என் தாயக விவசாய மக்களுக்கு சமர்ப்பணம்
கஜா என்னும் கருணையற்ற புயல்காற்றே
காரணமின்றி வந்தாயே, மண்ணில்
கண்ணீர் விதைத்துச் சென்றாயே.
ஐயோ என்மக்கள் அழுகின்றதே
மெய்யோ இதுவென்று மாள்கின்றதே.
வேதனை தீர வழியில்லையே
பாதகம் செய்துவிட்ட உன்செயலால்.
வருடங்களாய் வளர்த்த மரங்கள்
வெறும் உடம்பாக வீழ்ந்தனவே
கதிர் பிடித்த பயிர்த்தாள்களெல்லாம்
உதிர் மணியாக சாய்ந்தனவே.
உலகிற்கு உணவீந்த என் தகப்பன்மார்
ஒருவாய் சோற்றுக்கு கையேந்தி நிற்கிறாரே,
அடித்துக்கொண்டு அழவும் தெம்பில்லை,
பிடித்துக்கொண்டு நிற்கவும் மனை கொம்பில்லை.
உடனேயே எழுந்துகொள்ள முடியாதே,
முடிந்துபோன மாபெரும் இழப்பாலே.
ஆறுதல் சொல்லவும் வார்த்தையில்லை,
தேறுதல் கூறியும் பலனில்லை.
மனதைத் தேற்றிக்கொள் மாண்பினமே,
மறுபடி எழுந்து நிற்கப் போராடு.
உன்கரம் விழுந்தால் எனக்கும் உணவில்லை,
இதையெண்ணி எழுந்திடு என் தாயகமே.
எத்தனை கொடுத்தாலும் இழப்பிற்கு ஈடாகாது,
அத்தனை உழைப்பை நீ விதைத்திருந்தாய்.
கதறுவது தவிர வேறொன்றும் அறியேனே,
கவிபாடி கண்ணீரை படைக்கிறேன் உன் பாதத்தில்.!