உந்தன் கண்கள்

கண்ணே உன் கண்ணின் எழிலுக்கு
ஓர் கவிதைப் பாடவந்த கவிஞன் நான்
அந்த கண்ணின் எழிலில் ஸ்தம்பித்த நான்
எப்படி கவிதையை துவங்குவதோ என்றிருக்க
நான் நின்றுகொண்டிருந்த கரும்பு தோட்டத்தில்
முற்றின கருநீல கரும்புகள் சற்றே காற்றில்
வில்போல் வளைந்து களிநடம் புரிதல் கண்டேன்
உந்தன் கண்களின் மேல் நீண்டு வளைந்த
கருத்த புருவங்கள் கண்டேனே , அவை
வில்போல் வளைந்த அக்கரும்புபோல் காட்சி
தந்தனவே , அப்படியே அப்புருவத்திற்கு கீழ்
விழிகளைக் காக்கும் இமைகள் கண்டேன்
நீ எழிலாய் இமைகளை மூடி திறக்கையில்
அவை இறக்கைகள் விரித்து மடிக்கும்
பட்டாம் பூச்சிகள்போல் காட்சிதந்தனவே
இதோ உந்தன் காந்த விழிகளைக் கண்டேனே
இல்லை இல்லை இரு கெண்டை அங்கு
உந்தன் தந்தம்போல் ஜொலிக்கும் முகத்தில்
நீந்துகின்றதுபோல் கண்டேனே , அதில்
ஒளிபடைத்த கருநீல விழிகள் அக்கெண்டையை
மலரோவென்று நினைத்து தேன் உண்ண வந்த
கருநீல வண்டுகள் போல் அல்லவா காண்கின்றேன்
இப்படி எழிலெல்லாம் ஒருங்கே பெற்றதாலோ
பெண்ணே உன்னை மீனாட்சி என்று உந்தன்
பெற்றோர் பெயர்வைத்து அழைக்கின்றனரோ

எழுதியவர் : வாசவன்-தமிழ்பித்தன்-வாசு (23-Jan-19, 11:18 am)
Tanglish : unthan kangal
பார்வை : 641

மேலே