முருகனின் வேலும் வாலியின் மார்பும்

இராமாயணத்திலே சுவை மிகுந்த பாத்திரம் வாலி. சத்திய புருஷனான இராமனைக் குற்றவாளி என்று பலரும் எண்ணவைத்த ஒரு பாத்திரம். அந்த வாலியைப் பற்றிப் பாடும் போது அவன் வேகத்துக்கு முன்னாலே காற்று செல்ல மாட்டாது. முருகப் பெருமானுடைய வேலாயுதம் அவன் மார்பைத் துளைக்கமாட்டாது. ஒரு இடத்திலே அவன் வால் நுளைய முடியாது போகுமானால் அந்த இடத்திலே இராவணனுடைய ஆட்சியதிகாரம் செல்லாது. இராவணனின் குடை போன்ற பெருமைகளும் செல்லுபடியாகாது என்று கம்பன் எழுதி விட்டான்.

கால் செலாது அவன் முன்னர்; கந்தன் வேள்
வேல் செலாது அவன் மார்பில்; வென்றியான்
வால் செலாத வாய் அலது இராவணன்
கோல் செலாது; அவன் குடை செலாது அரோ.

இங்கே கந்தவேள் வேல் செல்லாது அவன் மார்பில் என்ற கம்பனின் கருத்து படித்தவர்கள் கையிலும் சமயவாதிகள் கையிலும் சிக்குண்டு நொந்து நூலாகியது.

கடல் பருகு வெய்வேல்; கைத்தலத்து ஏந்தும் புதல்வனைப் பயந்து தருகுவோம் யாமென்று எல்லாம் வல்ல இறைவன் வேலின் வலிமை பற்றிக் குறிப்பிட்டுவிட்டுத் தான் முருகனைப் பெற்றுக் கொடுத்தான்.

அந்த வேல் ஆயுதத்தைப் பிரயோகம் செய்தால் மூன்று அண்டங்களும் ஐந்து பூதங்களும் அழியும். எல்லாத் தேசத்திலும் இருக்கும் அனைத்து உயிர்களும் அழியும். வானத்திலே இருக்கின்ற தேவர்கள் மேல் செலுத்தினாலும் அவர்களின் வலிமையையம் வரங்களையும் சிதைத்து உயிரையும் எடுத்து விடும். எந்த ஆயுத்துக்கும் மேற்பட்ட தலைமை ஆயுதம் இது என்று சொல்லி இறைவன் கொடுத்த வேலை வாலியின் மார்பிலே நுளையாது என்று சொல்லிவிட்டாரே கம்பர் என்ற ஆதங்கம் முருக பக்தர்களுக்கு.

ஆயதற் பின்னர் ஏவில் மூன்று அண்டத்து
ஐம்பெரும் பூதமும் அடுவ
தேயபல் உயிரும் ஒருதலை முடிப்ப
தேவர்மேல் விடுக்கினும் அவர்தம்
மா இரும் திறலும் வரங்களம் சிந்தி
மன் உயிர் உண்பது எப்படைக்கும்
நாயகமாவது ஒருதனிச் சுடர்வேல் நல்கியே
மதலை கைக் கொடுத்தான்.
(கந்தப்புராணம் உற்பத்தியா படலம் விடைபெறு காண்டம்)

பின்னாளில் இராமன் மறைந்து நின்று செலுத்திய அம்பு வாலியின் மார்பில் புகுந்தது என்றால் கந்த வேள் வேல் அவன் மார்பில் நுளையாது என்று கம்பன் ஏன் சொல்ல வேண்டும். முருகன் வேல் வீரமற்றதா. என்ன இருந்தாலும் வைணவத் தடிப்பு கம்பனுக்கு என்று கொதித்துப் போனார்கள் சமய வாதிகள்.

இவர்கள் எல்லாரும் ஒன்றை மறந்து விடுகின்றார்கள். இராம இலட்சுமணரும் வாலி சுக்கிரீவன் அனுமன் ஆகியோரும் எப்படிப் பிறந்தார்கள் என்பதை இவர்கள் எண்ணிப் பார்ப்பதில்லை.

தேவலோக இந்திரன் தான் இராவணனால் படும் துன்பத்தை திருமாலிடம் கூறிக் கவலைப்பட்ட போது இந்திரனே நீ கவலைப்படாதே நான் தசரதனுக்கு மகனாக இராமனாகப் போய்ப் பிறக்கின்றேன். இலக்குமி சீதையாகப் பிறப்பாள். ஆதிசேடன் இலட்சுமணனாகப் பிறப்பான். எனது சங்கு பரதனாகவும் சக்கரம் சத்துருக்கனாகவும் அயோத்திலே பிறப்பார்கள். இந்திரனே நீ வாலியாகப் போய்ப் பிற. சூரியன் சுக்கிரீவன் ஆகவும் வாயுதேவன் அனுமன் ஆகவும் மற்றத் தேவர்கள் குரங்குகளாகவும் உருவெடுத்து கிடகிந்தையிலே எனக்காகக் காத்திருங்கள் என்று கூறினார்.

வான் உளோர் அனைவரும் வானரங்கள் ஆய்க
கானினும் வரையினும் கடி தடத்தினும்
சேனையோடு அவதரித்திடுமின் சென்று என
ஆனனம் மலர்ந்தனன் அருளின் ஆழியான்.

(கம்பராமாயணம் பால காண்டம் திரு அவதாரப் படலம்)

திருமாலின் கட்டளைப்படி இந்திரன் வாலியாக வந்து கிட்கிந்தையிலே பிறந்தான். இந்தச் செய்திகளை எல்லாம் அறிந்தவன் கம்பன். அவன் திருமாலை முதற் கடவுளாக ஏற்றுக் கொண்டாலும் சைவ மக்களின் நம்பிக்கைகளையும் தூக்கிப் பிடித்தவன். சிவனை எப்போதும் இராமாயணத்தில் புகழ்ந்து பேசியவன்.

இந்திரனைக் காப்பாற்றச் சொல்லி சிவன் கொடுத்த வேல் இந்திரனே வந்து வாலியாகப் பிறந்ததினால் அவன் மார்பிலும் செல்லாது அவனை அழிக்காது என்று பாடினான். ஆனால் இதை எம்மவர்கள் உணர்ந்து கொண்டதாகத் தெரியவில்லை. கம்பராமாயன உரைகாரர்கள் கூட இந்த உண்மையை எங்குமே குறித்துக் காட்டியதாகவும் தெரியவில்லை. கந்தவேள் வேல் செல்லாது என்றால் ஏன் செல்லாது என்று இவர்கள் எண்ணியிருந்தால் பிரச்சனை இருந்திருக்காது.

கம்பராமாயண இலக்கியத்துக்குள்ளே வைணவ சைவ உயர்வு தாழ்வு பார்ப்பவர்கள் ஒன்றைக் தெரிந்து கொள்ள வேண்டும். இராமன் சுக்கிரீவன் அநுமன் துணை பெற்று அவர்களிடம் படையுதவி பெற்று அணைகட்டி பலநாட்கள் போராடி வீழ்த்திய இராவணனை அவன் கயிலை மலையை அசைத்த போது சிவபெருமான் தன் கால் பெருவிரலாலே தப்ப முடியாமல் பிடித்துக் கொண்டார். இராவணன் அழுத இடம் அது ஒன்றுதான். இதையும் சொன்னவன் கம்பன் தான்!

————————–
நந்தவனம்
இரா. சம்பந்தனின் இலக்கிய மேடை
11.11.2018

எழுதியவர் : (17-Jan-19, 10:08 am)
பார்வை : 45

புதிய படைப்புகள்

மேலே