கவலை
நீ படியிறங்கையில்
எனைத் திரும்பிப் பார்க்கும்
உன் பார்வை எங்கே?
ஆயிரம் பேர் இருந்தாலும்
யாரும் அறியாமல்
என் இடை சீண்டும்
உன் குறும்பு எங்கே?
நான் உறங்கினாலும்
விடிய விடிய
என்னிடம் கதை பேசும்
உன் நட்பு எங்கே?
நான் கேட்டாலும், கேளாவிடினும்
நீ பகிர்ந்து கொள்ளும்
என் உரிமை எங்கே?
என் மகிழ்ச்சியை
விழி வழி வாங்கி
உன் இதயம் சுமக்கும்
ஆனந்தம் எங்கே?
என் இதயம் சுமக்கும்
கவலையை
உன் விழியில்
நீ வாங்கித்
தீர்ப்பாயா?
தொலைந்து போன
தூக்கத்தில்
உனக்கான கனவுகளைத்
தேடுகிறேன்
திருப்பித் தருவாயா?