மழையோ மாதவமோ

மேகத்திரள் மெதுவாய் நகர – குளிர்
தேகத்தினுள் அதுவாய் நுழைய
மோகத்தினுள் இதமாய் உறைய – புது
தாகத்தையே வரவழைத்தாய்
பூவின்திரள் உனக்காய் விரிய – மது
ஆரும்துளி இதழை நனைக்க
பாரின்மடி பிறந்தாய் அமிழ்தாய் – உன்
பேரென்னடி மழையோ! மாதவமோ!

காவின் எழிலாய் விளைந்து – பசுமைக்
காத்துநல் அருளும் புரிந்து
நாவில் சொல்லாய் நுழைந்து – புலவர்
பாவில் உயிராய் மிளிர்ந்து
தேரல் தீஞ்சுவை ஆகி – மழைச்
சாரல் ஊனுடல் மேவி
மாறும் உணர்நிலை தந்து – எனை
மாய்ததே மழைத்துளி இன்று

புல்லின்நுனி பனியாய்த் தவழ்ந்து – சிறு
பூவின்மடி தேனாய்த் திரண்டு
செல்லும்வழி ஓடையிற் புகுந்து – நிலம்
சேரும்வழி ஆரெனப் பெருகி
ஒல்லிசை வழிய அருவி என்றாகி
ஊர்மிசை பருக ஊருணியாகி
கல்லின்வழி நதியாய் ஓடி – பெருங்
கடலின்வழி ஒன்றாய்க் கலந்தாய்


விண்ணில், விளைந்த பொருளில் – நீயோ
எண்ணிலா ஏற்றம் தந்தாய்
கண்ணில், கலந்த காட்சியில் – பல
கணக்கிலா நினைவு தந்தாய்
மண்ணில்சேர மழையாய்ப் பிறந்தாய் – இன்று
என்னில்சேர கவியாய் மலர்ந்தாய்
உன்னில்சேர உறைந்தேன் இனிதாய் – என்
உலகம்வாழ பொதுவாய் பொழிவாய்

எழுதியவர் : வேத்தகன் (31-Dec-18, 11:03 pm)
பார்வை : 261

மேலே