கள்ளினும் காமம் இனிது

ஆர்ப்பரிக்கும் ஆழிப்பேரலையே – விழி
யார்ப் பறிக்கும் அலைகள் அறிவாயோ ?
தீப்பொறிக்குள் திரண்ட கனலே – விரல்
தீண்டலின் தீஞ்சுடர் உணராயோ ?
பூக்குடிக்கும் புள்ளின உயிர்காள்! – இவள்
பூந்தோடுபுரைந்த மதுரம் உணராயோ ?
நாப்படிக்கும் நறுந்தமிழ் மொழியே – எந்தன்
நாயகியின் நளினம் சொல்லாயோ ?

கண்ணிறை காட்சி யானாள் – உளமதில்
பண்ணிறை பாவு மானாள்
எண்ணிறை ஏக்க மானாள் – எனதுடல்
ஒண்ணிறை உதிர மானாள்
நுண்ணிறை காதலம் எழ – எனைத்
தண்ணிறை தடங் கண்ணாலே
இன்னிறை இழைய நோக்கினாள் – எந்தன்
இமைநிறை உறக்கம் தாக்கினாள்

ஆய்ந்தெடுத்த எழிலின் அணங்காய் – உயிர்
பாய்ந்ததோர் அன்பின் கணையாய்
மெய்தொடுத்த உணர்வின் குவையாய் – எனைக்
கொய்ததோர் மானிட மங்காய்...!
வேய்ங்குழல் இசையாய் குரலும் – வண்டு
மொய்குழல் அழகாய்ப் புரளும்
மாய்த்திடும் விதமாய் இடையும் – எனைச்
சாய்திடும் அவளின் நளினம்

செய்தகு சிலையாய் உருவும் – என்னில்
உய்தகு நிலையை அருளும்
உட்புகு உயிராய் மலரும் – மண்ணில்
மேதகு படைப்போ...! இவளும்;
சீர்தகு செவ்விதழ் வரியும் – மென்மை
ஆர்தகு ஆயிழை நடையும்
கூர்தகு வேலிழை விழியும் – கண்டு
சிலிர்த்தது ஊனுடல் முழுதும்

உறைந்திடு உணர்வாய் மனமும் – உனைப்
பிரிந்திட இயலா நிலையும்
கரைந்திட எனையே இழந்தேன் – நீ
பிறந்திட வரமாய் அடைந்தேன்
நிறுத்திட முடியா வரியும் – கவியில்
புகுத்திட அடங்கா நினைவும்
உரைத்திடு மொழியாய் விளங்கும் – வள்ளுவ!
கள்ளினும் காமம் இனிது.

எழுதியவர் : வேத்தகன் (28-Dec-18, 7:49 pm)
சேர்த்தது : வ.கார்த்திக்
பார்வை : 477

மேலே