கவிஞனின் கனவு

#கவிஞனின் கனவு

இமை திறந்த விழிகளிலும்
ஆயிரம் கனவு - கவிஞன்
பார்வை வருடும் இயற்கை எழிலில்
கவிதை வரவு...!

வானம் தொட தேவையில்லை
விமானம் எவையும்
கற்பனையில் பறந்திடுவான்
வெகுமானம் அவையும்..!

நிலவு தேசம் நிமிடமதில்
எட்டியும் விடுவான் - கயிறாய்
மேகம் திரித்து நிலவினிலே
ஊஞ்சல் கட்டுவான்..!

ஆடும்வரை ஆடிக்களித்து
ஆட்டம் போடுவான் - அவன்
அடுத்த நொடியில் மண்ணிறங்கி
கவிதை பாடுவான்...

பாரதியின் கனவினிலே
விடுதலை வேள்வி - கனவு
இன்று வரை பலிக்கவில்லை - வென்ற
விடுதலை தோல்வி..!

சிறு தலைவன் பெருந்தலைவன்
கால்களின் அடி
மண்டியிட்ட ஆளுமையால்
நாட்டில் பேரிடி..!

இரண்டு மட்டும் சாதியென்றான்
பாரதி அந்நாள் - சங்கம்
வளர்க்கிறாரே கனவழித்து
வீதியில் இந்நாள் ..!

ஆணும் பெண்ணும் திருநங்கை
சாதி மூன்றென
காணுகையில் பலித்திடுமே - அவன்
கனவு யாவுமே..!

காமராஜர் போல் தலைவர்
கற்பனை வழி - கண்டு
களிப்பதெல்லாம் கை கண்டார்
கவிபாடியும் கவி..!

பச்சை வயல் பனைதென்னை
காட்சிகளுண்டு - கவிஞன்
கனவினிலே கண்டுகளித்து
வாழ்வதுமுண்டு

எத்தனை நாள் கனவுகளில்
வாழ்ந்து களிப்பது
பெரும் கொடுமை நாட்டினிலே
என்று களைவது..?

தீவினைகள் காணுகையில்
குரலை உயர்த்து
தேவையென்றால் அவையழிக்க
கரங்கள் உயர்த்து..!

ஒரு கரத்தில் ஓசையில்லை
கரங்கள் கூட்டி - நாமும்
களித்திடலாம் நாட்டில் பல
பேய்கள் ஓட்டி..!

கனவுகளில் வாழ்ந்ததெல்லாம்
போதும்... போதும்... - கனவை
நனவாக்கி வாழ்ந்திடலாம்
குரலெழுப்பியே வாரும்..!

#சொ. சாந்தி

எழுதியவர் : சொ.சாந்தி (13-Dec-18, 8:27 am)
சேர்த்தது : C. SHANTHI
Tanglish : KAVIGNANIN kanavu
பார்வை : 121

மேலே