உருவநலன் அமைந்தும் குணத்தழகு இன்றேல் குவிந்தவழகு எல்லாம் பிணத்தழகு ஆகும் - அழகு, தருமதீபிகை 78
நேரிசை வெண்பா
உருவநலன் எல்லாம் ஒருங்கே அமைந்து
பருவ அழகு படினும் - மருவும்
குணத்தழ(கு) இன்றேல் குவிந்தவழ(கு) எல்லாம்
பிணத்தழ(கு) ஆகும் பிறழ்ந்து. 78
- அழகு, தருமதீபிகை,
- கவிராஜ பண்டிதர் ஜெகவீர பாண்டியனார்
பொருளுரை:
அங்க அமைப்புகள் யாவும் நன்கு அமைந்து, சிறந்த அழகு ஒருங்கே நிறைந்திருப்பினும் நல்ல குணங்கள் இல்லையானால் அவ்வழகுகளெல்லாம் இழிவாக இகழ்ந்து தள்ளப்படும் என்கிறார் கவிராஜ பண்டிதர். இப்பாடல், உயிர் அழகின் உயர்வு கூறுகின்றது.
முகம், கண் மூக்கு, காது, வாய், கழுத்து, கை கால், தோள் முதலிய அவயவங்கள் இனிதமைந்திருக்கும் நலங்களை உருவ நலன் என்றது.
பருவ அழகு - இளமை நலம் சுரந்த விழுமிய எழில், படினும் - பொருந்தியிருப்பினும்.
உள்ளப் பண்புகளைக் குணம் என்றது. அருள், ஈகை, அறிவு, சீலம், வாய்மை முதலிய இனிய நீர்மைகள் இங்கே குணம் என வந்தன. இக்குணங்கள் உயிரினங்களை மகிமைப்படுத்திப் பேரழகு செய்து வருதலின் குணத்தழகு என நேர்ந்தது.
மலர்க்கு மணம்போல் குணம் உயிர்க்கு மணமாய் ஒளி சுரந்து மிளிர்கின்றது. உயர்ந்த குணநலம் இலனேல் மனிதன் மணம் இல்லாத மலராய் இழிந்து படுகின்றான்.
“Beauty without grace is the hook without the bait” - Emerson
’உள்ளப் பண்பில்லாத அழகு இரையற்ற தூண்டில் முள் போல் வறிதே இழிந்து படுகின்றது' என எமர்சன் என்னும் அமெரிக்கப் பெரும் புலவர் கூறியுள்ளார்.
புறத்தோற்றம் எவ்வளவு சிறந்திருந்தாலும் அகத்தே நல்ல இயல்பு இல்லையாயின் உலகம் அதனை மதியாது; ஆகவே அது மதிப்பிழந்து படும்.
குணத்தழ(கு) இன்றேல் குவிந்தவழ(கு) எல்லாம்
பிணத்தழ(கு) ஆகும் பிறழ்ந்து’
என்றது, குணத்தின் அழகு இல்லையென்றால், அது செத்த அழகு என உய்த்துணர வந்தது.
குணம் உயிரின் மணமாய் ஒளிர்கின்றது; அழகு உடலில் இனிதாய் மிளிர்கின்றது. குணம் இல்லையேல் உயிர் அற்ற உடல்போல் அழகு பழியுற்று இழியும்.
உள்ளே குணநலம் இல்லாத மனிதன் வெளியே ஒர் அழகனாய்த் தலைநீட்டி வருவது உயிர் நீங்கிய சவத்தை நீராட்டி அலங்கரித்து வைத்தது போல்வதோர் பாராட்டாம்.
அரிய குண நலங்கள் மருவிய பொழுதுதான் உயிர் பெற்ற உடலாய் அழகு ஒளிபெற்று விளங்கும். இனிய நீர்மையே புனித அழகு என்பது கருத்து.