அழகமையப் பெற்றார் இனியராய் வாழ்ந்து நல்லாறு காண்பர் நயந்து - அழகு, தருமதீபிகை 80

நேரிசை வெண்பா

அகத்தும் புறத்தும் அழகமையப் பெற்றார்
இகத்தும் பரத்தும் இறையாய் - மகத்துவங்கள்
எல்லாம்கை எய்தி இனியராய் வாழ்ந்துவந்து
நல்லாறு காண்பர் நயந்து. 80

- அழகு, தருமதீபிகை,
- கவிராஜ பண்டிதர் ஜெகவீர பாண்டியனார்

பொருளுரை:

அகம், புறம் என்னும் இருவகை நிலையிலும் அழகு அமையப் பெற்றவர் இகத்திலும் பரத்திலும் இறைவராகி மகத்துவங்கள் பல கண்டு கருதிய யாவும் கைக்கொண்டு உறுதி மிகப் பெறுவர் என்கிறார் கவிராஜ பண்டிதர். அழகின் வகையும் தொகையும் வரவும் கூறிய படியிது.

உள்ளத்தே நல்ல இயல்புகளை எண்ணி யாண்டும் தண்ணளி தழைத்து வருதலே அகத்து அழகு அமைதலாகும்,

உலகத்தே அரிய செயல்களைச் செய்து எங்கும் இனியனாய் ஒழுகுதல் புறத்து அழகு அமைதலாகும்.

தன் கருத்தும் கருமமும் இங்ஙனம் நல்லனவாயின் மனிதன் புண்ணியவானாய்ப் புனிதம் மிகப் பெறுவான்; பெறவே இம்மை மறுமை என்னும் இருமையிலும் அவனுக்குத் தலைமையான உரிமைகள் உளவாகும்.

‘இகத்தும் பரத்தும் இறை; என்றது எய்தவரும் பதவிகளின் இயல்புணர வந்தது.

இறை – அாசன், நல் ஆறு – முத்தி நெறி.

அழகிய எண்ணங்களும் செயல்களும் விழுமிய பலன்களை உதவி வியத்தகு மேன்மைகளை விளைந்தருளுமாதலால் உள்ளும் புறனும் புனிதனாய் மனிதன் ஒழுகி வர வேண்டும். உலகம் வியந்து போற்றத் தக்க அற்புத நலங்களை மகத்துவங்கள் என்றது.

எவரும் விழைந்து நோக்கி மகிழ்ந்து வருதலால் இனிய செயல்கள் இங்கே அழகு என வந்தன.

Handsome is that handsome does; - Goldsmith

’அழகிய செயல்களே அழகாம்' என மேல்நாட்டுப் புலவரும் கூறியுள்ளனர்.

உருவ அழகோடு உள்ளமும் அழகனாய் நல்வினைகள் புரிந்துவரின் யாவரும் விழையும் பேரெழிலழனாய் மனிதன் பேரின்ப நலனைப் பெறுவான்.

மனிதப் பிறவி மிகவும் சிறந்தது; அருமையும் பெருமையும் உடையது; எளிதில் எய்த முடியாதது; இத்தகைய அழகிய பிறப்பை அடைந்துள்ள நீ அவல வினைகள் புரிந்து அவலட்சணமாய் அழிந்து போகாமல் அகமும் புறமும் புனிதனாய் மனித வுலகம் மகிழ இனிது உயர்க என்கிறார் கவிராஜ பண்டிதர்.

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (23-Feb-19, 11:10 am)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 39

மேலே