மகேந்திரபுர முன் போந்தான்

நடந்தேறும் உக்கிரமான போரில் சிங்கமுகாசுரன் முதலில் மடிகின்றான், பின்னர் சுப்பிரமணிய சுவாமி சூரனை வென்றருளி, சேவற்கொடியாகவும் மயிலாகவும் ஆட்கொண்டருள்கின்றார். சூரனின் தீவு முழுவதும் கடலில் அமிழ்கின்றது. வெற்றி வேலாயுதக் கடவுள் படைகளுடன் கடல் கடந்து மீண்டும் திருச்செந்தூர் தலத்தினை அடைந்தருள்கின்றார். இரவு முழுவதும் தேவர்கள் செந்தில் வேலவனைப் போற்றுகின்றனர்; அபிஷேகம் புரிகின்றனர்; பூசிக்கின்றனர்; ஆடிப் பாடித் தொழுகின்றனர்.

பொழுது புலர்ந்ததும் சரவணக் கடவுள் அங்கு முன்னமே எழுந்தருளி இருந்த சிவலிங்க மூர்த்தத்தைப் பூசித்து மகிழ்கின்றார். ஆக சூரசம்ஹார நிகழ்வு நடந்தேறியது இலங்கையிலுள்ள வீரமகேந்திரபுரத்திலேயே, எனினும் சம்ஹார வெற்றியைத் தேவர்கள் கொண்டாடிய பரம புண்ணியத் தலமாகத் திகழ்கின்றது திருச்செந்தூர் (சிவ சிவ).



இந்து சனாதன தர்மம் - கௌமாரம்:

எழுதியவர் : (11-Nov-18, 6:46 pm)
பார்வை : 29

சிறந்த கட்டுரைகள்

மேலே