வீழமைந்த ஆல்போல் விறல்மகனைப் பெற்றகுடி ஓங்கி உயரும் - மக்கட் பேறு, தருமதீபிகை 70

நேரிசை வெண்பா

வீழமைந்த ஆல்போல் விறல்மகனைப் பெற்றகுடி
ஊழமைந்(து) ஓங்கி உயருமால் - கூழைவீழ்
பெற்ற மரம்போலப் பேதைமகன் உற்றகுடி
பற்றற்(று) அழியும் பரிந்து. 70

- மக்கட் பேறு, தருமதீபிகை,
- கவிராஜ பண்டிதர் ஜெகவீர பாண்டியனார்

பொருளுரை:

நல்ல ஆண் மகனைப் பெற்ற குடி விழுது படிந்த ஆலமரம் போல் தழைத்துச் செழித்து நிலைத்து விளங்கும்; பேதை மகனைப் பயந்த குடி கூழை வீழ் உடையது போல் தாழ்வடைந்து வீழும் என்கிறார் கவிராஜ பண்டிதர். வாழ்வும் வீழ்வும் வருமூலம் குறித்தது.

குடிதாங்கியுள்ள குலமகனையும், மடிதாங்கி நின்ற இழிமகனையும் இணைத்துக் கூறிய படியிது.

விறல் – ஆண்மைத் திறம்.

ஆலின் கிளைகளிலிருந்து கிளைத்து வந்து பூமியில் ஊன்றித் தாங்கு தூண் போல் பாங்கு அமைந்து நிற்கும் தூங்கு கொடிக்கு வீழ் என்று பெயர். அயலே தாழ்ந்து வந்து வீழ்ந்திருத்தலால் வீழ் என நின்றது.

இது, அடிமரத்திற்கு ஆதாரமாய் உறுதி செய்து நிற்றலால் குடிதாங்கும் குலமகனுக்கு உவமையாய் வந்தது. கிளை படர்ந்து தழை செறிந்து இனிய நிழலுதவிப் பலர்க்கும் இதம் புரிந்து வருதல் கருதி குடியை ஆல மரத்தோடு ஒப்ப வைத்தது.

தன்னிடமிருந்து தோன்றிய விழுது ஆலுக்கு உறுதி செய்துள்ளது போல் ஒரு குடியில் பிறந்த மகன் அதனை எவ்வழியும் தளராமல் தாங்கி நிலைபெறச் செய்ய வேண்டும் என்பதாம்.

தோன்றிய குடிக்குத் தோன்றல் ஆற்றும் ஆன்ற உரிமையை ஊன்றிய கொடியால் உணர்த்த நேர்ந்தது.

வினை ஆற்றல்களுடையனாய் யாண்டும் மூண்டு முயன்று வேண்டிய நலங்களை விளைத்தருளும் ஆண்டகையை விறல் மகன் என்றது. விறல் கரும வீரன் என்பதைக் காட்டி நின்றது.

அம்மேன்மையாளனைப் பெற்ற குடி மேலான நிலைமையை அடைந்து ஞாலம் போற்ற விளங்குமாதலால் ’ஊழ் அமைந்து ஓங்கி உயரும்’ என வந்தது.

ஊழ் - ஒழுங்கு முறைமை.

அக்குடி படியில் உள்ளார்க்கு ஒரு மேல்வரிச் சட்டமாய் நெறிமுறையான பல படிப்பினைகளை விளைத்தருளும்.

நீளமாய் நீண்டு தாள் ஊன்றி நிற்கும் வீழ்போன்ற மகனது ஆள் வினை நிலைமையை அறிந்தோம்; இனி பாழ் மகனது கீழ்மையையும் பார்க்க நேர்கின்றோம்.

நீளமாய் நிலம் தோயாமல் இடையே தேய்ந்து புடை தொங்கி நிற்பது கூழை வீழ் எனப்படும். மூல நிலையமான ஆலமரத்திற்கு யாதொரு ஆதரவும் ஆற்றாமல் வெறும் சுமையாய் வீணே கிளைத்து வீங்கி நிற்குமாதலால் தான் பிறந்த குடியைப் பேணாமையோடு அதற்கு ஒரு பாரமாய் முளைத்து ஈனம் விளைத்துள்ள பேதை மகனுக்கு இங்கே அது உவமையாய் வந்தது.

ஒரு தொழிலுமின்றி வறிதே உண்டு மடி கொண்டு திரியும் மதிகேடனை பேதை மகன் என்றது.

'கூழை வீழ் பெற்ற மரம்போலப் பேதை மகன் உற்ற குடி பற்று அற்று அழியும்' என்றது நல்ல குலமகனைப் பெறாத குடி அல்லல் பல அடைந்து அலமரும் என்பதை ஓர் உவமை காட்டி உணர்த்தியபடியாம்.

பற்று - ஆதரவு. பரிந்து - வருந்தி.

பிறந்த குடியைப் பேணாதவன் இழிந்த மகனாய் யாண்டும் இழிக்கப் படுவானாதலால், பிறந்த குடியை உரிமையுடன் இனிது பேணிச் சிறந்த குலமகனாய் உயர்ந்து கொள்க என்பது கருத்து.

இன்னிசை வெண்பா

சிதலை தினப்பட்ட ஆல மரத்தை
மதலையாய் மற்றதன் வீழூன்றி யாங்குக்
குதலைமை தந்தைகட் டோன்றிற்றான் பெற்ற
புதல்வன் மறைப்பக் கெடும். 197 தாளாண்மை, நாலடியார்

சந்தக் கலி விருத்தம்
(காய் காய் காய் மா)

498
தூங்குசிறை வாவலுறை தொன்மரங்கள் என்ன
ஓங்குகுலம் நையவதன் உட்பிறந்த வீரர்
தாங்கல்கடன் ஆகும்தலை சாய்க்கவரு தீச்சொல்
நீங்கல்மட வார்கள்கடன் என்றெழுந்து போந்தான். 6 காந்தருவ தத்தையார் இலம்பகம் - சீவகசிந்தாமணி

அறுசீர் விருத்தம்
(விளம் மா தேமா அரையடிக்கு)

நைந்தடி யற்ற ஆலம்
..நடுங்கிவீழ் கின்ற தென்று
வந்தவீழ் ஊன்றி வீழா
..வகைநிலை விளக்கு மாபோல்
மைந்தர்கள் தமக்கு நல்ல
..அறிவினால் மகிழ்ந்து சேர்ந்து
தந்தையைத் தளரா வண்ணம்
..தாங்குவர் தவத்தின் என்றான். - ஒட்டக் கூத்தர், உத்திரகாண்டம், இராமாயணம்

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (23-Feb-19, 11:06 am)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 38

சிறந்த கட்டுரைகள்

மேலே