திருச்செந்தூர் செந்தில் வேலவன் கடலிலிருந்து வெளிப்பட்டு அருளிய அதி அற்புத வரலாற்று நிகழ்வு

நாயக்க மன்னர்கள் 'கடல் மார்க்கமாய் பாரத தேசத்திற்குள் நுழையும் போர்ச்சுகீசியருடன்' கடலில் முத்தெடுத்து ஏற்றுமதி செய்வது உட்பட பலதரப்பட்ட வர்த்தகங்களுக்கு ஒப்பந்தமொன்றினை (1639ஆம் ஆண்டில்) மேற்கொள்கின்றனர். அம்முறையிலேயே 1648ஆம் ஆண்டு டச் நாட்டினருடன் மற்றொரு ஒப்பந்தமும் கையெழுத்தாகின்றது. இதனைச் சிறிதும் சகியாத போர்ச்சுகீசியர் டச்சுப் படையினரைக் கடுமையாய்த் தாக்கி விரட்டுகின்றனர்.

அதிகப் படைகளைத் திரட்டி மீண்டும் பாரத தேசம் திரும்பும் டச்சுப் படையினர் போர்ச்சுகீசியரின் பகுதிகளுள் பலவற்றைக் கைப்பற்றியதோடு நில்லாமல் திருச்செந்தூர் திருக்கோயிலையும் கையகப் படுத்துகின்றனர். திருமலை நாயக்கர் எவ்விதம் வலியுறுத்தியும் ஆலயத்திலிருந்து வெளியேற மறுத்து விடுகின்றனர்.

நாயக்க மன்னர் சிறிய படையொன்றினைத் திரட்டி டச்சுப் படையினரை எதிர்த்தும் வெற்றி கிட்டாது போகின்றது. சிறிது காலம் சென்றபின், டச்சுப் படையினர் தாங்கள் கொள்ளையிட்ட பொருட்களோடு, தங்கமென்று கருதி ஸ்ரீஷண்முகர்; ஸ்ரீநடராஜர் ஆகிய மூர்த்திகளின் உற்சவத் திருமேனிகளையும் அபகரித்துக் கொண்டு, கடல் மார்க்கமாய் மீண்டும் தங்கள் பயணத்தினைத் தொடர்கின்றனர்.

செல்லும் வழியில் அம்மூர்த்தங்களை உருக்க முனையும் தருணம், கடல் நீரில் திடீரென்று பெரும் கொந்தளிப்பு ஏற்படுகின்றது. காற்றும் சொல்லொண்ணா வேகம் கொண்டு கடும் சூறாவளியென மாற, கப்பல் மிகக் கடுமையாக ஆட்டம் காணத் துவங்குகின்றது. டச்சுப் படையினர் செய்வதறியாது பதறுகின்றனர். விக்கிரகத் திருமேனிகளை உருக்க முனைந்ததாலேயே இச்சூழல் ஏற்பட்டுள்ளது என்று ஏக மனதாக முடிவெடுத்து, அவற்றினை அக்கணமே கடலினில் சேர்ப்பித்து விடுகின்றனர்.

என்னே வியப்பு! சில கணங்களிலேயே கடல் நீரின் கொந்தளிப்பு முழுவதுமாய்த் தணிந்து, காற்றின் வேகமும் சீர் அடைகின்றது. டச்சுப் படையினர் பெரு வியப்புறுகின்றனர். இந்நிகழ்வு டச்சு நாட்டின் ராணுவக் குறிப்புகளிலும் பதிவு செய்யப் பட்டுள்ளது என்பது குறிப்பிடத் தக்கது. செந்தில் பதி மேவியருளும் சிவகுமரனின் திருவுளக் குறிப்பை யாரே அறியவல்லார்! கருணைக் கடலான அப்பெருமானின் அனுமதியின்றி அண்ட சராசரங்கள் முழுவதிலும் அணுவும் அசைந்துவிட ஒண்ணுமோ!!

சில ஆண்டுகளுக்குப் பின்னர், செந்தூர் ஆலயத்தில் மீண்டும் உற்சவ மூர்த்திகளைச் செய்விக்கும் திருப்பணி தொடங்கப் பெறுகின்றது. இது ஒருபுறமிருக்க, செந்தில் வேலவனிடம் அபரிமிதமான பக்தியும் ஈடுபாடும் கொண்டிருக்கும் வடமலையப்பர் எனும் அடியவரின் கனவினில் ஷண்முகக் கடவுள் கோடி சூர்யப் பிரகாசமாய் எழுந்தருள்கின்றார், கடலுக்குள் உற்சவ மூர்த்திகள் புதையுண்டு இருக்கும் இடத்தைத் அறிவித்தருளி, அவ்விடத்தில் எலுமிச்சையொன்று மிதக்குமென்றும், வானில் கருடப் பறவை தோன்றுமென்றும் அருளிச் செய்கின்றார்.

திருவருட் திறத்தை வியந்து போற்றும் வடமலையப்பர் செந்திலாண்டவன் அருளிய வண்ணமே, குறிப்பிட்ட அவ்விடத்தில் கடலுக்கு அடியினில் நீந்திச் சென்று உற்சவத் திருமேனிகளை வெளிக்கொணர்கின்றார். செந்தூர் வாழ் மக்கள் மீண்டும் அம்மூர்த்திகளைத் செந்தூர் திருக்கோயிலில் பிரதிட்டை செய்வித்து, அகம் குழைந்து, விழி நீர் ஆறாய்ப் பெருக, தங்கள் வாழ்வோடும் ஆன்மாவோடும் கலந்து விட்ட ஸ்ரீஷண்முகக் கடவுளைப் போற்றித் துதித்துப் பிறவிப் பயன் எய்துகின்றனர் (சிவ சிவ).




தேவராஜன் நடராஜன்

எழுதியவர் : (11-Nov-18, 6:37 pm)
பார்வை : 11

சிறந்த கட்டுரைகள்

மேலே