எங்கே குடியரசு

#எங்கே குடியரசு..?

மன்னர்கள் ஆண்ட காலங்களுக்கு
முடிவுரை எழுதியிருந்தது
இந்தக் குடியரசு..!

குடியரசின் முகவுரைகளில் எல்லாம்
மக்களின் முகங்கள் மலர்ந்திருந்தது மக்களாட்சியில்.!

நியாயங்கள் நிலை நிறுத்தப்பட்டு
உரிமைத் தோட்டங்கள்
பரிசளிக்கப்பட்டது மக்களுக்காய்.!

பிணம் பல கண்ட பின்னர்
மணம் வீசி
களிப்புற்றிருந்தது பாரதம்..!

மதம் பிடித்த வெள்ளை யானைகளை
வதம் செய்து
அடக்கியிருந்தது குடியரசு..!

ஜெய் ஹிந்த் கோஷங்களும்
வந்தே மாதர கோஷங்களும்
வான் பிளக்க,
சுதந்திரம் கூட சொந்தமானது..!

குடியரசு மற்றும்
சுதந்திரங்களின் வரலாறுகள்
அரசியல் கரையான்களின்
அரிப்பினில் இன்று
உளுத்துக் கொண்டிருப்பதை
வேடிக்கைதான் காண்கிறோம்..!

எதிர்த்தும் உரத்தும்
குரல் கொடுப்போன் கழுத்தினில்
சிரம் காணாமல் போவதால்
சீக்காளியாகித்தான் போனது
குடியரசு..!

வந்தே மாதரம் போய்
வந்தே ஏமாத்துறோம் ஆகி
கோஷமிடாமலேயே கொள்ளை போனது குடியரசு..!

வெள்ளையனிடம் தப்பி
கொள்ளையனிடத்தில்
பேய்களிடத்தில் தப்பி
எமனிடத்தில்..!

எனக்கேன் வம்பு
என்றிருக்கும் வரை
காணாமல்தான் போயிருக்கும்
குடியரசு..!

#சொ.சாந்தி

எழுதியவர் : சொ.சாந்தி (1-Feb-19, 12:23 pm)
சேர்த்தது : C. SHANTHI
Tanglish : engae kudiyarasu
பார்வை : 67

மேலே