குற்றங்களின் மீள்பார்வை
குற்றங்களை பதியும் அவன்
பெயர்களில் நம்பிக்கையின்றி
செய்திகளுடன் அலைகிறான்.
பல தொகுப்புகள் கொண்ட
அவனது அலமாரியில்
செம்பழுப்பு காகிதங்கள்
காற்றாடிய பொழுதுகளில்
அவ்வப்போது மனிதர்கள்
உதிர்வதுண்டு குற்றங்களற்று.
கோப்புகளில் அவன் மசி
ரணங்கள் மீதூறும் புழுவென
நிகழ்வு தொலைத்து அலைகிறது.
பொறித்த முட்டைகளில்
பசிக்குறிய கனவின் அந்தராத்மா
பேசிக்கொண்டே கலைகின்றன.
விடுபட்ட மனிதரின்
தொங்கும் நாக்குகளில்
வார்த்தைகளை விரட்டிக்கொண்டு
கிளை தாவும் மந்தியின் கையில்
அவனின் இன்னொரு பதிவு.