நெஞ்சு பொறுக்குதில்லையே

இன்றைய செய்தித்தாளின் முதற்பக்கம் பார்த்த மாத்திரத்திலேயே என்மனம் கடினமாகி அடுத்தடுத்த பக்கங்களை பார்க்காமலே எழுந்துவிட்டேன்.  அதற்கு காரணம் முதல் பக்கத்தின் செய்தி- தென்னை இழப்பை தாங்க முடியாமல் ஒரத்தநாடு விவசாயி விஷம் குடித்து தற்கொலை..... மற்றொரு விவசாயி மாரடைப்பால் மரணம்....
 
                    சென்னை வெள்ளம், கேரளா வெள்ளம் எல்லாம் கடந்து வந்தப்பின் மரங்களையும் குடிசைகளையும் சாய்த்தவொரு சாதாரண புயலாய்தான் கஜாவைதெரியும் நகரவாசிகளுக்கு.  ஆனால் சென்னை ஒரு சில நாட்களிலும் கேரளா ஒரு சில மாதங்களில் இயல்பு வாழ்க்கைக்கு திரும்பிவிட்டது.  ஆனால் காஜா புயலின் தாக்கம் டெல்டா விவசாயிகளின் ஆதாரத்தையே அழித்துவிட்டது.  விஷம் குடித்து இறந்த விவசாயி சுந்தரராஜ் முப்பது வருடங்களாக வளர்த்துவந்த 400 தென்னை மரங்கள் அடியோடு சாய்ந்தன.  இவரைப் போன்ற விவசாயிகளுக்கு தென்னை ஓர் வாழும் ATM ஆக பணம் தேவைப்படும் போதெல்லாம் இளநீராக, தேங்காயாக, தென்னம்  ஓலையாக, கள்ளாக, நாராக குச்சி கூட சீமாறாக(துடைப்பம்) விலைபோயின.... அத்தகைய முப்பது நாற்பது வருட தென்னந்தோப்புகளை  எத்தனை இழப்பீடு அளித்தாலும் வருடத்தில் புனரமைக்க முடியாது. 

                           சீமந்தம், பிள்ளைப்பேறு, காதுகுத்து போன்ற நிகழ்ச்சிகளெல்லாம் தென்னையை நம்பியே நடந்தன அவர்களுக்கு.  அதனால் தான் பிள்ளைய பெத்தா கண்ணீரு தென்னைய வைத்தா இளநீரு..... பிள்ளை காக்காத தாய தென்னம்பிள்ளை காக்கும் போன்ற சொலவடைகள் புழக்கத்தில் வந்தது.  பிள்ளைக்கு நிகர தென்னையை வளர்த்த  விவசாயிகள் விரக்தியில தன் உயிரை விட துணிந்து விடுகின்றனர்  அல்லது பார்த்த மாத்திரத்தில் துக்கம் தொண்டையோடு நெஞ்சையும் அடைக்க மாரடைப்பால் சாகின்றனர்.   இதுவெல்லாம் வெளிவந்த இறப்புச்செய்தி இன்னும் வெளிவரா இழப்புச்செய்தி எத்தனை எத்தனையோ...? காற்றையும் மழையையும் கடவுளாக வழிபட்ட இனம் இன்று காற்றாலும் மழையாலும் பாழ்பட்டு கிடைக்கிறதை நினைத்தால் நெஞ்சம் பதறுகிறது....

                     என்று விளைநிலங்கள் சாலை அமைக்க கையகப்படுத்தப்பட்டதோ.. அன்றே விவசாயிகளின் பாதிஉயிர் போய்விட்டது. இன்று குற்றுயிரும் குலை உயிருமாய் நடமாடும் விவசாயிகளை இன்னும் என்ன செய்ய காத்திருக்கிறாய் விதியே????

எழுதியவர் : முகில் (23-Nov-18, 2:48 pm)
சேர்த்தது : முகில்
பார்வை : 92

மேலே