பெறுதலை விட கொடுப்பதே மேலானது

நாம் யாரும் பிறரிடம் இருந்து பெற்றுக் கொள்வதை விரும்புவதில்லை. கொடுப்பதையே மிக கௌரவமாக கருதுகின்றோம். ஆனால் சில நேரங்களில் கொடுப்பதை மறந்து விட்டு பெற்றே ஆக வேண்டுமென பிடிவாதமாய் இருக்கின்றோம். நான் இப்போது சொல்வது பொருட்களை அல்ல. மாறாக மனித மனதின் நிலையான தேடலான அன்பை பற்றியே. தனக்கு அன்பு கிடைக்க வேண்டும் என்பதற்காக ஒரு பொருளையோ உயிரையோ நேசிப்பது தூய்மையான அன்பு அல்ல. நான் கொடுக்கிறேன்;மீண்டும் எனக்கு கிடைக்கும் அல்லது கிடைக்க வேண்டும் என்ற எண்ணத்தில் அன்பு செலுத்துவது சுய நலத்தின் வெளிப்பாடு.

நிலையாமை தத்துவம் நாம் அனைவரும் அறிந்தது தான். இவ்வுலகில் எப்பொருளும் நிலைப்பதில்லை, இருந்தும் சில உறவுகளை நிலைக்க வைக்கவே அன்பெனும் ஆயுதம் ஏந்துகிறோம். ஆனாலும் அதிலும் சில சிக்கல்கள், "நான் நேசம் கொண்டது உன் அன்பை பெற வேண்டும் என்று தான். உனக்கு என் அன்பை தருவதற்கல்ல. எந்நேரமும் என் அன்பை காட்ட என்னால் முடியாது " என்று எம்மில் பலர் நினைக்கிறார்கள், சொல்கிறார்கள் ஒரு படி மேலே போய் அதை செயலிலும் காட்டுகிறார்கள்.

அன்பு, உறவு முறைகளுக்கேற்ப வேறுபடும். இரத்த உறவுகளுக்கிடையில் மேற்குறிப்பிட்டவாறான பிரச்சனைகள் எழுவது குறைவு தான். வாழ்வின் ஒவ்வொரு கட்டத்திலும் நாம் ஏற்படுத்தும் உறவுகளில் இந்த அன்பின் வெளிப்பாடு வேறுபடும்.உதாரணமாக, இரு வேறுபட்ட சூழ்நிலை கொண்ட இருவருக்கிடையில் அறிவு, அழகு, ஆற்றல் போன்ற பண்புகளின் ஒற்றுமை காரணமாக ஏற்பட்ட அன்பு இன்று போல் என்றும் நிலைக்குமா என்பது கேள்விக்குறியே. காரணம் யாதெனில் ஆரம்பத்தில் சொன்னது போல "பெறுதலை விட கொடுப்பதே மேலானது " என்ற எண்ணம் அவர்களுக்குள் உருவாகவில்லை. எதிர்பார்ப்பின்றிய அன்பை கொடுப்பது எல்லோராலும் முடியாது.
அவ்வாறு கொடுக்க முடியுமாக இருந்தால் கட்டுக்குள் அடங்காமல் பெரு நதியாய் ஓடும் அன்பு

எழுதியவர் : பர்வின்.ஹமீட் (13-Feb-19, 6:14 pm)
சேர்த்தது : பர்வின் ஹமீட்
பார்வை : 694

மேலே