பர்தாவும் ஒஸரியும்
சந்தித்த வேளை
சிந்தனையோடு
மெல்லிய புன்னகை மாத்திரம்
பரிமாற்றமானது
சிறு நேர இடைவெளியில்
கரம் பிடித்து பேசும் அளவு
தோழமை உணர்வு தந்த
அன்பின் வழி வந்த கேண்மை
மனம் புரிந்து
மதம் புரிந்து
கொள்கைகளை பரிமாறி
நடுநிலை ஏற்றோம்
மாற்றான் தாய்
பிள்ளைகள் தான்
மனதால் ஒட்டிப் பிறந்த
இரட்டையர் நாம்.
நம்மோடு தான் இத்துணை
புரிதல்கள்
மரியாதைக்குரிய
உறவாடல்கள்
பின் ஏனம்மா
அடிக்கடி மதம் கொண்ட
படையெடுப்புக்கள்
ஆறாத காயங்களாய்
இடித்து நாசமாக்கிய
பள்ளி உடைப்புக்கள்
காரசாரமான வாதங்களோடு
கடை அடைப்புக்கள்
தீயோடு சாம்பலாகிய
உடல்கள்
வேரோடு புதையுண்ட
எம் விழுதுகள்.
பிரித்து ஆளும்
வியாபாரம்
சிந்தையிலும்
முழுத் துவேசம்
முட்டி மோதும்
முரண்பாடுகள்
இருந்தும் நம்மோடு
உடன்பாடுகள்
வெட்டி வெட்டி
விட்ட போதும்
நாம் ஒட்டி நிற்கும்
உடன் பிறப்புகள்
சங்கடங்கள் கடந்து
சமாதானப் பேச்சு வார்த்தை
பேசிக்கொள்வது நம்
பர்தாவும் ஒஸரியும்.